தேன்  
தமிழ்மணி

தேன் கலந்த பாலினும் இனிய தண்ணீர் ...

திருமணம் முடிந்து, கணவன் வீட்டிற்குச் சென்ற பெண் முதல் முறையாகப் பிறந்த வீட்டிற்கு வரும்போது, அவளிடம் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பெற்றோரும் தோழியரும் பல கேள்விகளைக் கேட்பதுண்டு.

மா. இராமச்சந்திரன்

திருமணம் முடிந்து, கணவன் வீட்டிற்குச் சென்ற பெண் முதல் முறையாகப் பிறந்த வீட்டிற்கு வரும்போது, அவளிடம் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பெற்றோரும் தோழியரும் பல கேள்விகளைக் கேட்பதுண்டு.

அவளுடைய இல்வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு காலம் காலமாய் கையாண்ட உத்தி இது. அதிலும் வெளியூரில் வாழ்க்கைப்பட்ட பெண்ணிடம் அவ்வூரைப்பற்றி கூடுதலாகவே விசாரிப்பர்.

இப்படித்தான் உடன்போக்குக்குப்பின் தாய்வீடு வந்த சங்கத் தலைவியிடம் தோழி ஒருத்தி, தன் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறாள். அது தலைவனுடைய ஊரின் குடிநீர் பற்றியது. குடி நீரும் உணவைப்போல அவசியமான ஒன்று தானே? அந்த ஊரில் குடிப்பதற்கு நறு நீர் கிடையாது என்பதைத் தோழி கேள்விப்பட்டிருக்கிறாள். அதனால், ""நீ சென்று வந்துள்ள ஊரில் குடிப்பதற்கு நல்ல நீர் கிடையாதே: நீ எப்படிச் சமாளித்தாய்?'' என்று தலைவியிடம் கேட்கிறாள் தோழி. அதற்குத் தலைவி,

அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண்டு எஞ்சிய கலுழி நீரே (ஐங்குறுநூறு... 203)

என்று பதில் உரைக்கிறாள்.

(உவலை-இலை,சருகு; கூவல்- கிணறு, பள்ளம்)

'தோழியே! தலைவனுடைய ஊரில் இலை, சருகு வீழ்ந்து, விலங்குகள் குடித்துக் கலங்கிப்போய் பள்ளங்களில் மிச்சம் கிடக்கும் நீரானது, நம் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த தேனைக் கலந்து குடிக்கும் பாலைவிட இனிமையாக இருக்கும்' என்பது இப்பாட்டின் பொருள்.

இப்போது போன்று அப்போதெல்லாம் ஊருக்கு ஊர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் கிடையாது, உவர் நீரைக் குடிநீராக்கும் தொழில் நுட்பமும் கிடையாது. ஊருக்கு வெளியே இருக்கும் ஊற்று, பள்ளங்களில் கிடக்கும் கலங்கல் நீரை எடுத்துவந்து தெளிய வைத்துதான் குடிக்கவேண்டும். அப்படித்தான் தலைவனுடைய ஊரும் இருந்திருக்கிறது என்பது இதனால் புலப்படும்.

ஆனால் தலைவியோ எந்தவிதத் தயக்கமுமின்றி, "கலங்கல் நீராயினும் தலைவன் ஊர் தண்ணீர் குடிப்பதற்குச் சுவை மிகுந்தது' என்று கூறுகிறாள்.

இந்தப் பதில் தலைவிக்குத் தலைவனுடைய ஊரும் அந்தப் புதிய வாழ்வும் பிடித்துப் போய்விட்டது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. பிறந்த வீட்டில் பெண் எவ்வளவுதான் செழிப்போடு வாழ்ந்திருந்தாலும் புகுந்த வீடு, ஊரில் உள்ள குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக்கொண்டு வாழ்வதுதான் இல்லறம் ஏற்கும் பெண்ணுக்குப் பெருமை என்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள கபிலரின் இந்தப் பாடல் படித்து இன்புறுதற்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT