இலன் என்னும் எவ்வம்
திருக்குறளின் பல்வேறு சிறப்புகளுள் ஒன்று அதன் பொருளாழம் ஆகும்.
திருக்குறளின் பல்வேறு சிறப்புகளுள் ஒன்று அதன் பொருளாழம் ஆகும். இறைக்க இறைக்க ஊறும் கேணி போலத் தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல திருக்குறளின் சில பகுதிகள் கற்போரது நுட்பத்திற்கேற்ப பலவிதமான பொருளை நல்கும் செறிவுடன் அமைந்துள்ளன. சான்றாக அறத்துப்பால் இல்லறவியலில் அமைந்துள்ள ஈகை அதிகாரத்தில்
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள. (குறள்: 223)
Advertisement
என்னும் குறளைக் காணலாம். (எவ்வம் - துன்பம்)
தன்னிடம் வந்து இரப்பவனிடத்தில், ""கொடுப்பதற்கு ஒன்றுமில்லை'' என்ற துன்பம் தரத்தக்க சொல்லைக் கூறாமல் ஈதல், நல்ல குடிப்பிறந்தாருக்கே உரியதாகும் என்பது இதன் ஒரு பொருள்.
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று. (204)
என்று புறநானூறும் வலியுறுத்தியுள்ளது.
""யான் வறுமையால் உழன்று ஒன்றும் இல்லாதவனாக இருக்கிறேன்'' என்ற துன்பம் தரக்கூடிய சொல்லை, இரப்பவன் தன் வாயால் சொல்வதற்கு முன்னரே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் நல்ல குடிப்பிறந்தாருக்கே உரியதாகும் என்பது மற்றொரு பொருள்.
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினைசெய்வார்.
என்பது பரிபாடல்(10)
""யான் வறியன்'' என்று இரப்பவன் தன்னிடம் கூறிய துன்பம் தரத்தக்க சொல்லை, மீண்டும் பிறரொருவரிடத்தில் சென்று உரையா வண்ணம் அவனுக்கு நிரம்பக் கொடுத்து உதவுதல் குடிப்பிறந்தாருக்கே உரியதாகும் என்றும் பொருள் கொள்ளலாம்.
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே (புறம்-68)
என்று சங்க இலக்கியம் எடுத்துரைக்கின்றது. ""யான் வழியற்றவன்'' என்று இரப்பவன் தன்னிடம் கூறிய துன்பமிகு சொல்லைத் தான் பிறரறியக் கூறி அவனுக்கு நாணமும் தாழ்வும் அவமதிப்பும் ஏற்படா வண்ணம் கொடுத்துதவுதல் குடிப்பிறந்தாரிடத்தே உரியதாகும் என்று கூடப் பொருள் கொள்ளலாம்.
ஏனெனில் இலன் என்னும் எவ்வத்தை உரைக்கும் எழுவாய் யார் என்பதைத் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அங்ஙனம் குறிப்பிட்டிருந்தால் அது ஏதேனும் ஒருபொருளை மட்டுமே உணர்த்தும். சொல்லாமல் சொன்ன நயம் என்றே இதனைக் குறிப்பிடலாம். இரத்தலின் இழிவையும் ஈகையின் பெருமையையும் இலக்கியங்கள் பலவாறு மொழிந்துள்ளன.
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (குறள்-1041)
என்றும்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (குறள்-1062)
என்றும் இன்மை பற்றியும் இரத்தல் பற்றியும் குறள் விதந்தோதுகின்றது.
செல்வத்துப் பயனே ஈதல் (புறம்-189)
என்று சங்க இலக்கியம் ஈகையின் சிறப்பைத் தேற்றேகாரமிட்டுக் கம்பீரமாக முழங்குகின்றது.
செல்வந்தராக இருப்பவர் ஈயலாம். செல்வம் குறைந்தவருக்கு அது இயலாதேயெனில், இராமாநுசக் கவிராயர் தரும் சிறப்பு விளக்கம் இங்குச் சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது. ""குலனுடையான்'' என்று குறள் கூறுகின்றது. குலத்தை உடைமையாகப் பெறுதல் என்பது அக்குலத்தில் உள்ளார் யாவருக்கும் தலைவனாக விளங்குவது. செல்வம் சுருங்கிய காலத்தில் எவ்வாறு ஈதல் கூடுமெனில்,
1. தலைமைப் பண்பிற்கேற்ப அமைந்த நற்குண, நற்செய்கைகள்,
2. கொடையின்கண் அமைந்த மன ஊக்க உறுதி (மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப எப்படியாவது உதவ வேண்டும் என்ற மனவூக்கமும் உறுதியுமே அதனை நிகழ்த்தும்),
3. தெய்வ அருள் (தலைமைப் பண்பும், மனவூக்க உறுதியும் உடையவருக்குத் தெய்வ அருளும் துணை நிற்கும்) ஆகியவற்றால் கைகூடும்.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடுகளை விவரிக்கும்போது கொடை பற்றி விளக்க வந்த பேராசிரியர், ""கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல்'' என்றுரைப்பதன் மூலம் பொருளைக் கொடுப்பது மட்டும் கொடையன்று என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.