முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைத் தனது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Updated On : 13 டிசம்பர், 2020 at 10:53 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:36 PM

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைத் தனது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னால் நிதியமைச்சர்கள் பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யும்போது, ஏதாவது குறளை மேற்கோள் காட்டுவது வழக்கமாக இருந்தாலும், பிரதமர்கள் பொதுவெளியிலும், முக்கியமான உரைகளிலும் இதுபோல குறளை மேற்கோள் காட்டியதில்லை.
 குறளை மட்டுமல்ல, சங்க இலக்கியங்களிலிருந்துகூட அவர் மேற்கோள்களைக் காட்டுவது பாராட்டுக்குரியது. பாரதியார் பிறந்த நாளையொட்டி நடந்த காணொலி நிகழ்வில், அச்சமின்மையைக் கற்றுக் கொடுத்த பாரதியை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருப்பதும், பாரதியார் சிறிது காலம் வாழ்ந்த வாராணசி மக்களின் பிரதிநிதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகஅவர் கூறியிருப்பதும் நம்மைப் பெருமிதப்படுத்துகிறது.
 யாரோ சொல்வதையோ, எழுதிக் கொடுப்பதையோ வைத்துக்கொண்டுதான் அவர் உரையாற்றியிருக்க முடியும். ஆனால், அப்படிப் பேசுவதற்கு முன்னால், அந்தக் கருத்துகளை அவர் உள்வாங்கி இருப்பார் என்பது நிச்சயம். ராணுவ வீரர்கள் மத்தியிலும், நாடாளுமன்றத்திலும், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் வள்ளுவரையும், கம்பரையும், புறநானூற்றையும், பாரதியையும் மேற்கோள் காட்டும்போது தமிழகத்தின் பெருமையும், இலக்கியச் செழுமையும் இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
 மகாகவி பாரதியார் குறிப்பிடுவதுபோல, தமிழகத்தின் மிகப்பெரிய பின்னடைவு, நாம் நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் நமக்கு நாமே சொல்லிப் பெருமிதம் கொள்வதில் திருப்தியடைந்து விடுகிறோம். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை நாம் அறிந்த அளவுக்கு, நமது பாரதியாரை வங்கத்தார் மட்டுமல்ல, வடபுலத்தாரும் அறியமாட்டார்கள்.
 திருக்குறள் உலகப் பொதுமறை என்று கூறும் நாம், இந்தியா முழுவதும் திருக்குறள் குறித்த புரிதலை ஏற்படுத்தவில்லை. அதன் அருமை பெருமைகளை விளக்கவில்லை.
 நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தருண் விஜய்யின் முயற்சியால், ஹரித்துவாரில் கங்கைக் கரையோரமாகத் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் எதிரானதல்ல. திருவள்ளுவர் யாரென்று தெரியாததால், ஏதோ ஒரு துறவிக்கு சிலை எடுக்கிறார்கள் என்று உள்ளூர் மக்கள் நினைத்து, எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுக்குப் புரியவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
 தமிழையும், தமிழகத்தின் இலக்கியப் பெருமைகளையும் தமிழகத்துக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமானால், நாம் பிற மொழிகளைக் கற்றாக வேண்டும். அவர்களுக்குத் தெரிந்தமொழியில்தான் வள்ளுவரையும், கம்பரையும், இளங்கோவடிகளையும், புறநானூற்றுப் புலவர்களையும், பாரதியையும் பரப்புரை செய்ய முடியும். இதைப் புரிந்து கொள்ளாத வரையில் நாம் கிணற்றுத் தவளையாகத்தான் இருக்க முடியும்.
 பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை மேற்கோள் காட்டுவதில் அரசியல் உள்நோக்கம் கற்பிக்க முற்படுவது மடைமை. இதனால் தமிழகத்தில் அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்துவிடாது என்பதுகூடத் தெரியாதவரல்லர் நரேந்திர மோடி. அரசியல் உள்நோக்கம் இருந்தாலும், ஏனைய அரசியல் கட்சிகள் செய்யாததை இவர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.
 ஈழத் தமிழர்கள் உலகளாவிய அளவில் தமிழை எடுத்துச் செல்லும் பெரும் பணியைத் தங்கள் கடமையாகக் கருதி முன்னெடுக்கிறார்கள். நாம் இந்தியாவுக்குள் தமிழகத்தின் எல்லைகளைக் கடந்து தமிழைக் கொண்டு செல்லாமல், நமக்குள் பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?' சொல்லீர்!
 
 கடந்த நூற்றாண்டின் தமிழ் வளர்த்த சான்றோர் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடம், அனைவராலும் "சண்முகம் அண்ணாச்சி' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஒளவை டி.கே.சண்முகத்துக்கு உண்டு. "டி.கே.எஸ்.' சகோதரர்களின் நாடகங்கள், நவீன தமிழ் நாடகக் கலைக்கு இலக்கணம் வகுத்த சரித்திரம் எழுத்தில் அடங்காது.
 தெரிந்தவர்களுக்கு "சண்முகம் அண்ணாச்சி'யாகவும், பரவலாக ஒளவை சண்முகமாகவும் தமிழக நாடகக் கலையின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்த டி.கே.சண்முகத்தின் புதல்வர் "கலைமாமணி' டி.கே.எஸ்.கலைவாணன் எழுதியிருக்கும் புத்தகம் "என்னை வளர்த்த சான்றோர்'. அப்பாவின் அடிச்சுவட்டில் அவரைத் தொடர்ந்து அப்படியே பயணிக்காவிட்டாலும், அவரது கலையுலகத் தொடர்பை விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் கலைவாணன்.
 சண்முகம் அண்ணாச்சி, என்.எஸ்.கிருஷ்ணனின் மீதான பெருமதிப்பால் தனது மூத்த மகனுக்குக் "கலைவாணன்' என்று பெயர் சூட்டினார். வங்கிப் பணியில் சேர்ந்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினாலும், கலைவாணனின் நாடக மேடைத் தொடர்பும், இசையுலகத் தொடர்பும் இம்மியும் குறைந்துவிடவில்லை. 1330 குறள்களையும் இசையமைத்துப் பாடிப் பதிவு செய்த பெருமைக்குரியவர் அவர்.
 "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் பொதுச் செயலாளராக இருந்தவர் சண்முகம் அண்ணாச்சி. அதனால், சிறு வயதிலிருந்தே டி.கே.எஸ்.
 கலைவாணனுக்குக் கலையுலகத் தொடர்பும், அரசியல் ஆளுமைகளின் அறிமுகமும் கிடைத்ததில் வியப்பில்லை.
 தனது வாழ்க்கையில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திய 28 ஆளுமைகள் குறித்த டி.கே.எஸ்.கலைவாணனின் பதிவுதான் "என்னை வளர்த்த சான்றோர்'. அந்த ஆளுமைகளில் பலர் அவரது தந்தையாரின் நண்பர்களாக இருந்தவர்கள்.
 "என்னை வளர்த்த சான்றோர்' நூலில் எனக்கிருக்கும் சிறிய நெருடல் அல்லது குறை, கலைவாணனின் பால்யகால சிநேகிதர் கமல்ஹாசன் குறித்த பதிவு இல்லாமல் இருப்பது. நான் மிகவும் ரசித்துப் படித்து நெகிழ்ந்த பதிவு, அவரது இசையாசிரியர் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் குறித்தது. மிகப்பெரிய இசை மேதையான சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் இசை வாரிசு என்பதைவிட உயர்ந்த பெருமை, டி.கே.எஸ்.கலைவாணனுக்கு
 இருந்து விட முடியாது.
 கடந்த முக்கால் நூற்றாண்டு தமிழக வரலாற்றுடன் பயணித்த சுகானுபவத்தை கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணனின் "என்னை வளர்த்த சான்றோர்' புத்தகம் வழங்குகிறது.
 
 இந்தவாரக் கவிதை இது -
 ராகுவோ கேதுவோ
 சனியோ வியாழனோ
 கிரகங்கள் அதிர்ஷ்டசாலிகள்
 வாடகைக் கவலையின்றி
 வீடுமாறுகின்றன!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.