இந்த வாரம் கலாரசிகன் - (05-06-2022)
அரசு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும்தான் தமிழை வளர்க்கின்றன என்று நாம் நினைத்தால் அது முழுமையான உண்மையல்ல.
அரசு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும்தான் தமிழை வளர்க்கின்றன என்று நாம் நினைத்தால் அது முழுமையான உண்மையல்ல. அவற்றின் பங்களிப்பு இல்லாமல் இல்லை, அவ்வளவே. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள எத்தனை எத்தனையோ அமைப்புகளின் தன்னார்வ முயற்சிகள்தான், தமிழ் அழிந்துவிடாமல் இன்றுவரை காப்பாற்றி வருகின்றன. சொல்லப்போனால், தமிழ் சீரிளமை மாறாமல் புதுப் பொலிவுடன் வழக்கு மொழியாக பவனி வருவதற்கு அந்த அமைப்புகள்தான் உண்மையான காரணம்.
தமிழ் வளர்க்கும் பணியில், திருக்குறள் பரப்பும் அமைப்புகளும், கம்பன் கழகங்களும்தான் முன்னிலை வகிக்கின்றன. குறளைப் பரப்புவதைத் தங்களது வாழ்நாள் கடனாக நினைத்துச் செயல்படும் அன்பர்கள் ஏராளமானோர் உண்டு. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் தொடங்கி, குறள் பரப்பும் அமைப்புகள் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கில் இயங்குகின்றன.
அந்த அமைப்புகள் அரசின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. ஊடக வெளிச்சம் பெற விழைவதும் இல்லை. வள்ளுவம் வாழ்க்கை நெறியாகத் தமிழகத்தில் தழைக்க வேண்டும் என்கிற ஒற்றை முனைப்புடன் செயல்படும் அந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என்கிற எனது கனவு இன்றுவரை நனவாகவில்லை.
அமைப்புகள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பல ஆர்வலர்கள் குறளைப் பரப்ப மேற்கொள்ளும் முயற்சியில் கற்பூரமாகத் தங்களைக் கரைத்துக் கொண்டதைக் கடந்த 15 ஆண்டு "தினமணி' வாழ்க்கையில் நான் பார்த்து, வியந்து அவர்களை மனதிற்குள் தொழுது, போற்றி வருகிறேன். அந்தப் பட்டியலில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளைக்கும் ஓர் இடமுண்டு.
பூவை.பி.தயாபரன் 1997-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் (இப்போது தென்காசி மாவட்டம்) ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் தன் மகன் திருமூலநாதன் பெயரால் தொடங்கிய "திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை' இந்த ஆண்டில் வெள்ளிவிழா காண்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி நடத்தப்பட்டு விருதும், பரிசும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் அந்தப் போட்டி இந்த ஆண்டு, இன்று திருச்சியில் நடைபெற இருக்கிறது.
தமிழகமெங்கும் இருந்து மாணவர்கள் கலந்துகொள்ள வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போட்டி மையமாகத் திருச்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இயன்றவரை நான் அந்த நிகழ்வில் கலந்து கொள்வது வழக்கம். தயாபரன் நடத்தும் தமிழ் வேள்வியில் என்னால் செய்ய முடிந்த பங்களிப்பு கலந்து கொள்வது மட்டும்தான்.
இந்த ஆண்டு நிகழ்வில் நீதியரசர் அரங்க. மகாதேவன் தலைமை வகிக்கிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை சிறப்புரை வழங்குகிறார். இந்தப் பத்தியை எழுதும் இந்த நேரம் வரை, நாளைய (ஞாயிறு) நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மனம் "கிளம்பு' என்று விரட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு அற்புதமான உரைகளைத் தவறவிடக்கூடாது என்று உள்ளுணர்வு ஊக்குவிக்கிறது. பார்ப்போம்.
வெள்ளிவிழா காணும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளைக்கு வாழ்த்துகள்!
--------------------------------------------------
தமிழக அரசு, தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடும் பல்வேறு அறிவிப்புகளில் இலக்கியத்திற்கான சில பாராட்டுக்குரிய அறிவிப்புகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் இதழியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கான "கலைஞர் எழுதுகோல் விருது'ம் ஒன்று. ரூ. 5 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றும் அடங்கிய இந்த ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கப்பட்டிருப்பது மெத்தச் சரியான தேர்வு.
ஒட்டுமொத்த உலகமும் இரண்டாம் உலகப் போரின் கோரப் பிடியில் சிக்கியிருந்த காலகட்டத்தில், 1942-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாளிதழ் தினத்தந்தி. தமிழ் மண்ணிலிருந்து எப்படி "தினத்தந்தி' நாளிதழைப் பிரிக்க முடியாதோ, அதேபோல "தினத்தந்தி' நாளிதழிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத பெயர் ஐ.சண்முகநாதன்.
"தினத்தந்தி' நாளிதழுடன் பல ஆண்டுகள் தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்திய ஐ.சண்முகநாதனால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பலர். சுதந்திர இந்தியத் தமிழக அரசியல் நீரோட்டத்தின் ஆட்சி மாற்றத்திற்கும், காட்சி மாற்றத்திற்கும் நேரடி சாட்சியாக இருக்கும் பத்திரிகையாளர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
அவரது தலைமையில் "தினத்தந்தி' வெளிக்கொணர்ந்த "வரலாற்றுச் சுவடுகள்' என்கிற தொகுப்பு தமிழில் தொகுக்கப்பட்ட அற்புத ஆவணம். அதில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லையாயினும், கங்கை, யமுனையுடன் வெளியில் தெரியாமல் நிலத்தடியில் பாயும் "சரஸ்வதி நதி' போல, "வரலாற்றுச் சுவடுகள்' தொகுப்பின் பின்னணியில் ஐ.சண்முகநாதன் இருந்தது அனைவருக்கும் தெரியும். விருது வழங்கும்போது அதைக் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக தமிழக அரசைப் பாராட்டலாம்.
பாராட்டிவிட்டுக் குறை சொல்வதா என்கிற தயக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. திரைத்துறையினருக்கு வழங்கப்படும் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்' விருதுக்கு ரூ.10 லட்சமும், இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் "கலைஞர் எழுதுகோல்' விருதுக்கு ரூ. 5 லட்சமும் என்பது சற்று உறுத்தலாகத் தெரியவில்லையா? எழுத்தில் ஏன் இந்த "மேல், கீழ்' பாகுபாடு என்று கேட்கத் தோன்றுகிறது. கேட்டு விட்டேன்.
--------------------------------------------------
கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் பவித்ரா நந்தகுமார் எழுதிய கட்டுரைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் "தவமாய் தவமிருந்து' என்றொரு கட்டுரை. அதில் மேற்கோளாகத் தரப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. யாருடைய கவிதை என்று குறிப்பிடப்படவில்லை.
பிள்ளை அழ அழ
பள்ளி விடுதிக்குள்
தள்ளிவிட்டு வந்தேன்
மனது வலிக்க வலிக்க
முதியோர் இல்லத்துள்
கொண்டுவந்து சேர்த்தான்
அவனைச் சொல்லிக் குற்றமில்லை!