முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (28-08-2022)

எனது சிறிய தகப்பனார் வி. முருகேசன் கடந்த சனிக்கிழமை இரவு உலக வாழ்வை நீத்தார். எனக்கும் அவருக்கும் ஏழு வயதுதான் வித்தியாசம். எனது தாயாரின் மூத்த புதல்வன் என்கிற அளவில் இருந்தார் அவர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
பகிர்:

எனது சிறிய தகப்பனார்வி. முருகேசன் கடந்த சனிக்கிழமை இரவு உலக வாழ்வை நீத்தார். எனக்கும் அவருக்கும் ஏழு வயதுதான் வித்தியாசம். எனது தாயாரின் மூத்த புதல்வன் என்கிற அளவில் இருந்தார் அவர். அவரது மறைவு என்னில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு சொல்லி மாளாது.

நான் சம்ஸ்கிருதம் படித்ததில்லை என்பதைப் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அவர் சம்ஸ்கிருதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

எனக்கு புராண, இதிகாசங்களிலோ, காளிதாசன் உள்ளிட்ட சம்ஸ்கிருத ஆளுமைகள் குறித்தோ எந்த ஐயப்பாடு எழுந்தாலும், நான் தொடர்பு கொள்வது அவரைத்தான்.

அவருக்கு காளிதாசன் மீது அப்படியொரு ஈர்ப்பு. சாகுந்தலமும், மேகசந்தேசமும், குமார சம்பவமும் தலைகீழ்ப் பாடம். அவர் சர்வ சாதாரணமாக காளிதாசனிலிருந்து மேற்கோள் காட்டுவார். அவ்வப்போது நான் ஏதாவது சம்ஸ்கிருத மேற்கோள் காட்டியிருந்தால், அது அவர் எனக்குத் தந்த கொடை.

"கல்கி' ப்ரியன், அய்யாறு உள்ளிட்ட எனது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் அவர் நன்கு அறிமுகம். நாங்கள் வெளியூர் செல்லும்போது, சில பயணங்களில் அவர் எங்களுடன் இணைந்து கொள்வது வழக்கம். வழிநெடுக அவர் சுவாரஸ்யமாகச் சொல்லும் சம்பவங்களையும், சம்ஸ்கிருத இலக்கியச் சுவைகளையும், புராண, இதிகாசக் கதைகளையும் கேட்பது அலாதிஇன்பம்.

புராணம், இதிகாசம், சம்ஸ்கிருதம் என்று தெரிந்து வைத்திருப்பதால் அவரை ஒரு ஆசாரவாதி என்று கருதிவிடலாகாது. அவர் கவிஞர் கண்ணதாசனின் பரம ரசிகர். திரைப்படங்களைப் போலவே, கர்நாடக சங்கீதத்திலும் அவருக்கு ஈர்ப்பு உண்டு. தமிழ், மலையாளம், ஹிந்தி என்று எல்லா மொழித் திரைப்படங்களையும் பார்த்துவிடுவார்;விமர்சிப்பார்.

எனது தாயார் மறைந்தபோது, எனக்குக் கண்புரை அறுவை சிகிச்சை நடந்திருந்த நேரம். கண் கலங்கக் கூடாது. அதனால் என் தாயாரின் முதல் நாள் இறுதிச் சடங்கை என் சார்பில் மயானத்தில் நடத்தியது, என் தாயார் தனது மூத்த புதல்வனாகக் கருதிய எனது சித்தப்பாதான். இப்போது அவர் மறைந்தபோது, ஆண் வாரிசு இல்லாததால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அவரது கடைசி நிமிடங்களில் அவரது மகள்கள், மருமகன்கள், நான், எனது சகோதரி, எங்கள் குழந்தைகள் என்று அனைவரும் சுற்றி இருந்து இறுதி விடை கொடுக்க முடிந்தது. இதற்குப் பெயர்தானோ "வாங்கி வந்த வரம்?'

----------------------------------------------------------------------

அண்மையில், கவிஞர் உஸ்மானை சந்திக்க வானதி பதிப்பகம் சென்றிருந்தபோது, அங்கே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடேயப்பா, எத்தனை எத்தனை ஆளுமைகள், எத்தனை எத்தனை புத்தகங்கள் "வானதி' இலச்சினையோடு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது என்கிற பிரமிப்பு மேலிட்டது.

அலமாரியில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் சட்டென எனது கண்ணில் பட்டது ராஜாஜி எழுதிய "வள்ளுவர் வாசகம்'. ராஜாஜியின் தமிழ்ப் பற்றும், கம்பனிலும், வள்ளுவத்திலும் அவருக்கு இருந்த ஆழங்காற்பட்ட புலமையும் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவை எடுத்துச் சொல்லப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, வேண்டுமென்றே மறைக்கவும் படுகிறது.

"கல்கி'யில் வெளியான "வள்ளுவர் வாசகம்' தொடர், 1966-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியில் புத்தகமாக வெளியிடப்பட்டது. வெளியான ஆறே மாதங்களில் அந்நூல் 15 பதிப்புகள்
கண்டது.

"ஒரு காலத்தில் எழுதியது அநேகமாக மற்றொரு காலத்துக்குப் பொருந்தாது. ஆயினும் சில விஷயங்கள் எக்காலத்துக்கும் உண்மை. முனிவர் வள்ளுவரின் வாசகம் இத்தகையது. அவர் பாதங்களை மனத்தால் தொட்டு வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கிறேன்' என்று தொடங்கி, "திருக்குறளில் உள்ள எல்லா விஷயங்களையும் எடுத்துக் கொண்டு நான் இந்த நூலில் எழுதவில்லை. அறத்திற்கு சம்பந்தப்பட்ட குறள்களை மட்டும் வைத்து அவற்றில் சிலவற்றைத் தேர்ந்து எழுதி வந்தேன். தமிழ் மக்களுக்கு இந்தச் சிறு புத்தகம் பயன்பட வேண்டுமென்கிற பிரார்த்தனையோடு முடிக்கிறேன்' என்று நிறைவு
செய்கிறார்.

சுமார் 300-க்கும் குறைவான குறள்களைத் தேர்ந்தெடுத்து, அதை அவர் விளக்கி இருக்கும் விதம் தனித்துவம் வாய்ந்தது. இது அறிஞர்களுக்காக எழுதப்பட்டதல்ல. பாமரர்களுக்கு வள்ளுவப் பேராசானின் பேருண்மைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது.

1981 ஜனவரி 4-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து வந்திருந்த தமிழன்பர்களுக்கு அமரர் ராஜாஜிஎழுதிய இந்த "வள்ளுவர் வாசகம்' நூல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதற்கு மேலும் இந்தப் புத்தகம் குறித்து நான் சொல்ல வேண்டுமா என்ன?


விமர்சனத்திற்கு வந்திருந்தது கவிஞர் ஆசு என்று அழைக்கப்படும் ஆர். சுப்பிரமணியனின் கவிதைத் தொகுப்பான "ஆசு கவிதைகள்'. அதில் இருந்த "இரங்கற்பா' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள்.

முன்பு ஒரு நாளில்
அவன் முகவரியோடு
இந்த மண்ணில்
வாழ்ந்தவன்
உறவுகளின் வழியே
வாழ்வை
அன்பெனப் போற்றியவன்
அவனொரு மனிதன்
அவனுக்கொரு வாழ்வு
இருந்தது
அவனுக்கொரு ஈவு
இரக்கம் இருந்தது...

முழு கட்டுரையைப் படிக்க →