அறிவியல் துறை சார்ந்த கல்வி அல்லது பணியில் இருப்பவர்களுக்கு, வேதியியல் மாற்றம் என்பது நன்றாகத் தெரியும். இரண்டு பொருள்கள் ஒன்று சேரும்போது, சில ரசாயன மாற்றம் நிகழும். இந்த மாற்றத்தால் புதிய பொருள்கள் உருவாகலாம். அவை, தனது தன்மையில், செயல்பாட்டில், வண்ணத்தில் மாறுபட்டுவிடலாம்.
கம்பனுக்கும் இந்த அறிவியல் பாடத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? இதையறிந்துகொள்ள, சேது அணை கட்டி, இலங்கைக்குள் நுழைய, கடற்கரையில் இராமனும் மற்ற வீரர்களும் காத்திருக்கும் இடத்துக்கு நாம் செல்ல வேண்டும்.
இருள் கவிந்திருந்தது. விடிந்ததும், அடுத்து செய்ய வேண்டிய செயல்கள் தொடர்பாக இராமனும் மற்றவர்களும் ஆலோசனையில் இருந்தனர். வீடணன், பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, படைவீடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். ஐயம் தரும் வகையில் இரு குரங்குகள் அங்கு சுற்றிக்கொண்டிருந்ததை கவனித்தான்.
எளிதாக அவர்களை வீடணன் அடையாளம் கண்டான். அந்த இருவரும் சுகன் மற்றும் சாரன் என்னும் அரக்கர்கள். குரங்குகளாக உருவத்தை மாற்றிக்கொண்டு ஒற்றர்களாக வந்திருக்கிறார்கள். பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்துப் பார்க்கும் அன்னப்பறவை போல, அவர்களை வீடணன் கண்டுபிடித்ததாகக் கம்பன் எழுதினான். 'மாணைக்கொடி' என்னும் ஒரு கொடியால், இருவரையும் பிணைத்த வானரங்கள் கட்டி, அவர்களின் முகத்தைத் தாக்கின. இரு ஒற்றர்களின் வாயில் இருந்தும் ரத்தம் ஒழுகியது.
அப்படியே இராமனிடம் இழுத்துப் போனார்கள். அவர்கள் இருவரையும் குரங்குகள் என்றே நினைத்த இராமன், 'அவர்களை விடுங்கள். அடிக்காதீர்கள். தாம் பிழை செய்தாரேனும் நாம் பிழை செய்யலாமா?' என்றான்.
'இல்லை. இவர்கள் இருவரும் சுகன் மற்றும் சாரன் என்னும் பெயர்கொண்ட அரக்கர்கள். குரங்குகளாக உரு மாறி, ஒற்றர் வேலை செய்து, உளவு பார்க்க வந்துள்ளார்கள்' என்றான் வீடணன். அவர்கள் இருவரும் உடனே 'நாங்கள் வானரர்கள்தான். வீடணன் இங்கே வந்து ஏமாற்றுகிறான். நமது சேனைகளைப் பார்த்து, போரில் வெல்ல முடியாது என்ற எண்ணத்துடன், நம்மையெல்லாம் கொல்வதற்காக இங்கே வந்திருக்கிறான்' என்றனர்.
வீடணனுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. 'இவர்கள் கள்வர்கள்தான் என்பதை நிரூபிக்கிறேன்' என்று ஒரு மந்திரத்தை மனத்துள் நினைத்தான். உடனே அவர்கள் இருவரின் வானர உருவங்களும் மாறி, அரக்கர்களாகத் தெரிந்தனர். இதுதான் காட்சி. இப்போது கம்பன் பாடலைக் காணலாம்.
'கள்ளரே! காண்டி' என்னா மந்திரம்
கருத்துள் கொண்டான்;
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர்,
தீர் வினை சேர்தலோடும்,
துள்ளியின் இரதம் தோய்ந்து,
தொல் நிறம் கரந்து, வேறு ஆய்
வெள்ளி போன்று இருந்த செம்பும்
ஆம் என, வேறுபட்டார்.
'இவர்கள் கள்ளத்தனமாக வந்துள்ளவர்களே! இதனை நீ இப்போதே காணலாம்' என்று சொல்லி, அரக்கர்களின் உண்மை உருவத்தைக் காட்டவல்ல ஒரு மந்திரத்தைத் தனது மனதில் வீடணன் நினைத்தான்.
உண்மை உருவைக் காட்டும் மந்திரம், அவர்களைச் சென்றடைந்தது. செம்பு உலோகத்தின் மீது பாதரசத் துளி பட்டு, நிறம் மாறி, வெள்ளிபோல் காட்சியளித்து, புடம் போட்டவுடன் மீண்டும் தனது பழைய நிறத்தை அடைவதுபோல, குரங்குகளாக உருவம் பெற்றிருந்தவர்கள், மீண்டும் தங்கள் அரக்க உருவத்தைப்
பெற்றார்கள்' என்பது பொருள். இப்படியோர் உதாரணத்துடன் அறிவியல் சிந்தனையைக் கம்பன் படைப்பில் பார்ப்பது வியப்பாகவே இருக்கிறது.
ஏறத்தாழ இதே உணர்வைத் தரும் மற்றொரு காட்சி- சீதை தீக்குளித்த பின்னால், இராமன் கோபத்தைத் தணிக்க சிவன், பிரம்மா போன்றோர் வந்தனர். சிவபெருமானின் வேண்டுகோளுக்கேற்ப தயரதனும் விண்ணுலகில் இருந்து வந்தான். இராமனை நெஞ்சம் இறுகத் தழுவிக்கொண்டான்.
'இராமா! கைகேயி என்னிடம் பெற்ற வரம் என்னும் கூர்மையான வேல், என்னைக் கொன்ற பின்னரும் நீங்காமல் என் மார்பிலேயே தங்கியிருந்தது. இப்போது உன்னை இறுகத் தழுவியபோது, உனது மார்பு என்னும் காந்தம் காரணமாக, அது என் மார்பைவிட்டு வெளியே வந்துவிட்டது!' என்றான் தயரதன்.
அன்று கேகயன் மகள் கொண்ட வரம்
எனும் அயில்வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை
நின்றது, என்னைக்
கொன்றும் நீங்கலது, இப்பொழுது
அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மாமணி
இன்று வாங்க.
'தயரதனின் இதயத்தில் இருந்த இரும்பினால் செய்யப்பட்ட வேலினை, இராமனின் மார்பு என்னும் காந்தம் வெளியே இழுத்துவிட்டது' என்பது பொருள். இரும்பை இழுத்துக்கொள்ளும் தன்மை காந்தத்துக்கு உண்டு அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.