தமிழ்மணி

பூச்சூடாத பூவையர்

பெண்ணுக்குரிய அடையாளங்களில் பூவும் ஒன்று. சிறுவயது முதல் பெண்கள் பூச்சூடுவதை இன்றும் காணமுடிகிறது. ஆனால்,  சங்க காலத்தில் திருமணமாகாத பெண்கள் பூச்சூட்டிக் கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தது.

முனைவா் கி. இராம்கணேஷ்


பெண்ணுக்குரிய அடையாளங்களில் பூவும் ஒன்று. சிறுவயது முதல் பெண்கள் பூச்சூடுவதை இன்றும் காணமுடிகிறது. ஆனால்,  சங்க காலத்தில் திருமணமாகாத பெண்கள் பூச்சூட்டிக் கொள்ளும் வழக்கம் இல்லாதிருந்தது.

பெண் ஒருத்தி  திருமணமானவளா? திருமணமாகாதவளா? என்பதை அறிந்துகொள்ள பூவும் ஓர் அடையாளமாகத் திகழ்ந்திருக்கிறது. களவு காலத்தில் தன் தலைவன் பூவைக் கொடுத்தால், தலைவி பூச்சூடிக் கொள்வாள்.  இச்செயல் அவள் காதலனைக் கணவனாக ஏற்றுக் கொண்டுவிட்டதை உணர்த்துகிறது. 

திருமணம் நடந்து, மணமகன் வீட்டார் பெண்ணுக்குப் பூ வைத்துவிட்டுச் சென்ற பின்னர், பெண்ணானவள் தொடர்ந்து பூ வைத்துக் கொள்ளலாம். அவ்வகையில் திருமணமான பெண்கள் பூ வைக்கும் உரிமையுடையவர்களாக இருந்துள்ளனர். திருமணமாகாத பெண் பூச்சூடியிருந்தால் அவள் "களவு'  வாழ்க்கையில் இருக்கிறாள் என்பதை ஊரார் அறிந்து "அலர்' தூற்றுவர். இக்கருத்தை புலவர் கண்ணகாரன் கொற்றனார் இயற்றிய, நற்றாயின் கூற்றாக வரும் நற்றிணைப் பாடலொன்று உணர்த்துகிறது. 

"ஐதே காமம் யானே, ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம், இளையோள் 
வழு இலள் அம்ம தானே, குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்,
"நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே.  
(பா.143)

"தலைவன் ஒருவனுடன் என் மகள் களவு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறாள் என்பதை என் காது கேட்க  ஊர்ப் பெண்கள் பேசுவதை அறிவேன். இது தெரிந்திருந்தும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். ஒரு நாள் மகளிடம், "நின் கூந்தலில் புதிதாக மணம் வீசுகின்றதே...எப்படி?' என்று கேட்டுவிட்டேன். அவள் உடனே உடன்போக்கு மேற்கொண்டு விட்டாள்' என்று தன் மகள் "உடன்போக்கு' மேற்கொண்டதற்குத் தானே காரணம் என்கின்றாள் நற்றாய்.

தலைவியின் தலையில்  பூ வைப்பதன் மூலமாகத் திருமணம் உறுதியாகிவிட்டதை தோழியின் கூற்றாக வரும் ஐங்குறுநூற்றுப் பாடலொன்று  (பா.294) தலைவனிடம் உரைப்பதாக அமைந்துள்ளது.

"செந்நிற வேங்கைப் பூவின் மேல் இருந்த மயில் நகையணிந்த பெண் போல காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தாய், நின் தந்தை வாழ்க! திருமணத்தைக் கொண்டாடும்படி, தலைவியின் பின்னிய கரிய கூந்தலில் மலரணிந்தாய்' என்ற கருத்தின் வாயிலாகத் திருமண நாளிலிருந்து மகளிர் மலரணியும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT