முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 24-11-2024

தீபாவளி அன்று சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் வழியாகப் பயணிக்கும்போது ஒரு நடை நடிகர் சிவகுமாரையும் சந்தித்து தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்க விழைந்தேன்.

Updated On : 24 நவம்பர், 2024 at 9:57 PM
பகிர்:
Updated On : 24 நவம்பர், 2024 at 9:51 PM

தீபாவளி அன்று சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் வழியாகப் பயணிக்கும்போது ஒரு நடை நடிகர் சிவகுமாரையும் சந்தித்து தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்க விழைந்தேன். வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று கலகலப்பாக இயங்குவதுதான் அவரது இளமையின் ரகசியம் என்பது புரிந்தது.

எந்த அளவுக்கு நடிகர் சிவகுமார் தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பதை அன்றைய சந்திப்பு எனக்கு உணர்த்தியது. இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் தில்லி கம்பன் விழா குறித்து அவர் ஆர்வமாகவும், அக்கறையுடனும் பேசியபோது, அந்த மனிதருக்கு இருந்த உள்ளார்ந்த அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டது.

கடந்த ஆண்டு நண்பர் கே.வி.கே.பெருமாளின் முயற்சியால் தொடங்கப்பட்ட தில்லி கம்பன் கழகத்தின் இரண்டாவது ஆண்டு விழா அடுத்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் நடைபெற இருக்கிறது. அதில் நாங்கள் இருவருமே கலந்துகொள்ள இருக்கிறோம். இரண்டு நாள்களும் விழாவில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்பது அவரது அன்புக் கட்டளை.

Advertisement

தமிழ் பேசாத வடமாநிலத்தில் கம்பனுக்கும் வள்ளுவனுக்கும், இளங்கோவுக்கும் பாரதிக்கும் விழா எடுத்து நமது தமிழ்ச் சொந்தங்களை இணைக்கும் பெரும்பணியைச் செய்பவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமை'' என்பது நடிகர் சிவகுமாரின் உதட்டிலிருந்து வரவில்லை; உள்ளத்தின் குரல்.

பத்திரிகையாளர், எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் குறித்து நான் சொல்லியா தமிழ் உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்? அடேயப்பா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக "குமுதம்' இதழில் அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் வலதுகரமாக இயங்கிய, 1,500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50-க்கும் அதிகமான நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும் எழுதிக் குவித்த பத்திரிகை உலக ஜாம்பவான்களில் ஒருவர் அல்லவா அவர்!

இதற்கு முன்னால் இரண்டு முறை படித்ததுதான் என்றாலும்கூட, அவர் எழுதிய "டயானா' புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தபோது மீண்டும் ஒரு முறை எடுத்துப் படிக்கத் தோன்றியது. கடந்த நூற்றாண்டின் வரலாற்றில் லட்சக்கணக்கான மக்களின் மனதில் நீங்கொணாத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் டயானா!

Updated On : 24 நவம்பர், 2024 at 9:51 PM

இங்கிலாந்தின் அரசியாகப் பட்டம் சூட்டப்படாமலேயே ராணி ஆனவர். ""எனக்கு இங்கிலாந்து சிம்மாசனம் தேவையில்லை. மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பதையே நான் விரும்புகிறேன்'' என்று ஒரு முறை அவர் சொன்னது உண்மையாகிவிட்டது. உலகத்திலேயே மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்; அதனால்தானோ என்னவோ புகைப்படக்காரர்கள் விரட்டி விரட்டி அவரைத் துரத்துவதை தவிர்க்க நினைத்து விபத்தில் உயிரிழந்தார்.

இந்தியா வந்திருந்தபோது தாஜ்மகாலுக்கு முன்னால் டயானா தன்னந்தனியாக அமர்ந்திருக்கும்போது எடுக்கப்பட்ட படம் உலகின் பெரும்பாலான பத்திரிகைகளில் முகப்புப் படமானதை நினைவுகூரத் தோன்றுகிறது.

ரா.கி.ரங்கராஜன் எழுதிய "டயானா' படித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், தயவுசெய்து படித்துவிடுங்கள். பெரிய இலக்கியமெல்லாம் அல்ல. ஆனால், அதைப் படித்து முடித்ததும் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் விசும்பல் சத்தம் கேட்கும் என்பது மட்டும் உறுதி.

--------------------------------------------------------------------------------------------

நூலரங்கம் பகுதியில் விமர்சனம் செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்று முனைவர் மு.அருணாசலம் எழுதிய "சங்க இலக்கியங்களும் காளிதாசனும்'. அந்தத் தலைப்பு என்னை அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்கத் தூண்டியது. நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டிருப்பதுபோல, சம்ஸ்கிருதம் படிக்கவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. எப்படி கம்பனை ரசிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டுமோ, அதேபோல காளிதாசனை ரசிக்க சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் காரணம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எல்லா சம்ஸ்கிருத பண்டிதர்களும் தமிழில் புலமை பெற்றவர்களாகவும்; எல்லா தமிழறிஞர்களும் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவரான மறைமலை அடிகள் சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்ததால்தான் காளிதாசனின் சாகுந்தலத்தை தமிழாக்கம் செய்ய முற்பட்டார்.

இங்கே மட்டுமல்ல, வடநாட்டிலும்கூட சம்ஸ்கிருத பண்டிதர்கள் உருது மொழிப் புலமையும், உருது மொழி அறிஞர்கள் சம்ஸ்கிருத தேர்ச்சியும் பெற்றிருந்தனர்; இப்போதும்கூட பலர் பெற்றிருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தைப்போலவே உருது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்கிற ஆதங்கமும் எனக்கு உண்டு. மொழியியல் மாணவர்களுக்கான மும்மொழிக் கொள்கையாக தமிழ், சம்ஸ்கிருதம், உருது மூன்றும் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

Updated On : 24 நவம்பர், 2024 at 9:51 PM

மகாகவி காளிதாசன் தமிழில் புலமை பெற்றவராக இருந்திருக்கக் கூடும் என்பது முனைவர் மு.அருணாசலத்தின் கருத்து. இதை தனிநாயகம் அடிகளும் கூறியிருக்கிறார். "சங்க இலக்கியங்களும் காளிதாசனும்' அதை உறுதிப்படுத்துகிறது.

"யானையின் தும்பிக்கையும் புத்தரின் கரமும்' என்பது மதுரைக்காரரான ரகுநாத் வ என்பவரின் கவிதைத் தொகுப்பு. இது அவரது நான்காவது நூல். பல்வேறு வார இதழ்கள், சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.

--------------------------------------------------------------------------------------------


யானையின் தும்பிக்கை என்பது நம்பிக்கையின் அடையாளம். 40,000 தசைகளைக் கொண்டுள்ள தசைப் பொறியியலின் அற்புதம் தும்பிக்கை. மனித நாக்கைப்போலவே, இதற்கும் எலும்புகள் கிடையாது. ஆனால், 30,000 கிலோ வரை எடையைத் தூக்கும் வலிமை உண்டு. 19 கி.மீ. தொலைவில் உள்ள தண்ணீரை உணரும் திறன் தும்பிக்கைக்கு உண்டு என்பதுதான் வியப்பின் உச்சம்.

"யானையின் தும்பிக்கையும் புத்தரின் கரமும்' என்று தனது கவிதைத் தொகுப்புக்கு ஏன் பெயர் சூட்டினார் என்பது குறித்த விளக்கத்தை கவிஞர் ரகுநாத் வ

தரவில்லை. கவிதைகளைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கலாம்.

அந்தக் கவிதைத் தொகுப்பிலிருந்து இந்த வாரத்துக்கு நான் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதை இது-

வெள்ளாமை பார்த்த நிலத்தில் மாதமொருமுறை விளைகிறது வாடகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.