சங்க கால அரசில் முரசுக்கு முக்கியத்துவம் தந்து தனியிடமும் தந்து மயிற்பீலியும் மணிமாலையும் சூடி பலியும் தந்து அச்சத்தோடு வழிபட்டதுண்டு. மேலும் அதை நீராட்டி பெருஞ்சடங்காகவும் கொண்டாடி முரசுக் கட்டிலில் இருத்துவர்.
சேர மன்னனாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் அரண்மனைக்கு வந்த புலவர் மோசிகீரனார், பயணக் களைப்பின் காரணமாக முரசுக் கட்டில் இருந்த இடம் காலியாக இருந்ததால் அதில் படுத்து கண்ணயர்ந்துவிட்டார். அச்சமயத்திற்கு முன்னால் முரசை நீராட்டுவதற்கு எடுத்துச் சென்றதும், அந்த இடத்தின் புனிதம் தெரியாததாலும் அதில் படுத்துறங்கிவிட்டார்.
அவ்வழியே வந்த சேர மன்னன், உறங்குபவர் அறிவார்ந்த புலவர் என உணர்ந்து வாளைத் தூக்கி எறிந்துவிட்டு கட்டிலருகே கிடந்த கவரியை எடுத்து அவரது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவரியால் வீசினான்.
புலவர் கண்விழித்து திடுக்கிட்டு மன்னன் தனக்குத் தொண்டு செய்யும் காட்சியைக் கண்டு நடுங்கினார். பிறகு தன் மனதில் தோன்றிய கருத்தைப் பாடலாகத் தந்தார்.
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும்நல் தமிழ் முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடம் கமழ
இவணிசை உடையோர்க் கல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குரிசில் நீ ஈங்கிது செயலே!
(புறநானூறு - 50)
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல நல்ல தமிழைப் பயின்றதற்கு அடியேன் அறியாமல் செய்த பிழையாயினும், முரசுக்கட்டில் இருந்த இடத்தில் படுத்ததற்கு மன்னிப்பு கிடையாதெனினும், உன் வாளால் என்னை வெட்டி இரு கூறாக்காமல் உயிருடன் விட்டு கவரி கொண்டு வீசினாயே மன்னா...
நற்றழிழை நான் கற்றதற்கு பெரும் பரிசாகவே கருதுகிறேன். வெற்றித் தலைவன் சேர மன்னனே தமிழுக்கும் தமிழ்ப் புலமைக்கும் நீ தரும் மரியாதையை போற்றி வணங்குகிறேன் என்கிறார் மோசி கீரனார்.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் வளர்ப்போர்க்கு உற்சாகமும் மரியாதையும் தருவதில் தமிழகத்தை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல. நம்மினும்
புலவர் சிறப்புடையவர் என கோலோச்சிய சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனின் செயல் தமிழன்னைக்கு செய்த தொண்டேயாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.