முகப்பு
தமிழ்மணி

நாலடியார் நவிலும் பெருமுத்தரையர்!

நாட்டோர் அறவியல் நெறியில் பொருள் கண்டு இன்பம் துய்க்க இயற்றப்பட்ட தொன் முதுநூல் "நாலடியார்'.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:45 AM
பகிர்:


நாட்டோர் அறவியல் நெறியில் பொருள் கண்டு இன்பம் துய்க்க இயற்றப்பட்ட தொன் முதுநூல் "நாலடியார்'. தொல்தமிழர் பனுவல் உரையாசிரியர்களான அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், பரிமேலழகர் போன்றோரால் அவ்வப்போது எடுத்தாளப்பட்ட செறிவு மிக்கது நாலடியார்.  
"நாலடி' என்றால் நான்கு அடியை உடையது.  பண்புத்தொகை பாற்பட்ட அன்மொழித்தொகையின் காரணப் பெயராய் விளங்கி, "வெண்பா யாப்பால்' படைக்கப்பட்டது  நாலடியார்.  
நாலடியார் பனுவலுக்கு ஒரு கதையும் உண்டு.  மூவேந்தரில் ஒருவராம் முத்தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியவராம் வேந்தர் பாண்டிய வழுதியாரின் அரசவையில் தமிழாய்ந்த எட்டாயிரம் சமணமுனிவர்கள் இருந்தனர். அன்று ஏற்பட்ட வாழ்வியல் துன்பங்களுக்காகப் பாண்டியரின் பேரவையை விட்டு வருத்தப்பட்டுப் புலம் பெயர்ந்தபொழுது அவரவர்கள் வீற்றிருந்த இருக்கையின் கீழ் ஒவ்வொரு அறநெறியை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு வேந்தர் பாண்டியரிடம் சொல்லாமல் சென்று விட்டனர்.   
வேந்தர் அரசவை செல்கிறார்.  எண்ணாயிரம் சமண முனிவர்களையும் காணவில்லை.  இது குறித்துத் தமது அமைச்சர்களிடமும், அரசவைப் புலவர்களிடத்திலும் கேட்டறிகிறார்.  அப்பொழுது சேவகர்கள் சமண முனிவர்கள் வீற்றிருந்த இருக்கைகளை அப்புறப்படுத்த முனைந்தபொழுது ஒவ்வொரு இருக்கையின் அடியில் ஒவ்வொரு வெண்பாச் சுவடிகள் இருப்பதைக் காண்கிறார் வேந்தர். 
மனத்தில் அவர்களைப் பிரிந்த வேதனையோடு கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை வைகை  ஆற்றில் விட்டுவிட ஆணையிட்டார்.  ஓலைச் சுவடிகளை எடுத்துக்கொண்டு அரசவைப் புலவர்கள், சேவகர்கள், ஏவலர்கள் புடைசூழ வைகை ஆற்றுக்குச் செல்கிறார்கள். இரு மருங்கிலும் புனல் ததும்ப குதித்துச் செல்லும் வைகை ஆற்றில் எட்டாயிரம் சமண முனிவர்கள் இயற்றிய அறநெறிச் செய்யுள்களுள்ள ஓலைச்சுவடிகள் விடப்படுகின்றன.  
புனலிலிட்ட எண்ணாயிரம் சுவடிகளில் நானூறு சுவடிகள் புனலாடும் வழியில் செல்லாமல் எதிர்ப்புறம் வந்து சேவகர்கள், ஏவலர்கள் நின்ற கரையின் மேல் ஏறி நின்றன.  
இதைக் கண்டவர்கள் வியந்தனர்.  கன்னித்தமிழின் ஆற்றலை அரசருக்குத் தெரிவித்தார்கள்.  
வியப்புற்ற வேந்தர் பாண்டியர், கரையேறிய ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ள அறநெறிப் பாக்களை ஆய்ந்து தொகுத்து வெளியிடச் செய்தார். அத்தொகுப்பே "நாலடியார்' என வழங்கப்படுகிறது என்பதுதான் அந்தக் கதை. 
பாண்டிய மன்னர் வழுதியார் எனும் செய்தி கர்ண பரம்பரை செய்தியாகக்கூட இருக்கலாம்.  ஆனால் அழிந்து போக இருந்த ஆன்றவிந்த அருந்தமிழரின் அறம், பொருள், இன்பத்திற்கான இலக்கண இலக்கியமாக நாலடியார் நமக்குக் கிடைத்தது  என்பதையே மட்டிலா மகிழ்ச்சியாகக் கொள்ள வேண்டும்.
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்று திருக்குறளின் பெருமையோடு நாலடியார் பெருமையை நவின்றது நற்றமிழ்நாடு. அரும்
பெரும் இலக்கண நூல்களான தொல்காப்பியம், வீரசோழியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலவிருத்தி நூல்களின் உரையாசிரியர்களால் யாப்பின் அமைப்புக்கு நாலடியாரில் காணும் பாக்களை எடுத்துக்காட்டும் வகையான் செறிவுமிக்க தொல்தமிழ் நூலாக விளங்கியது 
நாலடியார்.    
திருக்குறளின் செறிவுக்கும் சீர்மைக்கும் பக்கமாகவும் நேராகவும் மிகுத்தும் விரித்தும் இணைத்தும் சொல்லோவியங்களால் தமிழன்னைக்கு அறம் எனும் வாடாமலரால் அருந்
தமிழில் சரமாக்கி, அறிவுச் சாரத்தை அதன் மேல் தெளித்துப் பனுவல் யாத்த சமணர்களின் நாலடி(யார்) நற்றமிழ், அரசர் பெருமுத்தரையரின் பெருமையை விளக்குகிறது. சமணர்களின் அறநெறிக் கோட்பாட்டை உணர்ந்தவராகப் பெருமுத்தரையர் விளங்கியுள்ளார்.  
மேலும், அவர் தம் கொடைத் திறத்தைத் தமிழ்மடை திறந்த சொற்களால் பறைசாற்றியிருக்கும் சமணர்கள், தமிழ் நில மன்னர்களின் நிருவாகத் தன்மையை, அவர்களின் செங்கோல் சிறப்புகளை நன்கு உணர்ந்தவாறு தம் சமயக் கோட்பாடுகளையும் பரப்பியுள்ளனர். 
பெருமுத்தரையர் பெரிது வந்தீயுங்
 கருனைச்சோறு, ஆர்வர்  (நாலடி. 200)
தாம் ஆளும் பகுதியில் தம் மக்களுக்கு அவர்தம் பசிப்பிணி நீக்க முக்காலமும் உணவு வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தவர் அரசர் பெருமுத்தரையர். பசியால் வாடும் மக்களுக்குப் பொறிக்கறியுடன் சோறு வழங்கும் கருணை மிக்கவராகப் பெருமுத்தரையர் விளங்கினார் என்கிறது நாலடியார்.  மேலும்,  
மல்லன் மாஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
 செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்
 நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே
 செல்வரைச் சென்றிரவா தார்   (நாலடி. 296)
வளமான சிறந்த செழிப்புடைய பரப்பு மிக்க உலகில் வாழும் மனிதர்களிடையே பெருஞ்செல்வம் படைத்தவர்கள் பலர் இருப்பினும் அவர்கள் வாடும் வறியவர்களின் துயர் துடைத்து வாழாமலிருப்பின் அவர்களும் வறியவர்கள்தான்.  
இந்நிலையில், வறுமையில் தான் ஆட்பட்டிருந்தாலும் பிறரிடம் சென்று தம் நிலையைக் கூறாமல் வறுமையிலும் செம்மையாகத் தம் வாழ்வியலைக் கொண்டிலங்குபவர்கள்தான் பெருமுத்தரையர்கள் என்றும் நாலடி விளக்குவது நாம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். 
உரையாசிரியர்கள், வரலாற்றாய்வர்கள் முத்தரையர் என்பார் பற்றி கால வேறுபாடுகளைக் கணித்து ஆண்டுகளில் வேறுபாடு உணர்ந்து வள்ளல்கள் என்றும், பெரிய முத்துகளையுடைய பாண்டியர்கள் என்றும் உரைத்தாலும் பெருமுத்தரையர் எனும் பெயர் தமிழக நில ஆளுகையின் பெருமை மிக்க கொடையாளிகளாக விளங்கியமை  தெளிவாகும்.  
மேலும், சமண முனிவர்களின் காலத்தில் நாட்டையாண்ட மன்னராகப் பெருமுத்தரையர்கள் விளங்கியிருக்கலாம். காரணம் தமிழின அரசர்கள் இயல்பாகவே கொடைத் தன்மையைத் தம் ஆட்சியியல் நெறியாகவும், தம்மின மக்களின் வறுமை ஒழிப்பதையும், வறியவர்களைக் காத்தலையுமே தமது இலக்காகவும் கொண்டிலங்கினர் என்பது தெளிவு. 
மேலும், நாலடியில் சுட்டிக்காட்டும் பெருமுத்தரையர் என்பார், தாம் ஆளும் நிலத்தில் தம் மக்களுக்கு அவர்தம் வறுமையைப் போக்குவதில் உணவும், உறைவிடமும் தந்த கொடை வள்ளல்கள் என்பதையும், செல்வந்தர் ஒருவர் வளமாக வாழ்ந்து காலச்சுழலில் தான் வறுமைப்பட்டாலும் பிறரிடம் தம் வறுமையைத் தணிப்பதற்குச் செல்லாதவர் என்பதையும் உணர முடிகிறது.
ஆக, "முத்தரையர்' எனும் வள்ளல் தன்மை மிக்க மன்னர்கள் இம்மண்ணில் மக்களின் பெரும் பசிப்பிணி தவிர்த்தவர்களாகவும், தமக்குத் தாழ்நிலையுற்றாலும் பிறரிடம் சென்று இரவாத தன்மான குணமுடையோராயும் வாழ்ந்தனர் என்று சமண மாமுனிவர்களின் நாலடி 
நவிலுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →