தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 17-08-2025

இலக்கியவாதிக்குள் அரசியல்வாதி இருப்பதுபோல, அரசியல்வாதிக்குள் இலக்கியவாதி இருப்பது ஒன்றும் புதிதல்ல.

இணையதளச் செய்திப் பிரிவு

இலக்கியவாதிக்குள் அரசியல்வாதி இருப்பதுபோல, அரசியல்வாதிக்குள் இலக்கியவாதி இருப்பது ஒன்றும் புதிதல்ல. எந்த அளவுக்குத் தீவிரமான அரசியல்வாதியோ அதே போலத் தீவிரமான இலக்கியவாதியாகவும் இயங்கிக்கொண்டிருந்தவர் வெள்ளிக்கிழமை மாலையில் நம்மைவிட்டுப் பிரிந்த பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன்.

காந்தி ஜெயந்தி என்றால் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும், காமராஜரின் நினைவு நாளும் கூடவே நினைவுக்கு வருவதுபோல, இனிமேல் சுதந்திர தினம் என்றால் மகான் அரவிந்தரின் பிறந்த நாளுடன், இல.கணேசனின் மறைவு தினமும் ஞாபகத்துக்கு வரும். மகான் அரவிந்தர் மீது அளப்பரிய பக்தியும், பாரத தேசத்தின் மீது அசைக்க முடியாத பற்றும் கொண்டிருந்த காரணத்தாலோ என்னவோ, ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவர் மீளா விடை பெற்றிருக்கிறார்.

சித்தர் வாக்குப்படி, 'புண்ணியம் செய்தோருக்கு பூவுலகில் பூவும் உண்டு; நீரும் உண்டு'. அதாவது புண்ணிய ஆத்மாக்கள் உலக வாழ்க்கையிலிருந்து விடைபெறும்போது மலர்கள் மட்டும் சொரியப்படுவது இல்லை; வானிலிருந்து நீரும் (மழையும்) சொரியப்படும். இறுதி ஊர்வலத்திலோ, சிதைக்குத் தீ மூட்டும்போதோ மழை பொழிந்தால், அந்த ஆன்மா சொர்க்கத்துக்குப் போகும் என்று சொல்வார்கள். இல.கணேசனின் இறுதிப் பயணத்தில் மழை பொழிந்தது.

இல.கணேசன் நடத்திய 'பொற்றாமரை' இலக்கிய அமைப்பு, தேசிய உணர்வாளருக்கும் தமிழ் பற்று உண்டு என்பதை உணர்த்தியது. ஹிந்திக்கு ஆதரவாக இயங்கும் பாஜக

என்ற தோற்றத்தை அகற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அவரால் தொடங்கப்பட்டதுதான் 'பொற்றாமரை'. மாதந்தோறும் அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் முக்கியமான, அரசியல் சாயம் பூசிக்கொள்ளாத, இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர். அதற்காக அவர்கள் பெருமைப்பட்டனர்.

மகாகவி பாரதியார் மீது அவருக்கு இருந்த காதல் கொஞ்சம் நஞ்சமல்ல. 'மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் பொழுது போகவில்லை என்றால் என்ன செய்வீர்கள்' என்று அவர் ஆளுநரான சில மாதங்களில் சந்தித்தபோது கேட்டேன். ''துணைக்கு பாரதியார் இருக்கும்போது பொழுது போகவில்லை என்கிற கேள்விக்கு இடமேது?. ஒவ்வொரு முறை பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும் போதும் புதுப்புது அர்த்தங்கள் எனக்குப் புலப்படுகின்றன'' என்பது அவருடைய பதிலாக இருந்தது.

பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்', 'சின்ன சங்கரன் கதை', 'தேசிய கீதங்கள்', 'கண்ணன் பாட்டு' ஆகியவை அவருக்கு மனப்பாடம். ஆண்டுதோறும் பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் தேதி திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடைபெறும் ''ஜதிப்பல்லக்கு'' நிகழ்ச்சியில் முடிந்தவரை பங்குபெறுவார்.

அப்படி ஒரு முறை ''ஜதிப்பல்லக்கு'' ஊர்வலத்தில் நாங்கள் கலந்துகொண்டபோது அவர் சொன்ன வார்த்தை இப்போதும் காதில் ஒலிக்கிறது. ''பாரதியாரைத் தூக்கிப் பிடித்ததில் ம.பொ.சி. உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களுக்கும், எங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் பங்கு இருப்பதைவிட, ஜீவா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் உண்டு!''

அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் தலைவராகத் தமிழகத்தில் வலம் வந்தவர்கள் வெகு சிலர்தான். கொள்கை ரீதியாக இல.கணேசனுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், நட்பு ரீதியாக அவரை நேசித்தவர்கள் ஏராளம். இல.கணேசன் என்னைத் தனது சகோதரர்களில் ஒருவராகவே கருதி அன்பு செலுத்தியவர். அவரது மறைவில் நிறைவேறாத குறை ஒன்று தினமணிக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆண்டுதோறும் 'தினமணி' வழங்கும் மகாகவி பாரதியார் விருது விழாவில் அவர் தலைமையேற்று விருது வழங்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் கட்டாயம் கலந்து கொள்வதாகச் சொல்லி இருந்தார்!

எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருந்த புத்தகங்களில் சட்டென பார்வையில் பட்டது ' விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள் ' என்கிற புத்தகம். எட்டாண்டுகளுக்கு முன்பே வெளியாகி மறுபதிப்புக் கண்டிருக்கும் புத்தகம் இது. எழுதி இருப்பவர் பி.தயாளன்.

கவிஞர் தோழர் ஜீவபாரதி, 'ஜனசக்தி' நாளிதழின் கட்டுரைகள் பகுதி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வெளிவந்த தொடர்தான் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உள்ள முன்னோடி விடுதலைப் போராட்டத் தியாகிகளையும், தமிழகத்தின் விடுதலை வேள்விப் போராளிகளையும், அவர்களது பின்னணி, பங்களிப்பு, தியாகம் உள்ளிட்ட தகவல்களுடன் தொடர் கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கிறார் பி.தயாளன்.

முதல் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனில் தொடங்குகிறது கட்டுரைத் தொகுப்பு. தேர்ந்தெடுத்த 56 தலைசிறந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாறும், தியாகமும் மட்டுமல்லாமல் அவர்கள் குறித்த சுவாரஸ்யமான சம்பவங்களும், அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளும்கூடப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழக விடுதலைப் போராட்டத் தியாகிகள் குறித்து 'ம.பொ.சியும், தோழர் ஸ்டாலின் குணசேகரனும் எழுதியிருக்கும் புத்தகங்களின் வழியில் 'விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள் ' தேசிய அளவில்

பங்களிப்பு நல்கிய முக்கியத் தலைவர்களையும் இணைத்துப் பதிவு செய்திருக்கிறது.

சுவாரஸ்யமாக வாசித்து முடித்த பிறகு, ஒரு சில விடுபடல்கள் வேதனை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட மனமாச்சர்யம் காரணமாகவோ என்னவோ அந்தப் பட்டியலில் மகாகவி பாரதியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ம.பொ.சி. உள்ளிட்டோர் இல்லாமல் இருப்பது தற்செயலான விடுபடலாகத் தோன்றவில்லை. அடுத்த பதிப்பில் ஆசிரியர் தயாளன் இவர்களையும் இணைத்து புத்தகத்தை முழுமை பெறச் செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், தவிர்த்துவிடக் கூடிய ஆளுமைகளா அந்த ஐந்துபேரும்?

தினமணி பக்க வடிவமைப்பாளர் காசி விஸ்வநாதன் ஓர் இலக்கிய ஆர்வலர். புதுக் கவிதைகளைத் தேடிப் படிக்கும் பாரதிப் பித்தர். அவர் படித்த இந்தக் கவிதையை என் பார்வைக்குக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்கள் பார்வைக்குப் பரிந்துரைக்கிறேன்.

இன்று

கால்மிதியாகவோ

கரித்துணியாகவோ

கிடக்கும் துணி

ஒரு காலத்தில்

ஆசைப்பட்டு வாங்கிய

அழகிய துணிதான்

இந்த நிலைமை

துணிகளுக்கு மட்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT