இந்த வாரம் கலாரசிகன் - (04-09-2022)
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளின் தரத்துக்கு நிகராக முழு உடல் பரிசோதனை நடத்தப்படுவது குறித்து எங்கள் மருத்துவ நிருபர் கோபி கிருஷ்ணா என்னிடம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். எனது சித்தப்பாவின் மறைவுக்காக பெங்களூருரிலிருந்து வந்திருந்த எனது சகோதரியும், அவரது கணவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தபோது நானும் இணைந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்.
நேற்று பரிசோதனைக்காகச் சென்ற போது அந்த மருத்துவமனையின் பிரம்மாண்டம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளும் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கிறது அந்த மருத்துவமனை. அரசு மருத்துவமனைகளை சுத்தமாகப் பராமரிக்க முடியும், அரசு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை அக்கறையுடன் கவனிக்க முடியும், சர்வதேச தரத்திலான தொழில்நுட்பங்களுடனும், உபகரணங்களுடனும் அரசு மருத்துவமனை செயல்பட முடியும் என்பதையெல்லாம் அங்கே பார்த்து நான் மட்டுமல்ல, எனது சகோதரியும், அவரது கணவரும்கூட ஆச்சரியத்தில் சமைந்தனர்.
கடந்த மார்ச் மாதம் ரூ.35 கோடியில் அமைக்கப்பட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை மையம் அதன் சிறப்பம்சம். ஏறத்தாழ, லேப்ராஸ்கோபிக் சிகிச்சையின் மேம்பட்ட நுட்பமாகக் கருதப்படும் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை ஜீரண மண்டலம், இரைப்பை, எலும்பு மஜ்ஜை, இதயம், நுரையீரல், புற்றுநோய், சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் இந்த சிகிச்சைகளை சாமானியத் தமிழர்கள் இலவசமாகப் பெறுகிறார்கள் என்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.
அமைச்சர்கள் பொதுவாக தலைமைச் செயலகத்திலிருந்து செயல்படுவார்கள். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வித்தியாசமானவராக இருக்கிறார். தனது அலுவலகத்தையே பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அமைத்துக் கொண்டிருப்பதால், நோயாளிகளை நேரில் சந்திப்பதும், மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்து பார்வையிடுவதும் அவருக்கு அன்றாட வாடிக்கையாகிவிட்டிருக்கின்றன.
இங்கே மட்டுமல்லாமல் ஏனைய அரசு மருத்துவமனைகளையும் அவர் அடிக்கடி நேரில் சென்று பார்வையிடுவதால்தானோ என்னவோ, மருத்துவமனைகளின் தரம் உயர்ந்திருக்கிறது. அமைச்சர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது என்பதை கண்கூடாக எங்களால் பார்க்க முடிந்தது.
அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரமும் உயர்த்தப்படுவதைப் பார்த்த மகிழ்ச்சியோ என்னவோ, எனது முழு உடல் பரிசோதனை முடிவுகளும் மகிழ்ச்சியாகவே அமைந்தன.
----------------------------
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆச்சர்யம் பாருங்கள், அவருடைய 151-ஆவது பிறந்தநாளையொட்டி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி இந்திய கடற்படைக் கப்பல் "விக்ராந்த்' பிரதமர் நரேந்திர மோடியால் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த ஆண்டை தமிழகம் ஏற்ற வகையில் கொண்டாடவில்லை என்கிற மனக்குறை எனக்கு நிறையவே உண்டு. தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் "வ.உ.சி.' "வ.உ.சி.' என்று பேசப்பட்டிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வ.உ.சி. குறித்த கூட்டங்களும், கருத்தரங்கங்களும், அவரது படைப்புகள் பற்றிய சொற்பொழிவுகளுமாக அவரை அடுத்த தலைமுறைக்கு நாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.
செ.திவான் எழுதிய "வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்' என்கிற புத்தகம் ஏற்கெனவே விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்.
1908, மார்ச் 12-ஆம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே திரண்டிருந்த மக்கள் மத்தியில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும், பத்மநாப ஐயங்காரும் உரையாற்றினர். அவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லாமல் சிறையிலடைத்தனர். அதைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் அடுத்த நாள் முழு வேலை நிறுத்தம் நடந்தது.
வண்டிப்பேட்டையில் கூட்டம் கூடுகிறது என்று தெரிந்தபோது, அப்பாவி மக்கள் மீது ஆஷ் என்கிற உதவி ஆட்சியர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளையும், கொடுமைகளையும் வ.உ.சி. தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த ஆஷின் அக்கிரம நடவடிக்கைக்கும் எதிராக கொதித்தெழுந்த இளைஞர்களில் ஒருவர்தான் வீரவாஞ்சி. குற்றாலத்தில் வெள்ளையர்கள் குளிக்கும் நேரத்தில் இந்தியர்கள் அருவிப் பக்கம் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தவன் கொடுங்கோலன் ஆஷ். அப்போதெல்லாம் ஆங்கிலேயர்களின் கிளப்
களில் "நாய்க்கும் இந்தியனுக்கும் உள்ளே வர அனுமதியில்லை' என்று எழுதி வைத்திருந்தனர்.
ஆஷ் கொலை குறித்து செ.திவான் தனது புத்தகத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி நம்மை தலைகுனிய வைக்கிறது. அன்று தமிழகத்திலிருந்த பெரும்பாலான பத்திரிகைகள் அரசுக்குப் பயந்து ஆஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வாஞ்சியைத் தாக்கி எழுதின.
வ.உ.சி.யும் வீரவாஞ்சியும் மறக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் குறித்து செ.திவான் பதிவு செய்து கூறியிருக்கும் கருத்து - "இந்த நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறும் இந்திய நாட்டின் வரலாறும் திருத்தி எழுதப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது'. அதை நான் வழிமொழிகிறேன்.
விமர்சனத்துக்கு வந்திருந்த கவிஞர் ரேவதியின் "பஞ்சு மிட்டாய் காலங்கள்' தொகுப்பில் இருந்தது இந்தக் கவிதை. விளிம்புநிலை மனிதர்களின் அவலத்தை வெளிச்சம் போடும் இதுதான் இந்த வாரத் தேர்வு.
தன் இருப்புக்காய்
ஆங்காங்கே அறைகள் ஒதுக்கி
ஓய்வற்ற உழைப்பில்
அறைகளுக்குக்
கூரை வேய்ந்து கொண்டிருந்த
சிலந்தி ஒன்றை
ஒரே அடியில் அடித்து நசுக்கி
வீடுகளைக் கலைத்துப் போட்டுவிட்டு
நகர்ந்தான் அந்த மனிதன்
மெலியாரின் ஓலம்
ஒருபோதும் செவிகளில் விழுவதேயில்லை.