அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் "திரு அருட்பா' ஆனதால், அதில் திருவும் இருக்கிறது; அருளும் இருக்கிறது. இரண்டும் இணைந்து திருவருள் (அம்மை-அப்பர்) ஆனது. அவற்றைப் படிப்போர்க்கு அவ்விரண்டும் திருவாகிய இறைவனும், அருளாகிய இறைவியுமாகத் திருவருள் புரிகிறது' என்பர் சான்றோர்.
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'யான சிவபரம்பொருளை தம் அன்பால் அரவணைத்து அவரோடு ஜோதியில் இரண்டறக் கலந்து, மரணமில்லாப்
பெருவாழ்வு பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார்.
சைவ சமயம் தாசமார்க்கம் (தொண்டன்-அடிமை), சத்புத்திரமார்க்கம், (மகன்) சக மார்க்கம் (தோழன்), சன்மார்க்கம் (சீடன்) ஆகிய நான்கு நெறிகளில் இறைவனை வழிபடும் வழியைக் கூறியுள்ளது.
உடலுக்குத் தாய்-தந்தையர் நம்மைப் பெற்றோர். ஆனால், உயிருக்கு (ஆன்மா) தாயும் தந்தையுமாக இருப்பவன் இறைவன் ஒருவனே! அவனே சிவபரம்பொருள். அவனே அம்மையப்பனாக - சிவசக்தி சொரூபனாக இருந்து உயிர்களை உய்விக்கிறான்.
வள்ளலாரும், இறை-உயிரின் உறவு நிலைகளை குரு, தாய், தந்தை, நட்பு, துணை, அம்மான், நாயகன், தலைவன், ஆருயிர்த் தலைவன் என்று பலவாறு பாடியுள்ளார். அவற்றுள் முக்கியமான உறவு இறைவனைத் தந்தையாகக் கருதும் முறை.
இறைவனைத் தந்தையாக நோக்கும் போக்கை சமயத்தின் தொடக்கமாகக் கருதுவர்.
""1. பெற்றெடுத்த தந்தையுடன் நாம் வைத்திருக்கும் உறவு எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அந்த அளவு கடவுட் தந்தையிடம் உண்டு.
2. கடவுள், தந்தையின் மறுவடிவம் என்பது "FATHER PROJECTION THEORY' என்னும் கொள்கையாகும்'' என்கிறார் மைக்கேல் ஆர்கரி. மேலும் அவர்,
பெற்றோர், கடவுள் (PARENTAL IMAGE AND DEITY (G0D) IMAGE) உருவாக்கத்துக்கு உளவியல் அடிப்படையில் இரண்டு காரணங்களை முன்வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று:
தாய்-தந்தை இருவரில் யாரேனும் ஒருவரிடம் மட்டுமே சலுகை கொள்வதைப் போலவே கடவுளையும் கருதும் நிலை என்கிறார். ( THE SOCIAL PSYCHOLOGY OF RELIGION, P.179, 180, 184,) மைக்கேல் ஆர்கரியின் கருத்துக்கேற்ப அமைந்துள்ளது வள்ளலாரின் "தந்தை' குறித்த பாடல்கள். வள்ளல் பெருமானும் தம் தாய்-தந்தையை இளமையிலேயே இழந்துவிட்டவர் என்பதால், அவரும் தாய்-தந்தைப் பாசத்திற்காக ஏங்கித் தவித்திருக்கிறார் என்பதை அப்பாடல்கள் காட்டுகின்றன.
வள்ளல் பெருமான் தாய் - தந்தை இருவரையும் தனித்தனியாவும், இணைத்தும் குறிப்பிட்டுப் பாடும் பாடல்கள் பல உள்ளன. ஆனாலும், இறைவனை தந்தை நிலையில் வைத்து அவர் தம்மை மகனாகப் பாவித்துக் கொண்டு பாடும் இடங்கள் பற்பல.
"இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்' (3386), என் அப்பா (605), தந்தையே (644,2660), எந்தையே (1105), என்றன் அப்பா (599, 602), எனை ஈன்றவனே (1207), என் அப்பனே (2587) என வருபவை தந்தையின் உறவைக் குறிப்பனவாகவே உள்ளன. "அப்பனெனத் திகழ்கின்றோனே' (3246-10-4) என்றவரியின் மூலம் தன் தந்தைபோல இறைவன் திகழ்கிறார் என்ற ஒப்புமைத் தன்மையும் அமைந்துள்ளது.
நீயே என் தந்தை (2203), என்னருமைத் தந்தையே (1962), என் உரிமைத் தந்தையே (1226), மன்றமர்ந்த தந்தையே (1228) என்று கூறுகின்றபோது தனக்குரிய பாதுகாப்புரிமையையும், தந்தையின் உயர்வையும் எடுத்துத்துரைக்கின்றார்.
""தந்தை நீ அலையோ? தனயன் நான் அலனோ?'' (3844) என்றும் ஏக்கமாகக் கேட்டு உறவை-உரிமையை நிலைநாட்டுகின்றார். மேலும், ""தந்தையர் வெறுப்ப மக்கள் தாம் பயனில்'' (3511-102), ""தடுத்தெனை ஆட்கொண்ட தந்தையரே'' (3793), ""தந்தை தம்மையே தனையன் தன் தன்மையென்று சாற்றுதல் சாத்தியம் கண்டீர்'' (5442), ""எந்தையைக் கண்டேன் இடரெல்லாம் நீக்கினேன் சிந்தை மகிழ்ந்தேன் சித்திகள் பெற்றேன்'' (4902), ""அறிவளித்து பிறிவிலாதமர்ந்த பேரருள் தந்தை'' (4615-1122) என்றும், "உணர்ந் துணர்ந்துணரினும் உணராப் பெருநிலை / அடைந்திட எனக்கே அருளிய தந்தை' (4615-1155) என்றும் தனக்கு மரணமிலாப் பெருவாழ்வு அளித்த அருட்திறத்தையும் அருளிச் செய்துள்ளார். மேலும், தந்தையாக பாவித்துப் பாடியுள்ள இன்னபிறபாடல்களும் குறிப்பிடத்தக்கவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.