வானம்பாடியைப் பற்றிச் சங்க இலக்கியமாகிய பட்டினப்பாலையில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தப் பாடல் அடியில் அதை வானம்பாடி என்று உருத்திரங்கண்ணனார் குறிப்பிடவில்லை. புள் என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். புள் என்னும் சொல் பொதுவாகப் பறவை இனங்களைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல். அப்படி இருக்கும்போது புள் என்னும் சொல்லை வைத்து அது வானம்பாடிதான் என்று எப்படி முடிவு செய்ய முடியும் என்று நமக்கு ஓர் ஐயம் ஏற்படும்.
புள் என்னும் இந்தச் சொல்லுக்கு உருத்திரங்கண்ணனார் ஓர் அடையை வழங்கியிருக்கிறார். தளி உணவின் புள் என்று பாடியுள்ளார். தளி உணவை உண்ணும் பறவை என்னும் குறிப்பினைக் கூடுதலாகத் தந்துள்ளார். தளி என்னும் சொல் மழைத்துளியைக் குறிக்கும் சொல்லாக வந்துள்ளது.
இதே தளி என்னும் சொல் மழையைக் குறிக்கும் சொல்லாக நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளது.
இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளிபதம் பெற்ற கான்உழு குறவர் (நற்றிணை 209)
என்னும் தொடரானது போதிய மழை வளத்தைப் பெற்றதால் உழவுத் தொழில் செய்த குறவர் எனச் சுட்டிக்காட்டுகிறது.
குறவர்கள் கொல்லை நிலத்தை எப்படி உருவாக்கியுள்ளார்கள் என்பதனை முதல் அடியில் நொச்சி நியமங்கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார். மலைச்சாரலில் இடத்தை உருவாக்கி அந்தக் குறவர்கள் கொல்லையை உருவாக்கியுள்ளனர். அந்தக் கொல்லையில் அவர்கள் மழை வரும் நாளில் உழவுத் தொழிலைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள தளி என்னும் சொல் குழைதல் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டது. அதனாலேயே இலையின் இளமைப் பெயராகத் தளிர் என்னும் சொல் வருகிறது. இளந்தளிர் குழைவதைப் போல் மழைத்துளியானது குழைந்து கீழே இறங்குகிறது. எனவே மழையைக் குறிப்பதற்குத் தளி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது உருத்திரங்கண்ணனார் பாடியுள்ள பாடல் அடிகளைக் காண்போம்.
வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடல் காவிரி (16)
மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்ட காலத்திலும் குடகு மலையிலிருந்து புறப்படும் காவிரியானது தண்ணீர் இல்லாமல் வறண்டு போகாது என்னும் செய்தியை உணர்த்துவதற்காகத்தான் இங்கே வானம்பாடியின் இயல்பைக் குறிப்பிட்டுள்ளார் உருத்திரங்கண்ணனார்.
இந்த வானம்பாடியின் வகைகளுள் ஒன்றான கொண்டைக் குயில் என்னும் பறவை இனிமையாகப் பாடும் இயல்பு உடையது. மழைத் தண்ணீரை மட்டும் குடிக்கும் இயல்பு கொண்ட பறவை என்பது இதன் சிறப்பு இயல்பு.
இதனுடைய தனிப்பட்ட பெயராகக் கொண்டைக் குயில் என்னும் பெயர் இடம்பெற்றாலும் பொதுவாக வானம்பாடி என்றே இலக்கியவாணர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். இதே இயல்பு கொண்ட ஒரு பறவையை அறிவியலாளர் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலத்தில் இதனை ஜெக்கோபின் குக்கூ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பறவையும் மழைத் தண்ணீரை மட்டுமே குடிக்கும் என்றும் நீண்ட காலம் தண்ணீர் அருந்தாமல் வாழும் இயல்பு உடையது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வானம்பாடியை ஆங்கிலத்தில் ஸ்கைலார்க் என்று குறிப்பிடுகின்றனர். எல்லா வானம்பாடிகளும் மழைத்துளியை மட்டுமே உண்டு வாழும் எனப் பொதுவாக நினைத்துவிடக் கூடாது என்று உணர்த்துவதற்காகத் தான் உருத்திரங்கண்ணனார் வானம்பாடி என்னும் சொல்லைக் குறிப்பிடாமல் தளி உணவின் புள் என்று கொண்டைக் குயிலினைப் பாடியுள்ளார்.
பல நாள் தண்ணீர் உண்ணாமல் வாழும் இயல்பு கொண்ட கொண்டைக் குயில் என்னும் வானம்பாடி வகைப் பறவை கூடத் தன்னை நினைத்தே தேம்பி வருந்திப் பாடும் அளவிற்குத் தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்திருக்கிறது என்னும் கருத்தைத் தெரிவித்துள்ளார் உருத்திரங்கண்ணனார்.
இந்தத் தகவலுடன் மேலும் ஒரு தகவலையும் முதல் அடியிலேயே தந்துள்ளார். புகழ்பெற்ற விண்மீன் என்பது வெள்ளி விண்மீனைக் குறிக்கும். இது பொழுது விடியும் வேளையில் தோன்றுவதால் இதனை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுகிறோம். இந்த விடிவெள்ளி எப்போதும் கிழக்கு வானத்தில் ஒளி பொருந்தியதாகத் தோன்றும். நம்மால் வெறுங்கண்ணால் கூட விடியும் வேளையில் பார்க்க முடியும். அந்த விடிவெள்ளியானது கிழக்குப் பக்கத்தில் தோன்றாமல் தெற்குப் பக்கத்தில் சாய்ந்து தோன்றினால் மழை இல்லாமல் வறட்சி ஏற்படும் என்னும் குறிப்பையும் உருத்திரங்கண்ணனார் தந்துள்ளார்.
வானவியலைத் தொடர்ந்து நூற்றாண்டுக் கணக்காய் ஆய்வு செய்தால் மட்டுமே விடிவெள்ளியானது கிழக்குப் பக்கத்தில் காட்சி அளிக்காமல் தெற்குப் பக்கத்தில் காட்சி அளித்தால் மழை பெய்யாது என்னும் முடிவுக்கு வரமுடியும். அப்படி என்றால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே நம் தமிழ் மக்கள் வானவியல் ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தளி உணவின் புள் என்று உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ள பறவையானது வானம்பாடி வகையைச் சேர்ந்த கொண்டைக் குயில் என்னும் பறவை என்னும் தெளிவை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.