இல்லறம் ஏற்கும் இணையர் இருவரும் வாழ்க்கையில் எதுபோல இருக்க வேண்டும் என்பதைப் பல உவமைகளின் வழி நமது இலக்கியங்கள் கூறுகின்றன. புகழ் பூத்த பெரும் புலவர்கள், தாம் கண்ட காட்சிகளினூடே கருத்தைச் செலுத்தி, கற்பனை நயத்தோடு அக்காட்சிகளைக் கவிதையாகச் சொல்லும்போது, அக்காட்சி மாட்சியுறுகின்றது.
அப்படியொரு காட்சி பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள "திருஈங்கோய் மலை எழுபது' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. நக்கீரதேவர் இயற்றிய, கவிச்சுவையும் கற்பனைச் சுவையும் நிரம்பிய அற்புதமான நூல் இது. திரு ஈங்கோய் மலையிலே சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். அம்மலையின் சிறப்பை, இயற்கைக் காட்சிகளின் மூலம் காட்டுகிறார் புலவர்.
வேட்டைக்குச் சென்றான் கரிய மலைக்குறவன் ஒருவன். நீண்ட நேரம் அலைந்து களைத்து, இறுதியில் ஒரு மானைக் கண்டு, அதன் மீது அம்பெய்திக் கொல்வதற்குத் தருணம் பார்த்து, வில்லிலே கூர்மையான அம்பையும் பூட்டிக்கொண்டு காத்திருந்தான்.
வில் நாணை இழுத்து, அம்பு செலுத்திக் கொல்லக்கூடிய தருணம் பார்த்து வில் நாணை இழுத்தான். ஆனால், ஒரு கணப் பொழுதுக்குள்ளே அம்பெய்யும் நோக்கத்தைக் கைவிட்டு விட்டான். அந்த மானைக் கொல்ல மனம் வரவில்லை. மானின் மீது அவனுக்குத் தனி விருப்பமே வந்துவிட்டது.
அதற்குக் காரணம், குறவன் எய்வதற்காக அம்பைத் தொடுத்து நாணை இழுக்கும் போது, அந்த மான் திடீரென அவனைத் திரும்பிப் பார்த்தது. கண்களை அகல விரித்து மருட்சி பொருந்திய பார்வையை வீசியது. அம் மானின் விழிகள், அம்மலைக் குறவனின் விழிகளில் பட்டுத் தெறித்தது.
ஒரு கணம் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்துவிட்டான். பெண்ணை "மான் விழியாள்' என்பது பொதுவழக்கு.
தன் மனைவி நாணத்தோடு தன்னைப் பார்க்கும் பார்வையிலே இருந்த நளினத்தை, நாணத்தை அந்த மானின் மருண்ட பார்வையிலே கண்டான். அதனால், அந்த மானைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. "மானே, நான் உன்னைக் கொல்ல மாட்டேன்' என்ற பாவனையில் அதற்கு விடை கொடுத்து வீடு திரும்பினான் என்று ஒரு காட்சியைக் காட்டுகிறார் நக்கீரதேவர்.
"எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்
கையில் கணைகளைந்து கன்னிமான் } பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு' (பா.12)
பெண்மானின் கண்ணழகிலும் அதன் பார்வையிலும் தன் மனைவியின் கண்ணழகையும் பார்வையின் அழகையும் கண்ட வேடனின் செய்கை தன் மனைவி மேல் கொண்டிருந்த ஆழமான அன்பை காட்சிப்படுத்துகிறது.
இன்னொரு நாள் வேட்டைக்குச் சென்றான். முன்பு போலவே ஓர் அழகிய பெண்மானைக் கண்டான். இப்பொழுது அவனுக்கு ஓர் எண்ணம் வந்தது. "இந்தப் பெண்மானை உயிரோடு பிடித்து வந்து மனைவிக்குத் தோழியாக்கினால் என்ன' என்று நினைத்தான்.
உடனே அதை வலைவீசிப் பிடித்து வந்தான். அந்தப் பெண்மானைக் கொண்டு வந்ததற்காக மனைவி மிகவும் மனம் மகிழ்வாள் என்று ஆசையோடு, ஆவலோடு அவன் வீட்டுக்கு வருகிறான். ஆனால், அந்தப் பெண்மானைப் பார்த்த குறத்தி மிகவும் வேதனைப்பட்டாள்.
கணவன் என்ன கொண்டு வந்து கொடுத்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு மகிழ்கின்ற அவளது உள்ளம், இன்று மட்டும் கொதிக்கத் தொடங்கியது அவனுக்கு வியப்பாக இருந்தது. அவள் கோபம் மட்டுமல்ல, வழக்கத்திற்கு மாறாகக் கணவனை திட்டவும் தொடங்கினாள். "கலை மானைத் தவிக்க விட்டுவிட்டு, அதன் துணை மானான பிணை மானை ஏன் பிரித்துப் பிடித்து வந்தீர்கள்? இது எவ்வளவு தீமையான செயல் என்று உங்களுக்குத் தெரியாதா?' என்று திட்டினாள்.
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் } கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந் தகையான் வெற்பு. (பா.60)
கணவன் மனைவியாக, இன்பமாகக் குடும்பத்தில் இணைந்து வாழ்ந்துகொண்டு, தங்கள் மகிழ்ச்சிக்காக மான்களின் அன்பான குடும்பத்தைப் பிரிப்பது எவ்வளவு கொடுமையானது என்று எண்ணிய அந்தக் குறத்தியின் உள்ளத்தின் மாண்பு உயர்ந்ததல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.