முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (09-10-2022)

உறவு என்பது ரத்த பந்தத்தால் வருவது மட்டுமல்ல என்பதை வாழ்க்கை எனக்கு நன்றாகவே உணர்த்தி இருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

உறவு என்பது ரத்த பந்தத்தால் வருவது மட்டுமல்ல என்பதை வாழ்க்கை எனக்கு நன்றாகவே உணர்த்தி இருக்கிறது. தொடர்பே இல்லாத பலர் நெருக்கமாவதும், நெருக்கமான பலர் பாதி வழியில் அகன்று அல்லது பிரிந்து தொடர்பில்லாமல் போவதும் வாழ்க்கைப் பாதையில் நாம் எதிர்கொள்ளும் விசித்திரம். எனக்குக் கிடைத்ததுபோல மிகப் பெரிய நட்புவட்டம் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கும். அந்த நட்பு வட்டத்தில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவர் என். "ராசி' ராமலிங்கம்.

"ஜீவராசி அறக்கட்டளை' என்கிற பெயரில் அவர் நிறுவி நடத்தி வந்த இயற்கை உணவு நிறுவனம், சிறியதாக இருந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் பெரிது. பள்ளிக் குழந்தைகள் தொடங்கி, இலக்கிய ஆர்வலர்கள் வரை ராசி ராமலிங்கத்தின் வட்டம் மிகவும் பெரிது. இயற்கை உணவு குறித்த அவரது ஆர்வம், அதன் தயாரிப்பில் அவரை ஈடுபாடு கொள்ள வைத்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் "தினமணி' ஆசிரியரான பிறகுதான் ராமலிங்கத்தின் நட்பு கிடைத்தது. "தினமணி' நடத்தும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நான் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும் எனக்கு முன்னர் அங்கே ஆஜராகி விடுவார் "ராசி' ராமலிங்கம். "தினமணி' ஆசிரியர் குழுவில் அவரைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். 

தில்லியானாலும், திருநெல்வேலியானாலும் இலக்கிய விழாக்களில் தனது இயற்கை உணவுகளை அவர் காட்சிப்படுத்தி இருப்பார். "இதனால் உங்களுக்கு வியாபாரம் நடக்குமா' என்று கேட்டால், சிரிப்பார். "இது வியாபாரத்துக்காக அல்ல. இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக' என்று கூறும் அவர், பெரும்பாலான பொருள்களை இலவசமாக விநியோகம் செய்துவிட்டு, தனது பைகளுடன் வண்டியிலோ, ரயிலிலோ மகிழ்ச்சியுடன் புதுச்சேரி திரும்புவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

திருக்குறள் குறித்த துண்டுப் பிரசுரங்கள், வள்ளலார், அப்துல் கலாம் உள்ளிட்டவர்களின் பொன்மொழிகள் என்று அச்சிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கும் வழங்குவதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தனது இயற்கை உணவு தயாரிப்பில் அவர் தனது சொத்து சுகங்களை இழந்திருப்பதாகக் கூறுவது வெறும் வாய்ச்சொல் அல்ல, நிஜம்.

"பாரதத் திருநாட்டின் வேதபுரி என்னும் தமிழ் வளர்க்கும் சித்தர் பூமி புதுச்சேரியில் என்னைப் பிறக்கச் செய்த ஏக இறைவனுக்கு நன்றி. என்னை தினம் தினம் தமிழால் செதுக்கி, "தினமணி' நாளேட்டின் மூலமாகவும் திருக்குறள், ராமாயணம், மகாபாரதம், ஒளவையார், நீதி நூல்கள் எனக் கற்றுத் தந்து நலவாழ்வு வாழ வைக்கும் என்னை ஈன்ற அன்னை தியாகதீபம் இராதாபாய்க்கும் நன்றி' என்று குறிப்பிட்டு அவர் வெளியிடும் சிறு கையேடுகள் பள்ளிச் சிறுவர்களுக்காகவே அவரால் வெளியிடப்பட்டன. 

என்னுடன் ஏற்பட்ட தொடர்பு, அவரை எனது குடும்பத்தில் ஒருவராகவே மாற்றியது. எனது தாயாரின் மறைவுக்கு அவரும், அவரது தாயாரின் இழப்புக்கு நானும் ஆறுதலாக இருந்தோம். கடந்த ஜூன் மாதம் எனது பிறந்த நாளன்று, நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். நானும் அவரும் ஒன்றாக உணவருந்தினோம். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் விடைபெற்றுக் கிளம்பியபோது, அதுவே எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

காந்தியடிகளை நேசித்த, "லட்சிய பாரத நல இயக்கம்' நடத்தி வந்த "ராசி' ராமலிங்கம், காந்தி ஜெயந்தி நாளன்று மறைந்தார். முற்பிறவி விட்டகுறை தொட்டகுறையால் நாங்கள் சந்தித்திருந்தால், நிச்சயமாக மறு ஜென்மத்தில் நானும் "ராசி' ராமலிங்கமும் சந்திப்போம்!

----------------------------------------------------------

அருட்பிரகாச வள்ளலாரின் 200-ஆவது பிறந்த ஆண்டு தொடக்க கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. அவர் பிறந்த அக்டோபர் 5-ஆம் தேதி "உலக ஒருமைப்பாட்டு தின'மாகக் கொண்டாடப்படுகிறது. 

வடலூரில் இருந்து சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள மருதூரில் ராமையா பிள்ளை - சின்னம்மையார் இணையருக்கு 1823-இல் ராமலிங்கம் என்கிற இயற்பெயரில் பிறந்தவர், திரு அருட்பிரகாச வள்ளலாராக உலகுக்கு புது நெறி காட்டிய வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல நமக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது. 

சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது சன்மார்க்க விளக்கத்தின் அடிப்படை. அதை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். வள்ளலார் சுவாமிகளின் கருத்துப்படி, ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருளை பெறக்கூடும் அல்லாது, வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாதென்று உறுதியாக அறிதல் வேண்டும்.

அவர் தமது மெய்யன்பர்களுக்கு உபதேசித்த உண்மை நெறியின்படி, ஒருவர் பெற வேண்டிய புருஷார்த்தம் நான்கு. அவை, ஒன்று ஹேமசித்தி; இரண்டு சாகாக் கல்வி; மூன்று தத்துவ நிக்ரகஞ் செய்தல்; நான்கு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். இவற்றைப் பெறுவதற்கு இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கம் பெற வேண்டும் என்பது அவரது தேர்ந்த முடிவு. 

திருவருட்பிரகாச வள்ளலார், வடலூர் பெருவெளியிலே சன்மார்க்க போதனை செய்து வருங்கால், இந்த "உண்மை நெறி'யினை வரைந்து சுவரில் ஒட்டி வைத்து "இந்நெறியினைப் பெற்றுய்யுங்கள்' என்று உபதேசித்து அருளினார். 

வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விரிவாக ஏழு பிரிவில் எழுதி உபதேசித்தார். அவற்றில் கிடைத்திருப்பவை சில மட்டுமே. அவற்றை சிறு புத்தக வடிவமாக்கி வெளியிட்டிருக்கிறார் அ. குப்புராஜ். சென்னையில் கடந்த வாரம் நடந்த இராமலிங்கர் பணி மன்றத்தின் வள்ளலார் காந்தி விழாவில் வழங்கப்பட்ட அந்த சிறு புத்தகம், அற்புதமான சன்மார்க்க விளக்கக் கையேடு.

----------------------------------------------------------


கு.அ. தமிழ்மொழியின் "நினைவில் வராத கனவுகள்' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதை இது.
ஏதேதோ
நினைவுக்கு
 வந்து போகிறது
ஆனால்,
நினைவுக்கு வராது
போவது பற்றியே
நினைக்கிறது
மனம்!

முழு கட்டுரையைப் படிக்க →