முனைவர் ப.ஜீவகன்
மதம் பிடித்த பட்டத்து யானையிடமிருந்து தன்னைக் காப்பாற்றி உயிர்ப்பிச்சை அளித்த சீவகன் மீது தீரா காதல் கொண்டு பசலை நோயால் வாடி மெய் சோர்ந்து காணப்படுகிறாள் குணமாலை.
அவள் மீண்டும் சீவகனைக் கண்டுவிட மாட்டோமா; அவனுக்கும் தன் மீது காதல் ஏற்பட்டு இருக்குமா; தன்னை விரும்பி ஏற்றுக் கொள்ள வருவானா; என்றெல்லாம் அவன் நினைவாகவே இருந்தாள்.
அப்போது, தான் அன்புடன் வளர்த்த கிளியை சீவகனிடம் தூதாக அனுப்புகிறாள். இந்த நிலையில், சீவகன் வருவானா என்பதை கூடற்சுழி இழைத்து உறுதிப்படுத்த விரும்பினாள்.
"கூடற்சுழி' என்பது சுட்டு விரலால் கண்ணை மூடிக்கொண்டு மணற்பரப்பில் வரையப்படும் வட்ட வடிவமாகும். வரையப்படும் கோட்டின் இரு முனைகளும் ஒன்றுகூடி வட்டம் அமைந்துவிட்டால் எண்ணியது ஈடேறும். கூடாமல் போனால் எண்ணியது ஈடேறாது என்ற நம்பிக்கை பழந்தமிழரிடம் இருந்திருக்கிறது.
அவ்வாறு குணமாலை, சீவகன் வருவான் என்ற நம்பிக்கையில் கூடற்சுழி இழைக்க ஆரம்பித்தவள் ஒருவேளை கூடற்சுழி சரியாக கூடவில்லை எனில், என் பாவி உயிர் நீங்கும் என்று எண்ணி கூடற்சுழியைப் பாதியிலேயே நிறுத்தி விட்டாள்.
ஆனால், கூடற்சுழி இழைக்கும் உன் மிகுந்த நம்பிக்கையோடு போர் வேல் ஏந்திய சீவகனது அணிபுனைந்த அழகிய மார்பு என்னைத் தழுவக்கூடுமாயின் தவறாது வந்து தழுவட்டும் என்று நினைத்து முத்துக்கள் நிறைந்த மணல் மேல் எண்ணியது ஈடேற வேண்டி கூடற்சுழி இழைத்தாள் என்பதனை,
சென்றார் வரைய கருமஞ் செருவேலான்
பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற்
குன்றாது கூடுகெனக்கூறி முத்த வார்மணல்மேல்
அன்றாங் கணியிழையாள் ஆழி யிழைத்தாளே
(சீவக சிந்தாமணி 1037)
இங்கு சீவக சிந்தாமணி குறிப்பிடும் ஆழியிழைத்தளைத்தான் கூடற்சுழி என்று அழைக்கப்படுகிறது.
குணமாலை இழைத்த கூடற்சுழி பாதியில் நிறுத்தியதற்குக் காரணம், ஒரு வேளை இக்கூடற்சுழி சரியாக கூடவில்லை எனில், சீவகன் வரமால் போய்
விடுவானோ? அப்படி அவன் வராமல் போனால் என் உயிர் நீங்கும் என்ற அளவில் அவள் அவன் மீது கொண்ட காதலின் திண்மையை உணரமுடிகிறது.
இதுபோல, கூடற்சுழி இழைக்கும் பழக்கம்
அகநானூற்றில் முதற்கொண்டே காணப்படுகிறது.
தலைவன் வராமையால் இன்று வருவானோ என்ற நம்பிக்கையில் அகநானூற்றில் தலைவி ஒருத்தி அவன் சென்ற நாள்முதல் சுவற்றில் கூடல் இழைத்துப் பார்த்து வட்டங்களின் எண்ணிக்கையை வைத்து எத்தனை நாள்கள் தன்னைவிட்டுப் பிரிந்திருக்கிறான் என்று நினைந்து நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் கண்ணீரால் சுவர் நனைந்துசிந்துவதாக...
"மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்'
(அகநானூறு 351)
என்று தலைவியின் தீராத காதலை ஆழி இழைத்தளின் வழியே அகநானூறும் வெளிப்படுத்துகிறது. எழுதும் சுவர் நனைந்து சிந்தும் அளவு தலைவன் மீது காதல் கொண்ட அந்தத் தலைவியின் காதலைப் போலவே சீவக சிந்தாமணியிலும் குணமாலையின் காதல் கூடற்சுழியை முற்றாக அழிக்காமல் நிறுத்தியதிலிருந்தும், அவளின் திண்ணிய காதல் நெஞ்சம் வியப்படையச் செய்கிறது.
இதன்மூலம் ஆழி இழைத்தல் சங்க காலப் பெண்களிடம் காதலன் வருகை குறித்த நம்பிக்கையாக இருந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.