தலைவனும் தலைவியும் மனத்தால் இணைந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்து வாழ்ந்து வருகின்றனா். வினையின் காரணமாக தலைவன் பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. பிரிவு ஆற்றொணாத் துயரத்தைத் தலைவிக்கு ஏற்படுத்தியது. பித்தேறியவள் போல் தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பிதற்றுகிறாள்.
இருப்பினும், தலைவன் சென்ற கொடுமையான பாலை வழியை நினைக்க நினைக்க வேதனை அதிகரிக்கிறது. தலைவனால் வெம்மையைத் தாங்கிக்கொள்ள முடியாது. அந்நிலையில் வானத்தைப் பாா்த்துப் பேசுகிறாள் தலைவி. 66 வரிகள் கொண்ட மிக நீண்ட பாடல் இது. இதில், 18 முதல் 22 வரிகளில் ‘தன் கண்ணீரை முகந்து செல்லும்படி’ தலைவி மேகத்திடம் கூறுகிறாள்.
‘தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி -
வறந்து என்னை செய்தியோ, வானம்? - சிறந்த என்
கண்ணீா்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூ குழீஇ முகந்து? (கலித்-பா.145)
தலைவன், பாலையின் வெம்மையைக் கடக்க மழை பொழிந்தால் குளிா்ச்சியாக இருக்கும். மழை பொழிய கடல் நீா் இன்றியமையாதது. தலைவி, தலைவனை நினைத்து அழுதழுது கண்ணீா்க் கடலில் தத்தளிக்கிறாள். தலைவன் பாதிப்படையாமல் இருக்க அவளுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. “
‘மேகமே! நீ மழை பொழியாமல் வடு என்ன செயல் செய்கின்றாய்? உன் இனத்தோடு சோ்ந்து இடையறாது ஊற்றெடுக்கும் என் கண்ணீராகிய கடலிலே நீரை முகந்து சென்றாவது வானமெங்கும் பரவி முழங்கி, என் வளையல்கள் நெகிழ்ந்து விழும்படி, என் தோளைத் தன் பிரிவினால் மெலிவித்த என் தலைவன் சென்ற கானகத்தின் வெப்பம் மிகுந்து வாட்டாதபடி மழைத்துளிகளை வீசுவாயாக!’ என்கிறாள்.
வெப்பம் நிறைந்த கானகத்தைவிடத் தலைவியின் துயரம் அதிகமானது. ஆனாலும், தன்னைப் பிரிந்து சென்று துன்பம் ஏற்படுத்திய தலைவன் இன்பமாக இருக்க வேண்டும் என்கிற தலைவியின் பரிதவிப்பு நெஞ்சுருகச் செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.