தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

கொவைட்-19 நோய்த் தொற்று காரணமாக மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் வீட்டில் முடங்கிவிட்ட  பலரில்,  ஒரு சிலர் மட்டும்தான் அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

கலாரசிகன்


கொவைட்-19 நோய்த் தொற்று காரணமாக மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் வீட்டில் முடங்கிவிட்ட  பலரில்,  ஒரு சிலர் மட்டும்தான் அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள். படிக்காமல் விட்டிருந்த புத்தகங்களைப் படித்தவர்கள் பலர் என்றால், எழுதிக் குவித்தவர்கள் சிலர்.

பெரியவர் ப.முத்துக்குமாரசுவாமி ஐயா, அகவை 85 கடந்தும் சோர்வில்லாமல் எழுதிக் குவிக்கிறார். அவருக்குப் பொதுமுடக்கம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துவிட்டது.  கடந்த ஆறு மாதங்களில் அவரது பணியில் எந்தவிதத் தொய்வும் ஏற்படவில்லை.

ஏற்கெனவே, அவர் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் 127. "கம்பனின் கவிச்சாறு', " பாரதி 100', "சிலம்பில் சிதறிய முத்துக்கள்',  வாலி வதம் குறித்த "சொல்லம்பும் வில்லம்பும்',  "புறநானூற்றுப் புதையல் (50)',  "நினைக்கப்பட வேண்டியவர்கள்' என்று மேலும்  ஏழு அரிய நூல்களை அச்சுக்கு அனுப்பி இருக்கிறார்.

ஸ்டாலின் குணசேகரன் "விடுதலை வேள்வியில் தமிழகம்' தொகுப்பின் மூன்றாவது பாகத்தை அநேகமாக முடித்துவிட்டதாகச் சொன்னார். மூன்றாவது புத்தகத்தைத் தொகுக்கும்போதுதான் இரண்டு தொகுப்புகளிலும் விடுபட்ட ஏராளமான பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்துத் தெரியவந்தது என்கிறார் அவர்.

அது போதாதென்று இன்னொரு யோசனையை  இறையன்பு இ.ஆ.ப. அவரிடம் சொல்ல, அந்தப் பணியிலும் இறங்கி இருக்கிறார் ஸ்டாலின் குணசேகரன். தனது வாழ்நாள் சாதனைப் படைப்பான,  "விடுதலை வேள்வியில் தமிழகம்' தொகுப்புக்காக அவர் எதிர்கொண்ட சோதனைகள், சவால்கள், ஆச்சரியங்களை ஓர் இணைப்பு நூலாகப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார் ஸ்டாலின்.

இரண்டு பேரை மட்டும்தான் நான் அடையாளம் காட்டியிருக்கிறேன். இவர்களைப் போல, இன்னும் பலர் பொதுமுடக்கத்தைப் பயனுள்ளதாக்கித் தமிழுக்கும், தமிழகத்துக்கும் அரும்பணியாற்றி இருக்கிறார்கள். 


மணிமேகலைப் பிரசுரம் முனைவர் ரவி தமிழ்வாணனிடமிருந்து, அவர் நடிகர் சிவகுமாருக்கு எழுதிய  கடிதத்தின் நகல் எனக்கு அனுப்பப் பட்டிருந்தது. கோவை விஜயா  வாசகர் வட்டத்தால் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் "கி.ரா' விருதுக்கான பரிசுத் தொகையை, சக்தி மசாலா குழுமத்திடம் பரிந்துரை செய்து சிவகுமார் பெற்றுத் தந்ததற்கு நன்றிகூறி எழுதப்பட்ட கடிதம்  அது.

"கி.ரா.' விருது குறித்து மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு. விருதுத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அந்த காணொலி விழாவில் நீதிபதி அரங்க. மகாதேவன் முன்மொழிய,  "அதற்கென்ன செய்துவிட்டால் போயிற்று' என்று சக்தி மசாலா குழும அதிபர்கள்  துரைசாமி - சாந்தி துரைசாமி தம்பதியர் அதற்காகவே காத்திருந்ததுபோல அறிவித்துவிட்டனர். இது போதாதென்று,  நிகழ்ச்சியைக் காணொலியில் பார்த்துக் கொண்டிருந்த துபாய் அன்பர் ஒருவர் மேலும் ரூ. ஒரு லட்சத்தை எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்குக் காசோலை யை அனுப்பியிருக்கிறார்.

ரவி தமிழ்வாணனின் கடிதத்திலிருந்து கிடைத்த கூடுதல் தகவல் -  தற்போது இருக்கும் தங்களது தி.நகர் தணிகாசலம் சாலை அலுவலகத்துக்கு அருகிலேயே மணிமேகலைப் பிரசுரம் புதியதாக புத்தக விற்பனை நிலையம் ஒன்றைத் திறக்க இருக்கிறது.


தமிழகத்தில் வ.வே.சு. ஐயர் போல,  தேசியத் தளத்தில்  தவறான புரிதலால் விமர்சிக்கப்படுபவர்  வீர ஸாவர்க்கர் என்று  அழைக்கப்படும்  விநாயக தாமோதர ஸாவர்க்கர் என்கிற புரட்சியாளர். சுதந்திரப் போராட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்போல,  வீர ஸாவர்க்கரும், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஒத்துக் கொள்ளாதவர். பிரிட்டிஷ் காலனிய அரசுக்கு சிம்ம சொப்பனமாக  விளங்கியவர்.

வீர ஸாவர்க்கர் சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷாரால் கொச்சைப்படுத்தப்பட்ட 1857 அரசியல் புரட்சி குறித்து எழுதிய புத்தகம்தான் "எரிமலை' அல்லது "முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்' என்கிற புத்தகம். இந்தப் புத்தகம் ஒன்றுதான், பிரிட்டிஷாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த 1857 புரட்சி குறித்த சரியான, முழுமையான பதிவு.

பன்றிக் கொழுப்பு தடவிய தோட்டாக்கள்தான் காரணமென்றும், அயோதித்யாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதுதான் புரட்சிக்கு வித்திட்டது என்றும் கூறுவது வரலாற்றுப் புரட்டு என்கிறார் ஸாவர்க்கர். 1857 புரட்சி குறித்த சரியான பார்வை ஸாவர்க்கருடையது மட்டுமே, என்று நேதாஜியே கூறியிருக்கிறார் என்றால்,  அதற்கு மேல் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம்  செய்திருப்பவர் "ஜெயமணி' சுப்பிரமணியம். தஞ்சை மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தைச் சேர்ந்த  சுப்பிரமணியம், 1937-இல் மலேசியா சென்று அங்கு "ஜெயமணி' என்கிற தமிழ் தினசரியைத் தொடங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் செயலாளராகவும் பணியாற்றிவர் இவர். நேதாஜியின் மரணத்துக்குப் பத்து தினங்களுக்கு முன்பு அவருடன்  ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிய பாக்கியசாலி.  1942-இல் தாயகம் திரும்பிய பிறகு "கல்கி' இதழில் இணையாசிரியராகப் பணியாற்றியவர்.

 92 வயது நிறைவாழ்வு வாழ்ந்து கடந்த 2002-இல் இறையடி சேர்ந்த "ஜெயமணி' சுப்பிரமணியம் மொழியாக்கம் செய்திருக்கும் வீர ஸாவர்க்கரின் "எரிமலை' புத்தகத்தைப் படித்து முடித்ததும், அது  எனக்குள் ஓர் எரிமலையை உருவாக்குவதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.


கவிஞர் பழநி பாரதியிடம் நான் நெருங்கிப் பழகியவன் அல்லன். ஆனால், அவருக்கு அறிமுகமானவன். அவருடைய கவிதைகளைப் படித்து ரசிப்பவன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான  அவரது கவிதைத் தொகுப்பு, "ஒளி உன்னால் அறியப்படுகிறது'. அதில் நான் ரசித்த கவிதைகளில் ஒன்று இது -
ஒரு பிடி மண்தான் மணற்கடிகைக்குள் தலைகீழாக விளையாடுகிறது காலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT