எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றே இசைநூலாகும். இதன் செய்யுட்கள் 70 எனத் தெரிகிறது. அவற்றுள் இப்போது கிடைத்திருப்பவை 24 மட்டுமே. பல வகைப் பாக்களும் பலவாய் அடிகளும் பரிந்து (ஏற்று) வரும் பாட்டாகும். காமமே கருத்தாகக் கொண்டுள்ளதால் இலக்கண முறைமையில் அகவிலக்கியமே.
ஆனால் இதுபோதுள்ள பரிபாடல் நூலில் வையை முருகன் பற்றிய பாடல்களே அகப்பொருள். பக்தி நெறியும் பாண்டியர் வழியும் பெரிதும் பேசப்படுகின்றன. எனவே புறப்பொருள் போக்கும் பெற்றிருக்கிறது. தொடக்கத்தில் 70 பாடல்களின் தொகுப்பாக விளங்கிய இந்நூலில் இப்பொழுது 22 பாக்களே உள்ளன. அவையும் திருமால், முருகன், வையை ஆகியன பற்றி அமைந்துள்ளன. பரிமேலழகரின் சீரிய உரையும் இந்நூலுக்கு அமைந்துள்ளது பெரும் சிறப்பாகும்.
மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை, வையை இவற்றின் சிறப்பும் அக்கால உணவு, ஆடை, அணிகள், கடவுள்கள், வழிபாடுகள், விழாக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. புதுப்புனல் விழாவும் மார்கழி நீராட்டு விழாவும் இனிது விளக்கப்பட்டுள்ளன.
இதில் வரும் ஒரு பாடல்-
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து ற்
அரும் பொகுட்டனைத்தே
அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க்குடிகள்
தாதுண் பறவை யனையர்
பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்
குரல் எடுப்ப
ஏமவின் றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே
(பரிபாடல் -7)
மதுரையின் அமைப்பு தாமரை மலருக்கு ஒப்பிடப்பட்டுள்ள அழகே அழகு. மதுரை நகரம் திருமாலின் உந்தியில் மலர்ந்துள்ள தாமரை மலரை ஒக்கும். அந் நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும். பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும். அந்நகரில் வாழும் தமிழராகிய குடிமக்கள் அம்மலரின் தாதுக்களை ஒப்பர். அந் நகருக்கு வரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர்.
மதுரையிலுள்ள மாந்தர் வேத முழக்கத்தாலே நாள்தோறும் துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போல கோழி கூவுவதாலே துயிலெழுதலில்லை என்றுரைப்பார்.
இச்செய்யுளில் வரும் மாலையணி என்னும் உவமை சிறப்பானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.