தமிழ்மணி

முள்ளும் மலரும்

முனைவா் கி. இராம்கணேஷ்

தலைவனொருவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை விரும்பி வாழ்ந்து வந்தான். சிறிது காலம் கடந்ததும் தலைவியின் நினைவு அவனுக்குள் எழுந்தது. பரத்தையுடன் வாழ்ந்ததை தலைவி விரும்பாள். அதை நன்குணர்ந்தவன், இனி தான் பரத்தையுடனான உறவினை விட்டு தலைவியுடன் வாழ்கிறேன் எனச் சொல்லி தோழியிடம் உதவி கேட்கிறான். 

தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் தோழி நன்கறிவாள். அவன் முன்பெல்லாம் இனிமையுடையவனாக இருந்ததையெல்லாம் எடுத்துச் சொல்லி, தலைவியிடம் பேசி  ஏற்றுக்கொள் என்கிறாள். துயரத்திலிருந்த தலைவி, தனக்கு தலைவனுடனான வாழ்க்கைத் தொடர்பில் விருப்பமில்லை என்பதைத் தோழியிடம் தெரிவிப்பதாகக்  குறுந்தொகைப் பாடலொன்று அமைந்துள்ளது.

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்நங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே.
(குறுந். 202)

தோழி, என் மனம் வருந்துகின்றது. முல்லை நிலத்தில் நெருங்கி முளைத்த, சிறிய இலையையுடைய நெருஞ்சியின் பொன்போன்ற புதிய மலர் கண்ணுக்கு இனிதாக இருந்தது. அதன் பின்னர் அம்மலரானது, துன்பத்தைத் தரும் முள்ளைத் தந்ததைப் போல, முன்பு நமக்கு இனியவற்றைச் செய்த தலைவர், இப்பொழுது இனியதல்லாதவற்றைச் செய்வதால் என் மனம் வருந்துகின்றது எனச் சொல்லி தலைவனை ஏற்றுக்கொள்ள தலைவி மறுக்கிறாள்.

தலைவனால் தான் அடைந்த வருத்தத்தை. "நோமென் னெஞ்சே' என மூவிடங்களில் குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவியின் மிகுதியான வருத்தத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. தோழியிடம் தலைவன் செய்யும் தீமையைக் கூறவில்லை, அவனைப் பழித்தும் பேசவில்லை. இருப்பினும் அவள் உள்ளத்தால் தாங்க முடியாத வேதனையைத் தெளிவுபடுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT