விவாக ரத்து வழக்குகளும், குடும்ப வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அறிந்து சமூக ஆர்வலர்கள் கவலைப்படாமல் இருக்க இயலாது.
இல்லற வாழ்வு இனிமையாக இருந்தால்தான் நாட்டு நலனும் செம்மையாக இருக்கும். கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒருவரையொருவர் தொடாமலேயே வாழ்ந்து, இறைவனருளால் மீண்டும் இளமையடைந்து இல்லற வாழ்வை மீட்டெடுத்த திருநீலகண்ட நாயனார் வாழ்ந்த நாடு இது.
இவ்வுண்மையை உணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் கணவன்-மனைவியை, காதலன்- காதலியை தலைவன் தலைவி என அழைத்து இலக்கியங்களைத் தீட்டினார்கள்.
அகம், புறம் இரண்டிலும் இல்வாழ்க்கையைச் சிறப்பித்துப் பாடினார்கள்.திருவள்ளுவரும் தனது குறள் பாக்களில் இல்லறச் சிறப்புக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. (குறள்47)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள்45)
இல்லற வாழ்க்கை சிறப்புற்று விளங்க வேண்டும் என்பதே தமிழக அறவோரின் அறநெறியாகும்.
வறுமையிலும் பொறுமை காத்து இல்லறம் நடத்திய சங்க கால மக்களின் நிலையை நற்றிணை கூறுகிறது. செல்வத்தில் பிறந்து செல்வமகளாய் வளர்ந்த பெண்ணொருத்தி காதலில் ஒருவனைக் கைப்பிடித்த பின்பு கணவன் வீட்டில் வறுமை சூழ, அதையறிந்த பெண்ணின் தந்தை கொடுத்தனுப்பிய கொழுஞ்சோற்றை மனதிலும் நினையாமல் ஒருபொழுது மட்டும் உண்டு மறுபொழுது பட்டினியாக இருந்து, கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்ததை அவளது தாய்க்கு செவிலித்தாய் சொன்ன செய்தியை ஒரு பாடல் விளக்குகிறது.
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎன
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையனே
போதனார் எனும் புலவர் தமிழ் மகளுக்கு வேதமாய் பாடியுள்ளளார். இக்கருத்தைத் தழுவியே "பொன்னேர் பூட்டி வெள்ளி விதைத்திடினும் வேண்டேன் பிறந்தகத்து ஈண்டிய வாழ்வு' என்றுகூறிப் பிற்காலத்தே ஒரு தலைவியான மனைவி பெருமையடைகிறாள். அப்பேர்ப்பட்ட தமிழகத்தில் இன்று நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் ஆயிரக்கணக்கில் குவிந்து நிலுவையில் இருந்தால் நாடும் சந்ததிகளும் என்ன ஆகும் என்பதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.