அருணகிரிநாதரும் வில்லிபுத்தூர் ஆழ்வாரும் 
தமிழ்மணி

அருணகிரிநாதரும் வில்லிபுத்தூர் ஆழ்வாரும்!

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு புலவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் அவர்களுக்கு மேம்பட்ட புலவர்கள் கேட்கும் கேள்விக்குத் தக்க பதில் சொல்லாவிட்டால் அவர்களைத் தண்டிக்கின்ற வழக்கமும் இங்கு இருந்தது.

கவிஞர் முத்துலிங்கம்

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு புலவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் அவர்களுக்கு மேம்பட்ட புலவர்கள் கேட்கும் கேள்விக்குத் தக்க பதில் சொல்லாவிட்டால் அவர்களைத் தண்டிக்கின்ற வழக்கமும் இங்கு இருந்தது.

"நைடதம்' பாடிய அதிவீரராம பாண்டியன் கேட்கும் கேள்விக்குப் புலவர்கள் தவறாக பதில் சொன்னால் அவர்கள் தலையில் ஓங்கிக் குட்டுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதைப்போல் வில்லிப்புத்தூர் ஆழ்வார் பிழைபட எழுதுபவர்கள், பிழையான பதில் சொல்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்களின் காதுகளை அறுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். இது பற்றிய எண்சீர் விருத்தம் ஒன்று உண்டு.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனிங் கில்லை

குரும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி

எட்டினமட்டறுப்பதற்கோ வில்லியில்லை

இரண்டொன்றா தலையிறங்க முடித்துப் போட்டு

வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை

விளையாட்டாக் கவிதைகனை விரைந்து பாடித்

தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகள் உண்டு

தேசமெங்கும் புலவரெனத்திரியலாமே.

நல்லவேளை எங்களைப் போன்றவர்கள் அந்தக் காலத்தில் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் எங்கள் காதுகளும் அறுபட்டுப்போயிருக்கும்!

வில்லிபாரதம் பாடிய வில்லிபுத்தூர் ஆழ்வாரின் செவிகளை அறுக்கும் இந்தத் தீச்செயலை நிறுத்த வேண்டும் என்பதற்காக திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் அவருடன் ஒருநாள் வாதுப் போருக்குச் சென்றார் என்ற செவிவழிச் செய்தியொன்று நிலவுகிறது. இது, "தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர, தண்டனைக்குரியதாகக் கூடாது' என்பதற்காகப் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம். அவர்கள் இருவரும் வாழ்ந்த காலம் பதினைந்தாம் நூற்றாண்டு.

'என்னுடன் வாதுப் போருக்கு வருகிறீர்களே! என் நிபந்தனை என்னவென்று தெரியுமல்லவா?'' என்று வில்லிபுத்தூர் ஆழ்வார் கேட்டார்.

'தெரியும்'' என்றார் அருணகிரிநாதர்.

'தெரிந்தும் வந்திருக்கிறீர். உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன்'' என்றார் அவர்.

அப்போது அருணகிரிநாதர், 'தாங்கள் தோற்றால், தங்கள் காதுகளை நான் அறுத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டார்.

'ஓ, தாராளமாக அறுத்துக் கொள்ளலாம்!'' என்றார் வில்லியார்.

போட்டி தொடங்கியது. ஒரு நாளல்ல, இருநாளல்ல பல நாட்கள் போட்டி தொடர்ந்து நடந்தது. அவர் கேட்ட கேள்விக்கு இவரும், இவர் கேட்ட கேள்விக்கு அவரும் சரியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் கந்தர் அந்தாதி பாடினார் அருணகிரிநாதர். அதில் ஐம்பத்து மூன்று செய்யுள்களுக்கு சரியான பதில் சொல்லி வந்தார் வில்லிபுத்தூரார். ஐம்பத்து நான்காவது செய்யுளான கட்டளைக்கலித்துறையை "த'கர வர்க்கத்தில் கேட்போர் திகைக்குமாறு பாடினார் அருணகிரிநாதர். அந்தச் செய்யுள் இதுதான்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

'இதற்குப் பொருள் சொல்லுங்கள்'' என்றார் அருணகிரிநாதர்.

இப்படிப் பாடினால் யாருக்குத்தான் என்ன தெரியும்? வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கு இதன் பொருள் தெரியவில்லை. அதனால் தோற்றுவிட்டதற்கு அடையாளமாக அவர் காதை நீட்டினார், அறுத்துக் கொள்ளலாமென்று.

அறுப்பாரா அருணகிரிநாதர்? வில்லிபுத்தூராரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தானே வாது போர் நடத்துகிறார்? அப்போது அருணகிரிநாதர் சொன்னார், "இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. ஏதும் தெரியாதவர்கள் என்றும் எவருமில்லை. உங்களுக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நம் இருவருக்கும் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மற்றவர்களுக்குத் தெரிந்தது நம் இருவருக்கும் தெரியாமல் இருக்கலாம். இந்தக் காலத்தில் படித்தவனுக்குத் தெரியாத ஒன்றைப் படிக்காதவன் சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவான். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதனால் ஒருவனுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லித் திருத்த வேண்டுமே தவிர இப்படிக் காதை அறுக்கும் பாவச் செயலைச் செய்யக் கூடாது!' என்றார்.

அப்படியே செய்கிறேன் ஐயா என் செயலை மன்னித்துவிடுங்கள் என்று பணிவோடு கேட்டுக் கொண்ட வில்லிபுத்தூரார், 'தாங்கள் பாடிய தித்ததித்த தித்தத் திதிதாதை என்று தொடங்குகின்ற செய்யுளுக்கு என்ன அர்த்ததம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டார்.

அதற்கு அருணகிரிநாதர், 'திதத்தித்த தித்தத்தை என்ற தாளத்தில் நடனமாடும் சிவனும் திருமாலும் நான்முகனும் வணங்குகின்ற முதல்வனே; தெய்வானையின் மணவாளா; இறப்பு பிறப்புக்குக் காரணமான எலும்பும் தோலும் சதையும் நரம்புகளாலான இவ்வுடலை உற்றார் உறவினர்கள் தீயிட்டு எரிக்குமுன் அல்லது புதைக்குமுன் முருகா உன்னை நினைத்துத் துதிக்கும் படியான நல்ல புத்தியை எனக்குக் கொடு'} இதுதான் இதற்குப் பொருள்'' என்றார்.

பின்னர் இந்தச் செய்யுளுக்கு கிருபானந்தவாரியார்தான் எல்லார்க்கும் விளங்கும்படி பொருள் சொன்னார். இதுபோல் தாம்தாம் எல்லாம் தெரிந்தவர்கள் என்று இன்றும் பல பேர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்பர் ஒருமுறை நாட்டரசன் கோட்டைக்குச் சென்றபோது மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, 'இந்த ஊரில் சோறு எங்கே விக்கும்?'' என்று பேச்சு வழக்கில் கேட்டிருக்கிறார். 'தொண்டையில்தான் விக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

உடனே கம்பர் "விற்கும்" என்று சொல்லுக்குப் பதிலாக "விக்கும்' என்ற சொல்லைப் பயன்படுத்திய தனக்கு இந்தப் பதில் சரியானதுதான் என்று எண்ணி அப்போதே,

"காட்டெருமை மேய்க்கின்ற காளையர்க்கு

நான் தோற்றேன்

நாட்டரசன் கோட்டை நமக்கு'

என்று குறள் வெண்பா ஒன்றைப்பாடி விட்டு அங்கேயே வாழ்ந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

கம்பர் சமாதியும் அங்குதான் இருக்கிறது. இதிலிருந்து நாம் நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம்தான் மேதாவி என்ற எண்ணம் யாருக்கும் வரக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

SCROLL FOR NEXT