இந்த வாரம் கலாரசிகன் - (27-03-2022)
"இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை' என்கிற அமைப்பை கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார் பின்னலூர் மு.விவேகானந்தன்.
"இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை' என்கிற அமைப்பை கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார் பின்னலூர் மு.விவேகானந்தன். இந்த ஆண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியனும், உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவனும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் வெளியிட்ட "உத்தரவு' வித்தியாசமானது, வரவேற்புக்குரியது.
நீதித்துறை தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடை அளப்பரியது. பல ஆங்கிலச் சொற்களுக்கும், சம்ஸ்கிருதச் சொற்களுக்கும் தமிழ் வார்த்தைகளைத் தந்து மொழியை வளப்படுத்தி இருப்பதில் நீதித் துறையினர் பங்கு கணிசமானது. தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும்கூட நீதித்துறை முனைப்பு காட்டி இருக்கிறது. பள்ளிகளில் "திருக்குறள்' கட்டாயப் பாடமாக்கப்படுவது அவசியம் என்கிற நீதிபதி அரங்க. மகாதேவனின் தீர்ப்பு ஒன்று போதும் அதற்கு எடுத்துக்காட்டு.
பல உயர்நீதிமன்ற, கீழமை நீதிமன்ற நீதிபதிகளும், ஏராளமான வழக்குரைஞர்களும் பெரும் தமிழறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களது இலக்கியப் படைப்புகளும், உரைகளும், ஆராய்ச்சி மாணவர்களின் தேடல்களில் முதன்மை பெறுபவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் இலக்கிய உலகுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்து வந்திருக்கிறார்.
இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை நிகழ்ச்சியில் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியனின் அறிவிப்பு ஒன்றைத்தான் நான் "உத்தரவு' என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டேன்.
""சென்னை கம்பன் கழகத்தை வழிநடத்தியும், "ரசிகமணி' டி.கே.சி.யின் வட்டத் தொட்டியில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் இருந்தவர் உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.மகராஜன். அவரைத் தொடர்ந்து இலக்கியப் பணியாற்ற ஜஸ்டிஸ் எம்.எம். இஸ்மாயில் களமிறங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
"ரிலே' ஓட்டப் பந்தயத்தில் "பேட்டன்' எனும் அந்தக் குச்சியை அடுத்தகட்ட ஓட்டத்துக்கு இன்னொருவருக்குக் கைமாற்றம் செய்ய வேண்டும். இப்போது என்னிடம் இருக்கும் பேட்டனைப் பெற்றுக்கொள்ளத் தகுந்தவர் ஒருவர் கிடைத்திருக்கிறார். அவர் நீதிபதி அரங்க. மகாதேவன்'' என்று சொன்னபோது, அரங்கம் அதிர்ந்தது.
பெரும்பாலான பணிகளும், அமைப்புகளும், அவற்றை தொடர்ந்து நடத்த ஆளுமைகள் உருவாகாமல் போவதால் செயலிழந்து விடுகின்றன. தனக்குப் பிறகு இலக்கியப் பணியைத் தொடர ஒருவரை அடையாளம்காட்டப் பெரிய மனது வேண்டும். அது நீதிபதி வெ.இராமசுப்பிரமணியனுக்கு இருக்கிறது. நீதிபதிகள் மகராஜன், இஸ்மாயில், இராமசுப்பிரமணியனின் வரிசையில் இணைய, தமிழில் ஆழங்காற்பட்ட புலமை இருக்க வேண்டும். அதற்கான தகுதி நீதிபதி அரங்க. மகாதேவனுக்கு இருக்கிறது.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
பாரதியைப் போலவே, பள்ளிக்கூட நாள்களிலிருந்து என்னில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமை பகத்சிங். எதனால் பகத்சிங் மீது எனக்கு அப்படியொரு ஈர்ப்பு ஏற்பட்டது என்பதைச் சொல்லத் தெரியவில்லை. ஒருபுறம், காந்திஜியை எனது வழிகாட்டியாகக் கருதும் நான், இன்னொரு புறம் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்ட பகத்சிங்கை போற்றும் முரணுக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்தும் விடை கிடைக்கவில்லை.
இந்த ஆண்டும் மார்ச் 23-ஆம் நாள் புத்தகங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தபோது, பகத்சிங் குறித்த புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. அது தற்செயலான நிகழ்வு. அது ஏன் மார்ச் 23-ஆம் தேதி நடக்க வேண்டும்? விடையில்லை. அந்தப் புத்தகத்தைப் படிக்க அமர்ந்துவிட்டேன்.
என்.சொக்கன் எழுதியிருக்கும் "பகத்சிங்' என்கிற புத்தகத்தை நான் ஏற்கெனவே ஒரு முறை படித்திருப்பது, அதில் ஆங்காங்கே அடிக்குறிப்பு இருந்ததிலிருந்து தெரிந்தது. இந்திய வரலாற்றில் அகற்ற முடியாத ஓர் இடத்தைப் பிடித்த தேசப்பற்றாளர் பகத்சிங் குறித்து நான் படித்த புத்தகங்களில் இந்தப் புத்தகம் குறிப்பிடத்தக்கது.
பகத்சிங் தூக்குமேடையில் ஏறியபோது அவரது வயது 23. அந்த இளம் வயதில் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நினைத்து உருக வைத்த அந்த மாவீரன் மறைந்து 91 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைக்கும் தேசப்பற்று, வீரம், கொள்கைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது அவரது வாழ்க்கை.
அவர் தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. லாகூர் சிறைச்சாலையில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள் குடும்பத்தினர். அதுதான் கடைசி சந்திப்பு.
சகஜமாக சிரித்துப் பேசினார். முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றார். 1931, மார்ச் 23-ஆம் தேதி தன்னைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்று தெரிந்த பிறகும் எந்தவித மாற்றமும் அவரிடம் இல்லை.
பிரிட்டிஷ் அரசுக்கு, பகத்சிங்கும், அவருடைய நண்பர்கள் ராஜகுரு, சுக்தேவும் வைத்த கோரிக்கை ஒன்றுதான். ""நாங்கள் மூவரும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறோம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. நாங்கள் சாதாரண கிரிமினல்களோ, அரசியல் கைதிகளோ அல்ல. போர்க் கைதிகள். அதனால் போர்க் கைதிகளுக்கே உரிய மரியாதையுடன் எங்களை சுட்டுத் தள்ளுங்கள், தூக்கிலிடாதீர்கள்!'' - இதுதான் அவர்கள் எழுதிய கடிதம். அந்தக் கடைசி ஆசையைக்கூட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு நிறைவேற்றவில்லை.
பகத்சிங்கின் தூக்கு தண்டனையை அண்ணல் காந்தியடிகள் தடுத்து நிறுத்தவில்லையா? அதற்கு அவர் முனையவில்லையா? இதற்கான பதிலை என். சொக்கனின் "பகத்சிங்' தெளிவுபடுத்துகிறது. அதனால்தான் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருக்கிறது.
கால் நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட கவிதையாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்துடன் பொருத்திப் பார்த்தால் இது நல்ல கவிதை. இப்போது ரசிக்க முடியவில்லை. அன்றைய தலைப்பு "பெயர்ச்சி'.
மாமா இறந்த
சில தினங்களுக்குப் பிறகு
அக்கா வீட்டுக்குச்
சென்றிருந்தபோது
ஆழ்ந்த அமைதி
சூழ்ந்திருந்த வீட்டில்
பூவும் பொட்டும் இல்லாமல்
அக்கா அழுதுகொண்டிருக்க
பூ பொட்டோடு
மாமா சிரித்துக்கொண்டிருந்தார்
புகைப்படத்தில்!