ஆடி அசைந்து நடப்பவை அழகிய இளமயில்கள். அவை உகுத்துக் கழித்த பீலி என்னும் இளநீல இறகுகள் ஆங்காங்கே இறைந்து கிடப்பனவாகும். அவற்றை வடுகர்கள் மூங்கிலைப் பிளந்து அமைத்த தங்கள் வில்லிலே பொருத்திக் கொள்வார்கள். ஓசையிட்டுக் கொண்டு செல்லும் அம்பினைப் பூட்டி அடிப்பதற்கு ஆயத்தமாக இருப்பவர்கள் மாறுபாடு மிகுந்த வடுகர்கள்.
வடக்கே மெளரிய அரசை அகலப்படுத்தியவர் சந்திரகுப்தர். அவர் காலம் கி.மு.322-298 ஆகும். அவர் தென்னாட்டிலும் தங்கள் ஆட்சியை நிறுவ ஆசைப்பட்டார். அதனால் படையெடுத்து வந்தார்.
அப்போது தெலுங்கராகிய வடுகர், மோரியருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்கள் பனிமலைக் கல்லைப் படைநடக்க உடைத்தார்கள். ஒளிவீசும் தேர்ச்சக்கரங்கள் உருண்டோடும் வண்ணம் பெருங்காடுகளையும் அழித்தார்கள். பின்னேவரும் மோரியர் பெரும்படைக்கு முன்னே நடந்து முறையாக உதவினார்கள். இத்தகைய வரலாற்றுச் செய்தியை அருந்தமிழ்ப் புலவர் மாமூலனார் ஒரு பாலைத் திணைப் பாடலில் அழகாகக் கூறியிருக்கிறார். சங்க காலம் கி.மு.322-க்கு முன்னர் என்று தெரிகின்றது. இதை தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல்வில் சுற்றி, நோன் சிலை
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனை குரல் இசைக்கும் விரை செல் கடுங்கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங்குன்றத்து,
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்,
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
(அகநா.281)
இங்கே கொஞ்சம் இலக்கணம் இயம்புவது இன்றியமையாத
தாகும். நீண்ட நாள்களுக்கு முன் ஒருவர் "சங்கக் காலம்' என்றுதான் ஒற்றிட்டு எழுத வேண்டும் என்று வலியுறுத்தி, அப்படியே ஓர் இதழில் எழுதியிருந்தார்.
மழை பெய்யும் காலம் - மழை
காலம்- எழுவாய்;
மாரி பெய்யும் காலம் - மாரி
காலம் - எழுவாய்;
பருவ காலம் - இதைப் பெயரெச்சமாகக் கொள்ள வேண்டும்;
உரிய காலம் - தக்ககாலம்;
சங்கமானது மருவிய காலம் -
சங்க காலம்.
"அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப' என்பது தொல்காப்பிய நூற்பா (362). முதல் வேற்றுமையாகிய எழுவாய்த் தொடர்கள் இயல்பாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.