முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 21-07-2024

பொன்விழா காணும் சென்னை கம்பன் கழகம் தொடங்கிய அடுத்த ஆண்டில் தொடங்கப்பட்டது புதுக்கோட்டை கம்பன் கழகம்.

Updated On : 21 ஜூலை, 2024 at 11:35 AM
பகிர்:
Updated On : 21 ஜூலை, 2024 at 11:28 AM

பொன்விழா காணும் சென்னை கம்பன் கழகம் தொடங்கிய அடுத்த ஆண்டில் தொடங்கப்பட்டது புதுக்கோட்டை கம்பன் கழகம். அதன் 49-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமாருடன் கடந்த திங்கள்கிழமை கலந்துகொண்டேன்.

எத்தனையோ கம்பன் கழகங்களும் இலக்கிய அமைப்புகளும் இருந்தாலும், புதுக்கோட்டை கம்பன் கழகத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது என்னவென்றால், ஆண்டுதோறும் தொடர்ந்து 10 நாள்கள் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தும் ஒரே அமைப்பு எனக்குத் தெரிந்து புதுக்கோட்டை கம்பன் கழகம் மட்டுமே.

தமிழுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தவர்கள் பலர் தமிழ் வளர்க்கப் பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள். நீதிபதிகள் மு.மு.இஸ்மாயிலும், எஸ்.மகராஜனும் கம்பனில் தோய்ந்தவர்கள். சென்னை கம்பன் கழகத்தை உருவாக்கி நிலைநிறுத்தியதில் பெரும் பங்காற்றியவர்கள்.

Advertisement

சமீப காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியனும், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்கும் நீதிபதி அரங்க.மகாதேவனும் தங்களது தமிழால் சிறப்பிக்காத இலக்கிய அமைப்புகளே இல்லை எனலாம்.

சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் அடைந்தபோது நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தமிழ் வளர்க்கும் பொறுப்பை நீதிபதி அரங்க.மகாதேவனிடம் ஒப்படைத்தார் என்றால், இப்போது உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயர்வு பெற்ற அரங்க.மகாதேவனிடமிருந்து அந்தப் பொறுப்பு நீதிபதி ஆர்.

சுரேஷ்குமாருக்கு வந்திருக்கிறது. தொடர் ஓட்டப் பந்தயத்தில் 'பேட்டன்' கைமாறுவதுபோல தமிழ் வளர்க்கும் பொறுப்பு கைமாறுகிறது...

நீதிபதி ஆர்.சுரேஷ்குமாருக்கும் கம்பனுக்குமான தொடர்பு அவரது கல்லூரி நாள்களிலேயே தொடங்கிவிட்டது. அவரது தந்தையார் சி.இராமச்சந்திரன் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் துணைத் தலைவராக நீண்ட காலம் இருந்தவர். காங்கிரஸ்வாதியான அவர் வல்லத்திராக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவராக அரை நூற்றாண்டு காலம் இருந்தவர் என்பதிலிருந்து அவரது செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு இலக்கிய ஆளுமைகளை ஒப்பந்தம் செய்ய தனது தந்தையாருடன் செல்வதில் தொடங்குகிறது, உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமாரின் கம்பனுடனான தொடர்பு. தற்போது புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலராக இருக்கும் இரா.சம்பத்குமார் இவரது சகோதரர் என்பதால் கம்பனுடனான நெருக்கம் தொடர்கிறது. 'கம்பர் ஒரு சித்தர்' என்பதில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமாருக்கும், அவரது சகோதரர் ஆர்.சம்பத்குமாருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.

இவர்களைப் போல, 'கம்பன் புகழ் பாடித் தமிழ் வளர்க்கும் திருக்கூட்டம்' ஊருக்கு ஊர் இருப்பதுதான் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பாதுகாப்பு!

================================

Updated On : 21 ஜூலை, 2024 at 11:35 AM

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப. இலக்கிய ஆர்வலரும்கூட. ஆர்வலர் மட்டுமல்ல சொற்பொழிவாளரும்தான் (கம்பன் கழகங்களின் கவனத்துக்கு...).

இவரது நிர்வாகத் தலைமையில் இயங்கும் விருதுநகர் மாவட்டம், 'கரிசல் நிலவியல் கதைகள்...' என்கிற தலைப்பில் கரிசல் மண் தந்த 44 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

கரிசல் நிலப்பரப்பு என்பது விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பரவிக் கிடக்கிறது. திருமங்கலத்துக்கு தெற்கே கங்கைகொண்டானுக்கு வடக்கே உள்ள நிலப்பரப்பை கரிசல் நிலம் என்று எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறிப்பிடுவார். இதுவரை 8 சாகித்திய அகாதெமி விருதுகள் கரிசல் படைப்பாளிகளுக்கு கிடைத்திருக்கிறது என்பதிலிருந்து அந்த மண்ணின் மகிமையை புரிந்துகொள்ளலாம்.

ச.தமிழ்ச்செல்வனும், ம.மணிமாறனும் தொகுப்பாசிரியர்களாக இருந்து உருவாக்கியிருக்கும் இந்த சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆவணப் பதிவு என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இதில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் அனைவருமே தங்களது தனித்தன்மையால் தடம் பதித்தவர்கள். 60 சிறுகதைகளும் 60 எழுத்தாளர்களின் படைப்புகளாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

================================

Updated On : 21 ஜூலை, 2024 at 11:35 AM

மாணவப் பருவத்தில் ஆனந்த விகடன் இதழில் பரணீதரன் எழுதிய 'அருணாசல மகிமை' தொடரைப் படித்தது முதல் ரமண மகரிஷி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ரமணர் உடனான பால் பிரண்டனின் பேட்டியை படித்தது முதல் அது பக்தியாகவே மாறியது.

ரமணர் குறித்த எந்தவொரு செய்தியோ புத்தகமோ கண்ணில் பட்டாலும், எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அதைப் படிப்பதை வழக்கமாக்கிவிட்டேன். விமர்சனத்துக்கு வந்திருந்தது முனைவர் அபிநவ ராஜகோபாலன் எழுதிய 'ரமணரின் பார்வையில் 'நான் யார்?'' என்கிற புத்தகம்.

வேத காலம் முதல் ரமணர் காலம் வரையிலான முனைவர் அபிநவ ராஜகோபாலனின் ஆன்மிகப் பயணம்தான் இந்தப் புத்தகம். 'ரமணோதயம்' என்கிற இதழில் வெளிவந்த தொடரின் தொகுப்பு.

சாமானியர்களுக்கும் ரமணரின் 'நான் யார்?' என்ற சிந்தனை சென்றடைய வேண்டும் என்கிற முனைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் சம்ஸ்கிருத வேதமும், தமிழ் வேதமும், திருமுறைகளும், சித்தர் பாடல்களும் பொருத்தமாகக் கையாளப்பட்டிருப்பது வித்தியாசமான ஆன்மிக சிந்தனைக்கு வழிகோலுகிறது.

Updated On : 21 ஜூலை, 2024 at 11:35 AM

================================

கூடுவாஞ்சேரி சீ.பாஸ்கர் எழுதிய 'விழியின் ஓசை' என்கிற கவிதைத் தொகுப்பு. இதை 'தலைப் பிரசவத்தில் வெளிவந்த கவிதைக் குழந்தை' என்று அறிமுகப்படுத்துகிறார் அவர். அதிலிருக்கும் 'அகிம்சாவாதி' என்கிற கவிதை இது -

சாலை விரிவாக்கத்திற்காக

தன்னை அப்புறப்படுத்தியபோது

கைகளில் ஆயுதங்களை வைத்திருந்தும்

அமைதியாகவே காட்சியளித்தார்

அய்யனார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.