தமிழ்மணி

பொருளும் பயனும்

வளர்ப்புத் தாயான செவிலி, தான் வளர்த்த மகள் காதலனோடு சென்றுவிட்டதை எண்ணிக் கவலை அடைந்தாள். அவளைத் தேடிச்செல்ல முயன்றாள். வழியில் ஒரு முனிவரைக் கண்டு அது பற்றி வினவுகிறாள். 

முனைவர் இராம. குருநாதன்

வளர்ப்புத் தாயான செவிலி, தான் வளர்த்த மகள் காதலனோடு சென்றுவிட்டதை எண்ணிக் கவலை அடைந்தாள். அவளைத் தேடிச்செல்ல முயன்றாள். வழியில் ஒரு முனிவரைக் கண்டு அது பற்றி வினவுகிறாள். 

அவர், ""உன் மகள் உன்னைப் பிரிந்து காதலனோடுதானே சென்றிருக்கிறாள். அறத்திற்கு மாறாக அவர்கள் செல்லவில்லையே! அதற்கு ஏன் வருத்தம்?'' என்று கூறி மூன்று உவமைகள் வழி அவளைத் தெளிவுபடுத்தினார்.

""அன்னையே! சந்தனம் மலையில் பிறப்பது; எனினும் மலைக்கு அதனால் பயனுண்டோ? முத்து, கடலில் பிறப்பது; கடலுக்கு அதனால் பயன் உண்டோ? யாழில் பிறப்பது இசை; அதனால் யாழுக்குப் பயனுண்டோ? எனவே, உன் மகள் உன்னிடத்துப் பிறந்தாலும் உரிமை பூண்ட காதலனுக்கே உரியவள்'' என்று அறிவுறுத்தினார். சந்தனம் மலையிலே பிறப்பினும், அதனைப் பூசிக் கொள்பவர்களுக்கே பயன்படுகிறது. முத்து, கடலிலே தோன்றினும், அது அணிகலனில் பொருத்தி அழகூட்டப் பயன்படுகிறது. யாழில் இசை தோன்றினும் அதனை மீட்டுவோர்க்கும், கேட்போர்க்கும்  இன்பம் பயக்கிறது. உன் மகளும் அப்படியே! உனக்கல்லாமல்  அவளுடைய காதலனுக்கே உரிமையுடையவள்.  இந்தக் கருத்தமைந்த பாடல் கலித்தொகையின் பாலைக்கலிப் (8) பாடலாகும்.

மேலே கூறிய மூன்று பொருள்களும் வாழ்க்கை நிலையை நுட்பமாக உணர்த்துவன.  மலையில் பிறக்கும் சந்தனம் குறிஞ்சி நிலத்திற்கும், முத்து நெய்தல் நிலத்திற்கும் உரிய கருப்பொருள்கள். குறிஞ்சி இன்பத்திற்குரிய (களவிற்கு) குறியீடு. நெய்தல் இரக்கத்திற்குரிய குறியீடு. ஒன்று அணைத்தல் இன்பத்தையும், மற்றொன்று இரக்கமாகிய (பிரிவின் வழிவந்த) துயரையும் வெளிப்படுத்துவன. இவ்விரண்டு உணர்ச்சிகளும் இன்பம் -துன்பம்  என்ற இரண்டின் அடிப்படையில் அமைவன. மகிழ்ச்சியில் சந்தனம்! துன்ப உணர்ச்சியில் முத்து! (முத்தாகத்திரளும் கண்ணீர்).  வாழ்வில் இரண்டும் உண்டுதானே! 

கவிஞர் பைரன் சொன்னது போல, "வாழ்க்கை  ஓர் அலைவுக் குண்டு (பெண்டுலம்) போல அப்படியும் இப்படியுமாக, இன்பத்தின் அலைவிலும், துன்பத்தின் அலைவிலும் இயங்கும்' என்பான். வாழ்க்கையை மீட்டுவோனிடத்து இன்ப ராகமும் எழும்; துன்ப ராகமும் எழும். அதனை மீட்டுவோன் திறனறிந்து மீட்டினால் வாழ்க்கை இன்பமயமாகிறது; சோக ராகத்திலோ துன்பமயமாகிறது. எனவே, முதலில் இன்பத்தைச் சொல்லிய முனிவர், துன்பத்தையும் உணர்த்தி மீட்டுவோன் திறமறிந்து மீட்டினால் வாழ்க்கை இனிய ராகம் ஆகும் என்பதை உய்த்துணர வைக்கிறார். 

"வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு' என்ற மகாகவி பாரதியின் பாடலடியில் இன்பம் கொளுவீற்றிருக்கிறது.  "துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?' என்ற பாரதிதாசன் பாடலடியில் துன்ப இசையிலும் கூட இனிமை பிறக்கிறது.  இருவருமே, மீட்டப்படும் நரம்பிசைக் கருவியை வைத்துப் பாடியுள்ளதை எண்ணிப் பார்க்கலாம்.

ஒரு ஜப்பானியத் தாய், தன் மகளை சங்கத் தலைவி போல, பாசத்தைப் போற்றி வளர்த்தாள். தன் மகளை அழகிய அணிகலனாக உருவகித்து மகிழ்ந்த அவள், தன் மகளை உரியவனிடம் சேர்த்துவிட்டு மகிழ்ச்சி அடைகிறாள். நேற்றுவரை தன்னோடு ஒன்றாக உறங்கிய மகளை உரியவனிடம் ஒப்படைத்த அவளுக்கு இப்போதுதுணை எது தெரியுமா? தலையணை. பிரிவின் நெகிழ்வில் அவளின் ஆனந்தக் கண்ணீரைத் தலையணை அறிந்தது போலும்! அதனால் உறங்குவதற்குத் துணை அது மட்டுமே என்று நினைக்கிறாள். இதோ அந்த 
ஜப்பானியப் பாடல்:

ஆ! ஒப்படைத்துவிட்டேன்
அழகிய அணிகலனை
அதன் உடைமைக்காரனிடம்.
நான் மட்டும் தனிமையில்.
நல்லது,  ஒன்றாக உறங்குவோம்
தலையணையும் நானுமாய்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT