முகப்பு
தமிழ்மணி

நிலாச்சோறு கும்மி

கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பசுமை சூழ்ந்த கிராமமாக "பார்த்தசாரதிபுரம்' விளங்குகிறது. கிராமமும் கிராமீயமும் சார்ந்த நாட்டுப்புறப் பகுதியான

Updated On : 26 ஜூன், 2020 at 2:05 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:13 PM

கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பசுமை சூழ்ந்த கிராமமாக "பார்த்தசாரதிபுரம்' விளங்குகிறது. கிராமமும் கிராமீயமும் சார்ந்த நாட்டுப்புறப் பகுதியான இக்கிராமத்தில் வாழும் மக்களின் உயிரிலும் உணர்விலும் பழைமை மாறாமல் இன்றும் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில், இறை வழிபாட்டுடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாக "நிலாச்சோறு மாற்றுதல்' செயல்பாடு கும்மிப் பாடல்களுடன் கும்மியடித்து கொண்டாடப்படும் நிகழ்வாக விளங்குகிறது.
 நாட்டுப்புறம் வாழ் மக்களின் வாழ்வியல் நெறிகள், காதல் நினைவுகள் எனப் பலவும் கும்மியில் இடம்பெறுகின்றன. கோயில் திருவிழா, பொங்கல் விழா, தைப்பூச விழா ஆகிய விழாக் காலங்களில் கும்மிப் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கே உரியதான கும்மியில் ஆண்களும் பங்கேற்பதைக் காண முடிகிறது.
 கும்மியடித்தல்
 கும்மியாட்டம் "கும்மியடித்தல்' என்னும் பெயரில் கொங்கு வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. இதைக் "குதித்துப் பாடுதல்' எனவும் கூறுவர். "பெண்கள் ஆடும் ஆட்டங்களில் மிக முக்கியமானது கும்மியாட்டம். "கொம்மாய்' என்ற சொல்லிலிருந்து கும்மி தோன்றியிருக்க வேண்டும்; இவ்வாட்டத்தைக் குஜராத் கர்பா நடனத்துடனும், இராஜஸ்தான் கும்மார் ஆடலுடனும், ஆந்திரநாட்டு கொப்பியுடனும், கேரள நாட்டுக் கைகொட்டிகளியுடனும் தொடர்புப்படுத்துவர்'' என டாக்டர் சு. சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு) குறிப்பிட்டுள்ளார்.
 நிலாச்சோறு வழிபாடு
 ஒவ்வோர் ஆண்டும் பார்த்தசாரதிபுரம் கிராமத்தில் தைப்பூச விழா நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இரவில் நிலாவுக்கு வழிபாடு செய்யும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. பத்து வயதிலிருந்து இருபது வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் தங்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவை ஒரு சிறுபாத்திரத்தில் போட்டு வழிபாடு நடக்கின்ற இடத்திற்குக் கொண்டு வருவர். இவ்வுணவு எச்சில் படாததாக இருக்க வேண்டும். வழிபாடானது ஊர்க்கவுண்டர் என்னும் கோயில் பொறுப்பில் தலைமை வகிப்பவர் வீட்டின் வாசலில் நடைபெறும்.
 வழிபாடு நிகழ்வதற்கு முன்பாக பெண்கள் வாசலை சாணிநீர் கொண்டு தூய்மைப்படுத்தி, மிகப்பெரிய தேர்க்கோலம் போடுவர். அத்தேரின் உச்சிப் பகுதியில் நிலவானது வானில் அன்றைய தினம் இருக்கும் தோற்றத்திற்கேற்ப வரையப்படும். தேரின் நடுவில் முக்காலி வைக்கப்பட்டு, அதன்மீது சாணியால் பிடிக்கப்பட்ட பிள்ளையார் வைக்கப்பட்டு, அதன் தலையில் பூ அல்லது அறுகம்புல் செருகப்படும்; அருகில் விளக்கு ஏற்றப்பட்டு பூக்கள் தூவப்படும். பின்னர் முக்காலியைச் சுற்றிலும் வட்டவடிவில் அனைவரும் கொண்டுவந்த உணவுப் பாத்திரங்கள் வைக்கப்படும். பின்னர் கும்மியடித்தல் தொடங்கப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. விழா தொடங்கப்படும் முதல் நாளில் அனைவரும் பொரி வாங்கி வந்து படைத்து வழிபடுவர். அடுத்த நாளிலிலிருந்து உணவு கொண்டு வரப்படும். தைப்பூச நாளன்று வீட்டில் உள்ள தாய்மார்கள் பச்சரிசியால் மாவுருண்டை செய்து மாவு மாற்றுதல் சடங்கு கும்மியடித்தலுடன் நடைபெறும். இந்நாள் வெகு சிறப்பாக இருக்கும்.
 இந்த ஒருநாள் மட்டுமே பெரியவர்கள் பங்கு பெறுவர். மாவு மாற்றப்பட்ட மறுநாள் நிலாவுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. மாவை அதிகமாக உண்டதால் இப்பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதி அடுத்தநாள் ரசம் சோறு வைத்து வழிபடுவர். இந்நிகழ்வு நிலாச்சோறு மாற்றுதலின் கடைசி நாள் வழிபாடாகும். நிலாச்சோறு மாற்றுதல் என்பதை நிலாப் பிள்ளைக்குச் சோறு மாற்றுதல் எனவும் கூறுவர். தைப்பூச தினத்தில் மாவு மாற்றப்படவில்லையெனில், குழந்தைகள் தேர்க்காலில் பட்டு மடியும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
 நிலாவுக்குப் படைக்கப்பட்ட உணவை கும்மியடித்தல் நிறைவுறும் ஒவ்வொரு நாளன்றும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் உணவினைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு, பிறர் கொடுக்கும் உணவினைப் பெற்று உண்பர். உணவுப் பாத்திரங்கள் கைமாறிக்கொண்டே வரும். இவ்வாறான முறை பிள்ளைகளிடையே சமத்துவத்தையும், பங்கிட்டு உண்ண வேண்டும் என்னும் மனப்பாங்கையும் ஏற்படுத்தும். நிலாச்சோறு மாற்றப்பட்டு, உணவு உண்டபின் முக்காலியில் இருக்கும் விளக்கை எடுத்துவிட்டு, ஒரு பெண்பிள்ளையின் தலையில் சாணிப் பிள்ளையார், பூக்கள் இருக்கும் முக்காலி வைக்கப்பட்டு, பாடல்கள் பாடிக்கொண்டே வாய்க்கால் பகுதிக்குக் குழுவாகச் சென்று ஓடுகின்ற நீரில் பிள்ளையார், பூக்கள் போடப்படும்.
 நிலவுக்கான வழிபாடாக இருப்பினும் முதலில் விநாயகரையும் மாரியம்மனையும் பாடியே கும்மியைத் தொடங்குகின்றனர். இயற்கை வழிபாடு கிராம மக்களின் பாரம்பரியத்தில் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. அவ்வகையில் நிலா வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
 வட்ட வட்ட நிலாவுக்கு
 பொட்டும் அலங்காரம்
 வாசமுள்ள கொண்டைக்கு
 பூவும் அலங்காரம்
 ஊருக்கு மேவரமா
 தோப்பும் அலங்காரம்
 போடுங்கம்மா பொண்டுகை
 போலே சிறுபலகை
 ஏடுங்கம்மா பொண்டுகை
 எல்லோருக்கும் தங்கொலகை
 ஓலே ஓலே...
 நிலவோடு பாம்பிற்கும் தொடர்புண்டு என்ற நம்பிக்கை நாட்டுப்புறப் பகுதிகளில் காணப்படுகிறது. சந்திரகிரகணம் நிலவை சந்திரன் விழுங்குவதால் ஏற்படும் என்பர். அவ்வகையில் பாம்பு குறித்த பாடலும் நிலாச்சோறு மாற்றும்போது பாடப்படுகிறது.
 இயற்கையோடு இயைந்து வாழ்கின்ற மக்களின் பாடல்களில் இயற்கையைப் பற்றிய பாடல்களும், விவசாயம், காதல் சார்ந்த பாடல்களும் வெளிப்படுகின்றன. நாட்டுப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே அமைகின்றது. மேலும், நிலாச்சோறு வழிபாட்டில் மக்கள் இறை வழிபாட்டோடு சேர்த்து, தம் எண்ண ஓட்டங்களையும் பாடல்களில் பதிவு செய்துள்ளதை அறியமுடிகிறது. கும்மியடித்துப் பாடுவதால் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்பதையும் அறிய முடிகிறது.
 - முனைவர் கி. இராம்கணேஷ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.