தமிழ்மணி

மூதறிஞர் ராஜாஜியின் இலக்கிய ஆளுமை!

DIN

எவ்வளவு பெரிய கருத்தையும் குட்டிக் குட்டிக் கதைகளாக விளக்குவதில் மூதறிஞர் ராஜாஜி மிகவும் வல்லமை பெற்றவர். மகாபாரதக் கதையை "வியாசர் விருந்து' என்ற பெயரிலும், இராமாயணக் கதையை "சக்கரவர்த்தித் திருமகன்' என்ற பெயரிலும் இனிய தமிழில் எழுதினார். "வியாசர் விருந்து' நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சாகித்ய அகாதெமி அவருக்கு விருது தந்து சிறப்பித்தது. திருமூலர் தவமொழி, முதல் மூவர் கைவிளக்கு ஆகிய நூல்களும் அவரது ஆன்மிகச் சிந்தனையின் அரிய படைப்புகளாக முகிழ்ந்தன.
 "எல்லாப் பொருளும் இதன்பால் உள/ இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்'- என்ற பெருமைக்குரிய திருக்குறளை, ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்து வழங்கினார். அதன் மூலம் அவரது ஆங்கிலப் புலமையையும், மொழிபெயர்ப்புத் திறனையும் அறிஞர்கள் உணர்ந்து போற்றினர். குறிப்பாக, ஜி.யு.போப் அந்நூலைப் படித்துப் பாராட்டியது, ராஜாஜியின் மொழியாக்கத் திறனுக்குக் கிடைத்த நற்சான்று. சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகளை எழுதுவதிலும் ராஜாஜி தமக்கென்று தனி பாணியைப் பின்பற்றினார். பொழுது போக்குக்காகவோ, உணர்ச்சிகளைக் கிளறிவிடுவதற்காகவோ எழுதாமல், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளடக்கி அருமையாக எழுதினார்.
 படைப்புகள்
 "குடி குடியைக் கெடுக்கும்' என்னும் கருத்தை மையமாக வைத்து அவரால் புனையப்பட்டதே "திக்கற்ற பார்வதி' எனும் படைப்பாகும். பின்னாளில் அது வெண் திரையில் காட்சிக் காவியமாகத் திரைப்படமாயிற்று.
 கல்வி அறிவும், கலை பயில் தெளிவும் கொண்ட ராஜாஜி அவ்வப்போது கட்டுரை ஓவியங்களும் தீட்டினார். கல்கி, இளம் இந்தியா, சுயராஜ்யா ஆகிய ஏடுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் பலரால் பாராட்டப்பட்டவை.
 அவரது இலக்கிய ஈடுபாடு ஓர் எல்லைக்கு உட்பட்டதல்ல. பஜ கோவிந்தம், உபநிஷதப் பலகணி, வேதாந்த தீபம், ஆத்ம சிந்தனை, úஸாக்ரதம், துறவி லாதென்சு ஆகியவை ஒப்புவமை இல்லாதவை. சிசுபாலனம், அபேத வாதம், கண்ணன் காட்டிய வழி, அரேபியர் உபதேச மொழிகள், குடி கெடுக்கும் கள், தாவரங்களின் இல்லறம், தமிழில் வருமா? என இப்படி அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இலக்கிய வளர்ச்சிக்கு உரம் சேர்ப்பதாக அமைந்தன.
 எழுத்து அனுபவம்
 ஓர் எழுத்தாளர் எவ்வளவு நூல்கள் எழுதியிருந்தாலும் மன நிறைவைத் தந்த நூல் சிலவாகவே இருக்க முடியும். அந்த வகையில் இராமாயணத்தை "சக்கரவர்த்தித் திருமக'னாக அவர் எழுதிய அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:
 "என்னுடைய அரசியல் பணிகளைக் காட்டிலும், இலக்கியப் பணியையே நான் விலைமதிக்க இயலாதது என்று கருதுகிறேன். இராமாயணம் எழுதும் பணி எனக்கு முடிந்துவிட்டது. நான் மகிழ்ச்சியான ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல் இருக்கிறேன். இராமன் அயோத்தியை விட்டுச் சென்றபோது, அவன் வருந்தவில்லை. ஆனால், சீதையை இழந்தபோதுதான் அவன் வருத்தம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டான். அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன்.
 உயர்ந்த பதவியிலிருந்து விலக நேர்ந்தபொழுது நான் வருந்தவில்லை. அடுத்தாற்போல் என்ன செய்வது என்று திகைக்கவில்லை. ஆனால், அயோத்தி இராமனின் வரலாற்றை எழுதி முடித்த நிலையில் நான் ஒரு வெறுமையை, சூன்யத்தை உணர்கிறேன். ஆலயம் ஒன்றிலிருந்து ஆண்டவன் அகன்றுவிட்டதைப் போல் ஆகிவிட்டது என் மனம்!'' என்கிறார். இதன் மூலம் தொய்வின்றி எழுத வேண்டும் என்னும் அவரது ஆர்வம் வெளிப்பட்டது.
 பொன்மொழிகள்
 தீர்க்கமான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ராஜாஜியின் பொன்மொழிகளையும் அவரது வாழ்வியல் இலக்கியம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறலாம்.
 "மாநாடுகள் ஒரே ஒரு முறைதான் பேசும்; இலக்கியமோ பலமுறை பேசும்.'' என்று கூறிய ராஜாஜிதான், "கடமையும் உரிமையும் கொழுக்கொம்பு போல. கடமையின்றி உரிமையில்லை. உரிமையோடு ஒட்டியிருப்பதுதான் கடமை. கடமை அஸ்திவாரம்; உரிமை அதன்மீது எழுப்பப்படுகின்ற கட்டடம்'' எனக் கடமைக்கும் உரிமைக்கும் அருமையான விளக்கம் கொடுத்தார்.
 ஹிந்தியும் ராஜாஜியும்
 நாடெங்கும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த சமயத்தில், ராஜாஜி ஒரு கருத்தைத் தெரிவித்தார். "இந்தியை வெறுக்கலாம்; ஆனால் அதைக் கற்பதால் கேடு ஒன்றுமில்லை!'' என்றார். அப்போது தமிழறிஞர் ஒருவர், "இந்தியைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கும் கருத்து தவறானது!' என்றார்.
 அதற்கு ராஜாஜி "நண்பரே... வெளியில் சென்றுவர நமக்குக் காலணி தேவைப்படுகிறது. அதற்காக அதை நாம் வீட்டுக்குள் போட்டுக்கொண்டு நடப்பதில்லை. அதுபோலத்தான் நாம் இந்தியை வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, வெளிமாநிலத் தேவைகளுக்கு இந்தியைப் பயன்படுத்திக் கொள்வோம். நமது மாநிலத் தேவைகளைத் தமிழிலேயே செய்து கொள்வோம்! '' என்றார்.
 எதையும் நுட்பமாக ஆராய்ந்து தேர்வதில், திறமை பெற்றவராக இருந்தார் ராஜாஜி. இவை போல் பல நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து, மூதறிஞர் ராஜாஜி ஓர் உன்னதமான இலக்கிய ஆளுமை என்பதை அறியமுடிகிறது.
-குடந்தை பாலு
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT