தமிழ்மணி

அங்கே போகாதீர், அகப்படுவீர்!

வேட்டைக்குச் சென்ற தலைவன், விலங்குகளை வேட்டையாடாமல் காதல் வேட்டையில் இறங்கிவிட்டான்.

DIN

வேட்டைக்குச் சென்ற தலைவன், விலங்குகளை வேட்டையாடாமல் காதல் வேட்டையில் இறங்கிவிட்டான். தன் காதலைப் பற்றியும், தன் காதலியின் அழகு பற்றியும், அவளிருக்கும் சிற்றூரைப் பற்றியும் வருணிக்க ஆரம்பித்துவிட்டான். தோழன் அவனைக் கடிந்துரைக்கிறான்.அதற்குத் தலைவன் பதில் கூறுவதாக அமைந்த பாடல் இது.
 "அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை;
 குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே;
 இதற்குஇது மாண்டது என்னாது, அதற்பட்டு
 ஆண்டுஒழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்;
 மயிற்கண் அண்ண மாண்முடிப் பாவை
 நுண்வலைப் பரதவர் மடமகள்;
 கண்வலைப் படூஉம் கானலானே' (குறுந்-184)
 "நான் கண்டவள் ஒரு மீனவப் பெண்; அவள் மயிலிறகின் கண்களைப் போன்ற தலைமுடியை உடையவள்; பரதவர் மடமகளான அவள் கண்வலையில் என் நெஞ்சம் பட்டு அங்கேயே தங்கிவிட்டது; இந்நிலை எனக்கு மட்டும் அமைந்ததன்று; யாராயினும் அவ்வலையிலே படுவர்; இது யான் அறிந்த உண்மை; ஆதலின் அங்கே ஒருவரும் செல்லற்க; சென்றால் துன்புறுவீர். அவளைக் கண்டதும் தக்கது இது தகாதது இது என அறியும் உணர்வையும் மறந்தேன்'' என்கிறான் தலைவன்.
 அறிகரி பொய்த்தல் - தாம் அறிந்ததோர் உண்மையான நிகழ்ச்சியை மறைத்து ஆன்றோர் பொய்யுரை கூறார்; அந்நெறி பற்றியே யானும் நெஞ்சறிந்த உண்மையைப் பிறர் நலங்கருதி உரைக்கிறேன் என்கிறான் தலைவன். அறிஞர் என்பவர் யாவர் என்பதை நாலடியார் (பா.157) வகுத்துரைக்கிறது.
 "தான் நேரில் பார்த்ததை மறைத்துப் பொய்ப் பேசும் தன்மை கற்றறிந்து அடக்கமுடன் வாழ்பவர்களிடம் இல்லை. தம் தலை போவதாக இருந்தாலும் பொய்ப் பேசாமல் தான் கண்ணால் கண்டதையே கூறுவர்; பொய்யுரை புகலமாட்டர்கள் என்ற அறவுரையையும்; தலைவனின் இன்பங்கலந்த அனுபவத்தை எச்சரிக்கும் தொனியிலே தந்திருக்கிறார் (குறுந்-184) ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் எனும் புலவர்.
 -மா. உலகநாதன்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டிலிருந்து வேலை! பென்சில் பேக்கிங் மோசடி நடப்பது எப்படி?

வெளி மாவட்ட மீனவர்களை சிறைப்பிடித்த கோடியக்கரை மீனவர்கள்!

காஸாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல் முதற்கட்ட நடவடிக்கை!

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT