சங்க இலக்கியங்கள் காதலை, வீரத்தைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அதற்குள் நட்பின் நறுமணம் நிறைந்திருப்பதையும் உணர முடியும்.
சங்ககாலத்து நட்பு என்றதும், நம் நினைவில் வருபவை கோப்பெருஞ்சோழன்} பிசிராந்தையார் நட்பு, அடுத்து தனது வாழ்நாளை நீட்டிக்க விரும்பாமல் ஒளவை வாழ வேண்டுமென நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்த அதியமான் } ஒளவை நட்பு, வள்ளல் பாரியோடு தானும் உயிர்துறக்கச் சித்தமாகும் பாரி } கபிலர் நட்பு ஆகியனவே. இவர்களுடைய நட்பு, புறம் சார்ந்த பாடல்களில் வெளிப்படும் நட்பாகும்.
அகப்பாடல்களில் தோய்ந்து கிடக்கும் நட்பின் இனிமை சற்றே மாறுபட்டது, வண்ணமயமானது. தோழி இல்லாமல் சங்க இலக்கியக் காதல் சுவை பெறாது. தலைவியின் காதலை வெற்றி பெறச் செய்யும் ஆற்றல் தோழிக்கே இருக்கிறது. தலைவியும் எவரிடத்தும் வெளிப்படுத்த இயலாத உணர்வுகளையும் தனது தோழியிடம் மட்டும் வெளிப்படுத்துகிறாள்.
கல்போற் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி (அகம் 1)
என்று தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றபோது தனது துயரத்தைத் தோழியிடம் சொல்லி ஆறுதல் பெறுகிறாள்.
காதல் செய்யும் காதலன் திருமணம் பற்றி நினைக்காத நிலையில், அவனுக்குத் தலைவியின் நிலையை, துயரத்தை அவளுக்கு இருக்கும் ஆபத்தை உணர்த்தி தலைவனை திருமணத்தை நோக்கி நகர்த்தும் பணியைக் கண்டிப்புடன் செய்கின்றாள் தோழி.
யாயே கண்ணினும் கடுங்கா தலளே
எந்தையும் நிலனுறப் பொறா அன் சீறடிசிவப்ப
எவனில குறுமகள் இயங்குதி என்னும்
யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே (அகம் 12)
தோழி, இரவு நேரத்தில் காதலியைக் காண வரும் காதலனைக் கண்டிக்கிறாள். தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தும் தோழி, அவனிடம் தலைவியை விட்டுக்கொடுக்காமல் பேசும் சிறப்பை அகநானூற்றுப் பாடல்களில் காணலாம்.
"தலைவி மீது நீ மட்டுமே அன்பு கொண்டிருப்பதாக நினைக்கிறாய். ஆனால், அவளது தாய் தன் கண்ணைப் போன்று மகளைப் போற்றுகின்றாள். தந்தையோ மகள் நிலத்தில் நடந்தால் அவள் கால்கள் சிவந்து போகுமே என்று வருந்தும் அளவிலான அன்பு கொண்டவர். இருதலைப் பறவையை நீ அறிவாயா? அப்பறவையைப் போன்று இரு தலை ஓருயிர் என்று நாங்கள் இருவரும் நட்போடு இருப்பவர்கள்.
அதனால் இரவில் வருவதை விடுத்து, அவளை மணம் செய்து கொள்வதைப் பற்றி சிந்தை செய்' என்கிறாள். அன்பும் அறிவும் நிறைந்தவளாக, தலைவன் தலைவி வாழ்வு சிறக்க வழி காண்பவள் தோழியே. அதனால் தான் தொல்காப்பியம்,
தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன
(தொல் : பொருள்: 11) என்கிறது.
தலைவியின் காதலை அவளது குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தி காதலை கற்புவாழ்வாக மாற்றும் நேர்மையும் சாமர்த்தியமும் சங்கத் தோழியின் தனிச் சிறப்பு.
அகவன் மகளே அகவன் மகளே
மனவு கோப்பு அன்ன நல்நெடும் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நல்நெடும் குன்றம் பாடிய பாட்டே (குறுந்தொகை 23)
தலைவியிடம் மாற்றம் தெரிவதைக் கண்ட அவளது குடும்பத்தார், பெண்ணின் நிலைக்குக் காரணம் யாதென்று அறிந்து கொள்ள குறி கேட்க நினைத்து குறி சொல்லும் பெண்ணை வரவழைக்கிறார்கள். வந்த பெண்மணி இறைவனை வாழ்த்த குறிஞ்சிநிலத்தின் மலையைப் பற்றிப் பாடுகிறாள்.
அந்த மலையில் வாழ்பவனே காதலன் என்பதை குறிப்பால் உணர்த்த விரும்புகிறாள் தோழி. "மீண்டும் மீண்டும் அவருடைய மலையைப் பற்றி பாடுங்கள்' என்று கேட்கிறாள். குறி சொல்லும் பெண் பாடுகின்ற மலை அவருடைய மலை எனில், அவர் யார் என்பதை குடும்பத்தார் கண்டுகொள்கிறார்கள். இப்படி தோழியின் உளவியல் அறிவைச் சொல்வதோடு அவள் தலைவியின் மீது கொண்டுள்ள நட்பின் ஆழத்தையும் உணர்த்துகிறார் ஒளவை.
ஆண்களின் நட்பைக் காட்டிலும் பெண்கள் நட்பு சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பாராட்டப்படுகிறது. இன்பமான பொழுதுகளிலும் பிரச்னைகள் தோன்றும்பொழுதும் துயரம் மிகும்பொழுதும் நிறைவான துணையாக தோழமையே முன்னிற்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.