தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (28-01-2024)

DIN


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான "இலக்கிய மாமணி' விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எந்த விருதாக இருந்தாலும், அந்தந்த ஆண்டுக்கான விருதுகளை அந்தந்த ஆண்டே அறிவித்து வழங்கவும் வேண்டும். இரண்டாண்டுகள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மொத்தமாக விருதுகளை அறிவிப்பதும் "சமஷ்டி திருமணம்' நடத்துவதுபோல, ஒரே மேடையில் பலரைக் கெளரவிப்பதும் விருது பெறுபவர்களுக்குச் செய்யப்படும் அவமரியாதை. 

ஒருவர் கெளரவிக்கப்பட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும்போது, அந்த கெளரவத்துக்கு ஏற்ப அவர் நடத்தப்படுவதும் அவசியம். அவர்களது தனித்த அடையாளமும் கெளரவமும் இதனால் பாதிக்கப்படுகின்றன. 

கூட்டத்தில் ஒருவராக விருது வழங்கப்படும் அறிஞர்களின் மனக்குமுறலை அவர்கள் சார்பில் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன் - கவனம் பெறும் என்கிற நம்பிக்கையில்!

--------------------------------------------------

பொங்கல் தினத்தன்று, அதாவது ஜனவரி 15-ஆம் தேதி நான் கோவையில் இருந்தேன். பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆலயத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்று வந்தால், அந்த அழைப்பைவிட குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது என்பது முக்கியமல்ல என்று கருதுபவன் நான். 

ஆயிரக்கணக்கான ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தர்கள் குழுமியிருந்த அந்த நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வந்திருந்தார். பேசிக் கொண்டிருந்தபோது, மேகாலய மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த சண்முகநாதன் குறித்த பேச்சு வந்தது. கோவை ராம் நகரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சண்முகநாதனை சந்திக்கச் செல்ல இருப்பதாக அர்ஜுன் சம்பத் சொன்னவுடன், அவரைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன்.

கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஓர் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முழுநேர ஊழியர்களாகத் தங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும், கம்யூனிஸ இயக்கத்திலும் இணைத்துக்கொள்பவர்களின் கொள்கைப் பிடிப்பும், எளிமையான வாழ்க்கையும் ஈடு இணையில்லாதவை. இரண்டு அமைப்புகளும் எதிரெதிர் துருவங்களாக இருக்கலாம். ஆனால் எளிமை, நேர்மை, சித்தாந்த வைராக்கியம் ஆகியவற்றில் காணப்படும் ஒற்றுமையை நான் வியந்து பார்க்கிறேன்.

மேகாலய ஆளுநராக இருந்தபோது, தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சண்முகநாதனை நான் சந்திப்பது வழக்கமாகவே இருந்து வந்தது. சைவத் திருமுறைகளில் அவருக்கு இருக்கும் ஆழங்காற்பட்ட புலமையையும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அங்குலத்தையும் தனது காலால் அளந்ததுபோலத் தெரிந்து வைத்திருக்கும் புரிதலையும் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.

தெய்விகமும் தேசியமும் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு இரண்டு கண்கள் என்பார்கள். ஆனால், சண்முகநாதனுக்கு சைவமும் தமிழும் இரண்டு கண்கள். அன்றைய அரசியலில் இருந்து இன்றைய அரசியல் வரை, ஆன்மிகத்திலிருந்து இலக்கியம் வரை ஏறத்தாழ ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அவரிடமிருந்து விடைபெறும்போது, அவர் எழுதிய "இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

"நமது முன்னோர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சுயநலம் சிறிதும் இல்லாமல் உலக நன்மைக்காகவே வாழ்ந்தவர்கள். இந்த மண்ணில் விளைந்த மகத்தான கருத்துகளை மாணிக்க மாலையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். கடல் போன்று அகன்று, விரிந்த ஞான மரபை, ரத்தினச் சுருக்கமாக உள்ளங்கை நெல்லிக்கனிபோலப் பதிவு செய்துள்ளேன்' என்று தனது முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருப்பதைப் பிரதிபலிக்கிறது இந்தப் புத்தகம். ஆன்மிகத் தேடலுக்கு எளிமையான வழிகாட்டி!

--------------------------------------------------

புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழுக்கான சிறப்பு ஆய்வு மையத்தின் தலைவராகவும் திகழும் இரா. அறவேந்தன், இன்றைய இந்தியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் அறிஞர்களில் ஒருவர். இலக்கணப் புலமையும், இலக்கியப் புலமையும் ஒருசேர இணைந்த இரா. அறவேந்தன், 25-க்கும் அதிகமான புத்தகங்களை எழுதி இருப்பதுடன், ஆய்வுகளிலும் தனது முழுமையான நேரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செலவழிக்கும் தமிழ்த் தொண்டர்.

"மணற்கேணி' இலக்கிய இதழில் இரா. அறவேந்தன் எழுதும் கட்டுரைகள், தமிழறிஞர்கள் மத்தியில் பேசு பொருளாகவும், விவாதப் பொருளாகவும் வலம் வரும் தன்மை கொண்டவை. கடந்த பத்தாண்டுகளாக அந்த இதழில் வெளிவந்த கட்டுரைகளும், வேறு இதழ்களில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன.
"இலக்கியம்வழி வரலாற்றாக்கமும் அடையாளப்படுத்தமும்' என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் பத்து கட்டுரைகளும், இணைக்கப்பட்டிருக்கும் பின்னிணைப்புகளும் தமிழறிஞர்கள் பலரும் சிந்தித்துக்கூடப் பார்த்திராத எல்லைகளில் பயணிக்கப் பாதை போட்டுத் தருகின்றன. நான் தமிழறிஞனோ, தமிழில் ஆழங்காற்பட்ட புலமை கொண்டவனோ அல்ல என்பதால், இரண்டாவது வாசிப்புக்கு முனைந்திருக்கிறேன்.

விமர்சனப் பார்வையுடன் இலக்கிய ஆராய்ச்சி நடத்த முற்படுபவர்கள் கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகம் இது. தமிழாராய்ச்சித் தளத்தில், பல கட்டமைப்புகளைப் புரட்டிப் போடும் புதிய சிந்தனைகளின் மணற்கேணி இரா. அறவேந்தனின் "இலக்கியம்வழி வரலாற்றாக்கமும் அடையாளப்படுத்தமும்'.

--------------------------------------------------

விமர்சனத்திற்கு வந்திருந்தது அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் 81 கவிதைகள் அடங்கிய தொகுப்பான "தழும்பின் மீதான வருடல்' - இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு என்கிற குறிப்புடன். அதில் இடம் பெற்றிருக்கும் "அந்தாதி' என்கிற கவிதையில் இருந்து சில வரிகள் - 
ஆதி கேள்வியே நவீன கேள்வியும்
யார் நீ...
ஆதிவலியே 
நவீனவலியும்
எங்கே நீ...
ஆதிக்குழப்பமே
நவீனக் குழப்பமும்
ஏன் எப்படி...
ஆதித்தேடலே
நவீனத்தேடலும்
உண்மை எது...
ஆதி பாவமே
நவீன பாவமும்
களை உடுத்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் சாரல் மழை

செல்லமுத்து மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

கடாம்பூரில் குடிநீரை சீராக விநியோகிக்க கோரிக்கை

கீழ்வேளூரில் 7-வது நாளாக மழை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT