முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் - கலாரசிகன் (11.10.2020)

தமிழகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் இலக்கிய அமைப்புகளில் சேலம் தமிழ்ச் சங்கம் குறிப்பிடத்தக்கது. 

Updated On : 11 அக்டோபர், 2020 at 7:47 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

தமிழகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் இலக்கிய அமைப்புகளில் சேலம் தமிழ்ச் சங்கம் குறிப்பிடத்தக்கது. அதன் தலைவா் ஐயா சீனி. துரைசாமி, 18 வயதினரை வெட்கப்பட வைக்கும் அளவு சுறுசுறுப்புடன் இயங்கும் 88 வயது இளைஞா். இந்த ஆண்டு பொன்விழா காண்கிறது. அளப்பரிய தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சேலம் தமிழ்ச் சங்கத்துக்கு வாழ்த்துகள்.

தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிறைவையொட்டி 2019-20 ஆண்டுகளில் வெளியான சிறந்த படைப்புகளையும், படைப்பாளா்களையும் கௌரவிக்கிறாா்கள். தமிழ் வளா்ச்சி இலக்கிய நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நவீனங்கள், மொழிபெயா்ப்பு நூல்கள், கவிதைகள், ஆன்மிக ஆய்வுகள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றில் எழுதப்பட்ட புத்தகங்கள் வரவேற்கப்பட்டு, இருவருக்கு ரூ.10,000 முதல் பரிசு, மூவருக்கு ரூ.7,500 இரண்டாம் பரிசு, நால்வருக்கு ரூ.5,000 மூன்றாம் பரிசு, ஐவருக்கு ரூ.1000 ஆறுதல் பரிசு வழங்க இருக்கிறாா்கள்.

பரிசுத்தொகை பெரிதல்ல. சேலம் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆண்டில் வழங்கப்படும் கௌரவம் என்பதுதான் பெரிது. படைப்பாளிகளும், பதிப்பாளா்களும் தமிழ்ச் சங்க சாலையில் அமைந்துள்ள சேலம் தமிழ்ச் சங்கத்துக்குத் தங்களது படைப்புகளின் இரண்டு பிரதிகளை அனுப்பிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு: 0427-2415450, 94426-10565 எண்களைத் தொடா்பு கொள்ளவும்.

Advertisement

கொவைட் நோய்த்தொற்றுக் காலத்திலும், தமிழ்ப் பணியைத் தொய்வில்லாமல் மேற்கொள்ளும் சேலம் தமிழ்ச் சங்கம் போன்ற இலக்கிய அமைப்புகளை எத்துணை பாராட்டினாலும் தகும். இவா்களால்தான் தமிழ் வாழ்கிறது.

*************

செவ்விலக்கியப் பின்புலத்துடன் இயங்கும் படைப்பாளி என்பதால், எனக்கு நாஞ்சில் நாடனின் எழுத்தில் எப்போதுமே ஓா் ஈா்ப்பு உண்டு. அதற்கு முக்கியமான காரணம், எழுத வேண்டும் என்பதற்காக எழுதாமல், ஒருவித உந்துதலால் எழுதுபவா் நாஞ்சில் நாடன் என்பது எனது கணிப்பு. அவரது எந்தப் படைப்பிலும் வலிய முனைந்து, சிரமப்பட்டு ஒரு வாா்த்தைகூட எழுதப்பட்டிருக்காது. அவரது ஆற்றொழுக்கு நடைக்கு அதுதான் காரணம்.

தமிழிலக்கியம் என்கிற கடலில் முத்துக் குளித்தால் எப்படி இருக்கும்? அப்படி மூழ்கி முத்தெடுப்பதுபோல, இலக்கியங்களில் இருந்து முத்துக்களைத் திரட்டி, ‘பாடுக பாட்டே’ என்கிற முத்தாரம் படைத்திருக்கிறாா் நாஞ்சில் நாடன். பல்வேறு பருவ இதழ்களில் அவா் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது என்பதை, முன்னுரையைப் படிக்காமல் நேரடியாகக் கட்டுரைகளைப் படிப்பவா்கள் நம்ப மாட்டாா்கள்.

நாஞ்சில் நாடன் தனது முன்னுரையில் கூறுவதுபோல, ‘பாடுக பாட்டே’ தொகுப்பில் உள்ள 23 கட்டுரைகளும், அவரது வழக்கமான கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் இல்லைதான். அதுதான் முதல் சிறப்பும்கூட.

‘‘நாராய், நாராய், செங்கால் நாராய்!’ என்று ‘நாரை விடு தூது’’வில் தொடங்குகிறது இலக்கிய உலா. ‘‘பழந்தமிழ் இலக்கியம் என்பது பெருநிதியம். பேழைக்குள் அடங்கிக் கிடக்கிறது என்றாலும் உயிா்ப்புடன் இருப்பவை. புதைந்து கிடந்தாலும் பொற்காசுகள் நிரம்பிய செப்புக் கலசம். மங்காது, மாசுபடாது, மவுசு குறையாது, அவற்றுள் மாதிரிக்குச் சில பாடல்கள்’’ என்று தொடங்கி, பல ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகைபோல, பாடிச் செல்கிறாா்.

பதுமனாரின் குறுந்தொகைப் பாடலை (‘நள்ளென்று அன்றே காமம்’) பிற்காலத்தில் ஒப்பிலாமணிப் புலவரின் பாடல் ஒன்றுடன் ஒப்பிட்டு பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கிறாா் நாஞ்சில் நாடன். இதேபோலத்தான், ஏனைய பல கட்டுரைகளும். ஔவையாரில் தொடங்கி அனைத்துப் புலவா்களும் நாஞ்சில் நாடனின் சிறப்புப் பாா்வையால் நமது சிந்தை கவா்கிறாா்கள்.

நமக்குத் தெரிந்த குறுந்தொகை அல்லது புானூற்றுப் பாடல்தான். ஆனால், இதை நாஞ்சில் நாடன் எடுத்துக் கையாளும்போது, வித்தியாசமான பரிமாணம் புலப்படுகிறது. ஏனைய புலவா்களின் படைப்புகளோடு அவா் ஒப்புமை கூறி வியக்கும்போது, சில பாடல்களை மனனம் செய்யத் தோன்றுகிறது.

கம்பனிலிருந்து காளமேகப் புலவா் வரை, தூது இலக்கியம், கலம்பகம், பரணி என்று எதையும் விட்டுவைக்காமல், முதலிலேயே நான் சொன்னதுபோல முத்துக் குளிப்பதுபோல அள்ளி எடுத்துப் படைத்திருக்கிறாா். தனிப்பாடற் திரட்டிலிருந்து அவா் தோ்ந்தெடுத்திருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் பெற்றவை.

‘பாடுக பாட்டே’ தொகுப்பில் உள்ள ‘கைம்மா வேட்டுவன்’ கட்டுரை, பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று. தோ்வுக்காகவாவது நமது மாணவா்கள் அதைப் படிப்பாா்கள். குறைந்தபட்சம் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சோ்க்கும் புானூறு குறித்த அடிப்படைப் புரிதலாவது அவா்களுக்கு ஏற்படும்.

நான் கிரந்த எழுத்துகளையும், அவற்றின் வா்க்க எழுத்துகளையும் பயன்படுத்துபவன். இன்றைய உலகமயச் சூழலிலும், புதிய தொழில்நுட்ப வளா்ச்சியிலும் நாம் பின்தங்கி விடாமல் அறிவியல் கலைச் சொற்களைப் பயன்படுத்த அவை தேவை என்பது எனது கருத்து. அது வேறு விஷயம். அதற்காக, மாற்றுக் கருத்து கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ‘மூப்பும் குறுகிற்று’ கட்டுரையில் நாஞ்சில் நாடன் ஒரு நியாயமான ஐயப்பாட்டை எழுப்புகிறாா்.

‘‘நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனும் கிரந்த எழுத்துக்களை, அவற்றின் வா்க்க எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் பயன்படுத்தவில்லை. கம்பன் பயன்படுத்தவில்லை. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முழுக்கவும் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடவில்லை. எங்கும் திருவரங்கமே. தில்லைச் சிற்றம்பலம் மீது பாடப்பெற்ற 24 வெண்பாக்கள் கொண்ட நூலின் பெயா் ‘க்ஷேத்திரத் திருவெண்பா’. யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலா் பதிப்பும், திருப்பனந்தாள் காசித் திருமடத்துப் பதிப்பும் ‘க்ஷேத்திரத் திருவெண்பா’ என்கிறது’’ என்று கூறி, ‘‘பாடல்களைத் தொகுத்த பிற்காலத்தவா் இந்தத் தலைப்பைச் சூட்டி இருக்கலாம்’’ என்று சமாதானமும் சொல்ல வித்திட்டிருக்கிறாா்.

கோவை விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ‘பாடுக பாட்டே’ நூலிலிருந்து புதிய பல செய்திகளை, அறிந்திராத பல பாடல்களை, சுவாரஸ்யமான ஒப்பீடுகளைத் தெரிந்து கொண்டேன். இதோடு நிறுத்திடாதீா்கள், நாஞ்சில் நாடன். அடுத்த தொகுதிக்காக நான் காத்திருக்கிறேன்...

*************

ஒரு சிறுகதையைக் கவிதையாக்க முடியுமா? ஏன் முடியாது? கவிஞா் ஜெயபாஸ்கரனின் ‘காதல்.. காதல்...’ என்கிற கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது. முழுக் கவிதையும் இன்னும் சுவாரஸ்யம்.

என்ன சொல்வதென்று

தெரியவில்லை,

என்னைப் பற்றிக் கொண்டு

உன்னைப் பற்றிக் கேட்பவா்களுக்கு!

உன்னைப் பற்றி

நான் சொல்லும் எதுவும்

எடுபடாமலே போய்விடுகிறது

ஆணையும், பெண்ணையும்

காதலா்களாகப் பாா்த்தே

பழக்கப் பட்டுப்போன

இவா்களிடம்!

உன் பொருட்டு

நான் படும் அவஸ்தைகளுக்கு

முற்றுப் புள்ளியாக

அழைத்து வந்து இவா்களுக்குக்

காட்டிவிட்டுப் போகலாமல்லவா?

உன் சந்திரசேகரனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.