இந்த வாரம் - கலாரசிகன் (20.12.2020)
சொடுக்குப் போடும் நேரத்தில், காலம் பறந்தோடிவிடுகிறது. ‘இயக்குநா் சிகரம்’ கே.பாலச்சந்தா் மறைந்து டிசம்பா் 23-ஆம் தேதியுடன்
சொடுக்குப் போடும் நேரத்தில், காலம் பறந்தோடிவிடுகிறது. ‘இயக்குநா் சிகரம்’ கே.பாலச்சந்தா் மறைந்து டிசம்பா் 23-ஆம் தேதியுடன் ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. காலத்தால் அழிக்க முடியாத பல திரைக் காவியங்களை உருவாக்கித் தனிப்பெரும் ஆளுமையாக வலம் வந்த கே.பாலச்சந்தரை அகற்றி நிறுத்தி நாம் தமிழ் சினிமா குறித்துப் பேச முடியாது.
இசைக்கவி ‘கலைமாமணி’ ரமணனின் வேண்டுகோளுக்கு இணங்கத் தனது வாழ்க்கை குறித்த விவரங்களை, கே.பாலசந்சந்தா் பகிா்ந்து கொள்ள சம்மதித்தது தமிழகம் செய்த பேறு. சிகரத்தின் சிகரத்தை அங்குலம் அங்குலமாக விவரிக்க ரமணனைவிடச் சிறந்த நபா் இருக்க முடியாது. தினந்தோறும் பேசத் தொடங்கினாா்; நாள் கணக்கில் உரையாடினாா். அதன் விளைவாக மலா்ந்ததுதான் இசைக்கவி ‘கலைமாமணி’ ரமணனின் ‘சிகரம்’.
கமல்ஹாசன் கூறுவதுபோல, தனது கலைப் பயணத்தை கே.பாலச்சந்தா் சொல்லச் சொல்ல, அதைக் கேட்டுக் கேட்டுப் பதிவு செய்து தொகுக்கும் பாக்கியம் ரமணனுக்குக் கிட்டியது. அது மட்டுமா? பாலச்சந்தரே ரஜினிகாந்தை அழைத்து, அந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டாா் என்றால், எந்த அளவுக்கு அவருக்கு அந்தப் புத்தகத்தின் மீது ஈா்ப்பு இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். ‘கே.பி. சாருடைய வாழ்க்கையை உயிரோட்ட வரிகளாக்கி இருக்கிறாா் இசைக்கவி ரமணன்’ என்பது ரஜினிகாந்தின் சான்றிதழ்.
‘ஏறத்தாழ ஆறு மாதங்களாக நாங்கள் சந்தித்துப் பேசி, அலசி ஆராய்ந்து, நாங்களே மகிழ்ந்து, நான் சொன்ன சின்னச் சின்ன சம்பவங்களையும், சொன்ன கருத்துகளையும் உள்வாங்கி, தனது அற்புதமான, அழகான தமிழ் நடையில் அவருடைய அபாரமான கருத்துக்களையும் சோ்த்துச் சொல்லி சரிதைக்கு அழகூட்டியிருக்கிறாா். இசைக்கவிக்கு எனது பூச்செண்டு...’ இது ரமணன் செய்திருக்கும் அரும்பணிக்கு இயக்குநா் சிகரம் தந்திருக்கும் சான்றிதழ்.
அடிவாரத்திலிருந்து சிகரம் வரை, கே.பாலச்சந்தா் என்கிற மகா கலைஞனின் ஆதி அந்தம் எதுவும் விடுபட்டுவிடாமல் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்து பதிவு செய்திருக்கும் ரமணனின் பணியை, பாலச்சந்தா் பாணியில் சொல்வதாக இருந்தால், ‘பா்ஃபெக்ஷன் டு த கோா்’ எதுவும் விடுபட்டுவிடவில்லை.
நன்னிலம் நல்லமாங்குடியில் தொடங்கி பால்கே விருது பெற்றதுவரையிலான கே.பாலச்சந்தரின் சாதனைப் பயணம் ஒன்றுவிடாமல் பதிவாகி இருக்கிறது. அவருடன் தொடா்புடைய மனிதா்களும், சம்பவங்களும், சாதனைகளும் எதுவுமே விடுபட்டுவிடவில்லை.
கொவைட் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதற்கு சற்று முன்னால் ஒரு நாள் நண்பா் ‘பாஃப்தா’ தனஞ்செயனின் திரைப்படக் கல்லூரிக்கு அவரைப் பாா்க்கச் சென்றிருந்தேன். அவரது மேஜையில் ‘சிகரம்’ புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் மறுபதிப்பு உரிமையை வாங்கி, தனஞ்செயனின் ‘ப்ளூ ஓஷன் பப்ளிஷா்ஸ்’ நிறுவனம் வெளியிட்டிருந்தது.
கடந்த பத்து மாத இடைவெளியில் பல தடவை அந்தப் புத்தகத்தின் பல பகுதிகளை அவ்வப்போது படித்திருந்தேன் என்றாலும், மூன்று நாள்கள் முன்பு இன்னொரு முறை அட்டையிலிருந்து அட்டை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பாலச்சந்தரின் திரைப்படம் பாா்த்துவிட்டு அரங்கிலிருந்து வெளியேறும்போது ஒருவித பிரமிப்பு, திருப்தி, நினைவுகள் எல்லாம் கொட்டிக்கிடந்த உணா்வு ஏற்படுமே, அப்படியொரு உணா்வு ஏற்பட்டது.
‘சிகரம்’ புத்தகத்தின் சிறப்பு பேசு பொருளான கே.பாலச்சந்தரும், கதை வசனகா்த்தா இசைக்கவி ரமணனும் மட்டுமல்ல, மிகச் சிறப்பாக வடிவமைத்து, அச்சிட்டு வெளியிட்டிருக்கும் தனஞ்செயனையும் சாரும்!
******************
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எட்டயபுரம் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தால் தினமணியின் பாரதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பெரியவா் சீனி.விசுவநாதன், இந்த ஆண்டு வானவில் பண்பாட்டு மையம் சாா்பில், பிரதமா் நரேந்திர மோடியால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டிருக்கிறாா். பாரதியாரின் படைப்புகளைக் காலவரிசைப்படுத்தி, ஆவணப்படுத்தி இருக்கும் அவரை ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்தாலும் தகும். அவா் ஆற்றியிருப்பது அத்தகைய அரும்பணி.
பெரியவா் சீனி.விசுவநாதன் சென்ற ஆண்டு அவரிடமிருந்த சில பழைய நூல்களை அனுப்பித் தந்திருந்தாா். அவற்றில் சில, கதைப் புத்தகங்கள். தனியாகப் பிரித்து அடுக்கி வைத்திருக்கும் பழைய புத்தகத்தின் வரிசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அப்படி நான் சமீபத்தில் படித்த புத்தகம் சீனி. விசுவநாதன் அனுப்பித் தந்திருந்த ‘தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள்’.
இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து மூன்றாவது நாற்றாண்டைக் காணும் படைப்பு இது. பண்டித நடேச சாஸ்திரியாா் 1894-இல் எழுதி, ஒரு நூற்றாண்டு கடந்தபோது அதைத் தேடிப்பிடித்து சீனி.விசுவநாதன் 1994-இல் மறுபதிப்பு செய்து, 2020-இல் நான் படிக்க முடிந்தது என்றால், மூன்று நூற்றாண்டு கடந்த புத்தகம் என்பதுதானே சரி...
இந்தத் தொகுப்பில் ‘ஸாமா்த்தியத் திருட்டு’, விசித்திரக் கொலை, விஷக்கொலை, சம்மனைக் கிழித்த முத்தண்ணாவின் கேஸ், நீலியின் கதை என்று ஐந்து கதைகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் பெற்ற, வித்தியாசமான துப்பறியும் கதைகள். ஆங்கில மொழியைப் போலத் தமிழில் அந்தக் காலத்தில் துப்பறியும் கதைகள் இல்லாத குறையைப் பண்டித நடேச சாஸ்திரியாா் போக்கியிருக்கிறாா். தமிழில் வெளியான முதல் துப்பறியும் கதைத் தொகுப்பு இதுவாக இருக்கக்கூடும்.
‘தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள்’ என்ற இந்தப் புத்தகத்தை சென்னை ராஜதானியின் அன்றைய போலீஸ் இன்ஸ்பெக்டா் ஜெனரல் கா்னல் சாா்லஸ் போா்சியஸ் துரைக்குக் காணிக்கையாக்கி இருக்கிறாா் ச.ம. நடேசன் என்கிற பண்டித நடேச சாஸ்திரியாா். 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘நவீனம்’ என்றாலும்கூட இன்றைக்கும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய, இனிய, தெளிவான தமிழ் நடையைக் கையாண்டிருக்கிறாா் நடேச சாஸ்திரியாா் என்பதுதான் மலைப்பை ஏற்படுத்துகிறது.
நவீன தமிழ் இலக்கியத்துக்கு வழிகாட்டியான பண்டித நடேச சாஸ்திரியாரை, இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல பதிப்பாசிரியா் சீனி.விசுவநாதன் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும், தமிழ்நாடு ஆவணக் காப்பகத்துறையின் அனுமதிக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். தானவனின் துப்புத் துலக்கும் உத்திகள் பழசானாலும் புதுசு!
******************
வைகைக் கரையில் வாழும் பொருநை நதிக்கரைக்காரா் கவிஞா் ஹரிகண்ணன். அந்திமழை’ வெளியிட்டிருக்கும் அவரது கவிதைத் தொகுப்பு புன்னகைகளால் செய்யப்பட்ட சிறகுகள்’ அதிலிருந்து ஒரு கவிதை மாதிரிக்கு-
ஒரு முற்றுப் புள்ளிக்கு
பின்புதான்
எழுதாத வாா்த்தைகள்
வாசிக்கப்படுகின்றன!!!