முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 23-02-2025

எந்தவொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்வார்கள்.

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 6:41 PM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2025 at 6:36 PM

எந்தவொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்வார்கள். போளூரில் நடக்கும் ஒரு திருமணத்துக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டேன். சென்னையில் பதிப்பு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நள்ளிரவுக்குப் பிறகு சாலை மார்க்கமாகப் பயணித்த களைப்பின் காரணமாக போக முடியவில்லை.

'இலக்கியச் செம்மல்' குமரி அனந்தன் குடியாத்தம் அத்தி கல்லூரி வளாகத்தில் தங்கி இருப்பதாக, தமிழிசை சௌந்தரராஜன் என்னிடம் தெரிவித்திருந்தார். காமராஜருக்குத் திருப்புமுனையாக அமைந்த குடியாத்தத்தில்தான் தனது கடைசிக் காலம் கழிய வேண்டும் என்கிற அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அத்தி மருத்துவமனையையும், இணை மருத்துவக் கல்லூரியையும் நடத்தி வருகிறார்கள் மருத்துவர்களான சௌந்தரராஜன் தம்பதியினர்.

குடியாத்தம் சென்று குமரி அனந்தனையும், அகவை 90 எட்டிய பெரியவர் வே. பதுமனாரையும் சந்திப்பது என்று தீர்மானித்தேன்.

Advertisement

என்னுடன் முதுநிலை உதவி ஆசிரியர் நந்தகுமாரும், வேலூர் நிருபர் தமிழ்ச்செல்வனும் வந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக, வேலூர் செல்லும் போதெல்லாம் ஸ்ரீபுரம் பொற்கோயிலையும், அதைக் கட்டி எழுப்பி மிகப்பெரிய சமூக, ஆன்மிகப் பணியை நடத்திக் கொண்டிருக்கும் சக்தி அம்மாவையும் சந்திக்க வேண்டும் என்று விழைவேன். அதற்கான வேளை அமையவில்லை. 'ஸ்ரீபுரம்' என்கிற பெயர்ப்பலகையைப் பார்த்தபோது, மின்னல் வெட்டைப்போல ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது.

பிறகென்ன, வாகனத்தை ஸ்ரீபுரம் நோக்கிச் செலுத்தச் சொன்னேன். எந்தவொரு காரியத்துக்கும் காரணம் உண்டு என்பார்கள். அதேபோல, எதற்கும் ஒரு நேரம் அமைய வேண்டும், விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியிருப்பதும் உண்மை என்பதையும் உணர்ந்தேன்.

கட்டாந்தரையாக இருந்த 1,400 அடிக்கும் கீழே நிலத்தடி நீர் உள்ள நிலத்தில் ஓர் ஆன்மிகத் திருத்தலம், மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், அது நிச்சயமாக மனித சக்தியை மீறிய ஒன்று.

கோயிலைக் கட்டி விடலாம். அதற்கு 'ஜீவன்' இருக்க வேண்டும். அதற்குள் நுழைந்தால் மனதை ஒருங்கிணைக்கும் ஆன்மிக அதிர்வலை இருக்க வேண்டும். இல்லையென்றால் அது கோயிலல்ல, கூட்டுப் பிரார்த்தனைக்கான வெறும் கட்டடம். ஸ்ரீபுரம் பொற்

கோயில் வளாகத்தில் காலை எடுத்துவைத்து உள்ளே நுழைய, நுழைய அங்கே ஏற்படும் தெய்வீக காந்த சக்தியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

லட்சக்கணக்கானோர் தரிசிக்க வந்து போகும் பொற்கோயிலை இத்தனை ஆண்டுகளாக இத்தனை நேர்த்தியாக வடிவமைத்துப் பராமரிப்பது என்பதே போதும், சக்தி அம்மாவின் அருளாசியைப் பெறுவதற்கான பாக்கியம். நான் பிரமித்துத்தான் போயிருக்கிறேன். 'நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு' என்பதல்லாமல் வேறென்ன சொல்ல?

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 6:37 PM

குடியாத்தத்தில் அகவை 93-இல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பெரியவர் குமரி அனந்தனைச் சந்தித்து ஏறத்தாழ அரை மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்ததில் எனக்கு மனநிறைவு. 'உங்கள் வரவு என் நோயைப் போக்கி குணமாக்கிவிடும்' என்று அவர் கைப்பட எழுதித் தந்ததை பொக்கிஷமாகப் பத்திரப்படுத்தி இருக்கிறேன்.

குடியாத்தம் கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி, நண்பர் வழக்குரைஞர் கே.எம்.பூபதி ஆகியோரைச் சந்தித்துவிட்டு, அகவை 90 எட்டியிருக்கும் பெரியவர் வே.பதுமனாரையும் வணங்கி நல்லாசி பெற்றதில் பரம திருப்தி.

ஞானிகளையும், துறவிகளையும், நம்மைவிட வயதில் பெரியவர்களையும் பாதம் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறும் நமது பண்பாட்டை, சுயமரியாதை என்கிற பெயரில் கைவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை!

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 6:37 PM

கம்பன் குறித்த எந்தப் புத்தகத்தையும் விமர்சனத்துக்கு வந்ததும் படித்து விடுவேன். அதிலும் அந்தப் புத்தகம் எனது பேராசிரியர் சாலமன் பாப்பையாவால் தொகுக்கப்பட்டிருக்கிறது எனும்போது, விட்டு விடுவேனா?

மதுரை கம்பன் கழகத்தின் நிறுவனரான பேராசிரியர், மாதந்தோறும் ஒரு தமிழறிஞரை வரவழைத்து, ஏதாவது தலைப்பில் கம்பன் குறித்த ஆய்வுரை நிகழ்த்தப் பணிக்கிறார். மதுரைக் கம்பன் கழகத்தில் 12 அறிஞர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்புதான் 'கம்பனைச் சந்திப்போம்'.

பேராசிரியர் கு.ராமமூர்த்தியின் 'வீடணன் - ஓர் அறிமுகம்' கட்டுரையில் தொடங்கி, பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் 'கொங்கு நாடனும் கம்ப நாடனும்' என்கிற கட்டுரை வரை 12 அற்புதமான கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

எப்போதும் முதலில் இருந்து படிப்பார்கள். நான் முதலில் படித்தது கடைசிக் கட்டுரையைத்தான். கம்ப நாடன் சரி, கொங்கு நாடன் என்று பேராசிரியர் சொ.சொ.மீ. யாரைக் குறிப்பிடுகிறார்? 'கொங்கு நாடன்' என்பது

குலசேகர ஆழ்வாரைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

குலசேகராழ்வார் பாடிய 'பெருமாள் திருமொழி' விதைத்த விதைதான் கம்ப நாடன் மனத்தில் கம்ப காதையாய் வளர்ந்தது என்பதை விளக்குகிறார் பேராசிரியர் சொ.சொ.மீ.

இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையும், கம்ப காதை குறித்த புதிய பல சிந்தனைகளை விதைத்துச் செல்கின்றன.

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 6:37 PM

கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் மலர்களைக் குறிக்கிறது 'துணர்' எனும் சொல். தனது கவிதைத் தொகுப்புக்கு அதைத் தேர்ந்தெடுத்திருப்பதில் இருந்து கவிதாயினி

பிரியங்காவின் ரசனையும், புலமையும் ஒருசேர வெளிப்படுகிறது.

தமிழக பொதுப்பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணிபுரியும் இந்தக் குமரி மாவட்டக் குமரியின் கவிதைத் தொகுப்பு புத்தக விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது. அதில் இடம் பெறுகிறது இந்தக் கவிதை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

காத்திருப்பு கடினமில்லை

ஆசைப்பட்டவை எல்லாம்

சரியான சமயத்தில்

வந்து சேரும் என்று

நம்பும் வரை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.