கம்பனின் தமிழமுதம் - 28: எடுத்த இடத்தில் வைக்கவும்!
'இந்த வீட்ல வச்ச இடத்தில் எதுவும் இருக்காது' - இப்படி ஒரு குரல் கேட்காத வீடே இல்லை என்று சொல்லிவிடலாம். குறிப்பாக தாய்மார்கள் இப்படித்தான் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
'இந்த வீட்ல வச்ச இடத்தில் எதுவும் இருக்காது' - இப்படி ஒரு குரல் கேட்காத வீடே இல்லை என்று சொல்லிவிடலாம். குறிப்பாக தாய்மார்கள் இப்படித்தான் அங்கலாய்த்துக் கொள்வார்கள். எல்லா வீடுகளிலும் எடுத்த பொருளைப் பயன்படுத்திவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைப்பவர்கள் வீட்டுத் தலைவிகளாகவே இருப்பார்கள். பொதுவாக ஆண்களும், வீட்டுப் பிள்ளைகளும் இதற்கு நேர்மாறாக இருப்பார்கள். வேலைக்குக் கிளம்பும் ஆணும், பள்ளி அல்லது கல்லூரிக்குக் கிளம்பும் பிள்ளைகளும், கிளம்பும் நேரத்தில் 'இதைக் காணோம்; அதைக் காணோம்' என்று நின்ற இடத்திலிருந்தே குரல் கொடுப்பார்கள்.
எந்த ஒரு பொருளையும் ஓரிடத்தில் இருந்து எடுத்து அதனைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதே இடத்தில் வைப்பது என்பது மிக உயர்ந்த பழக்கம். 'இந்தப் பொருள் இங்குதான் இருக்கும் ' என்று எல்லோருக்கும் தெரிவது மட்டுமல்ல; தேவைப்படும் நேரத்தில் தேடிக் கொண்டு திரியாமல் உடனே எடுக்கலாம். இல்லாவிட்டால், வீட்டில் எல்லாப் பொருட்களும் இரைந்து கிடக்கும். கம்பன் மிக அக்கறையுடன் நமக்கு இதனை அறிவுறுத்துகிறான்.
போர்க்களத்தில், இலக்குவனை நோக்கி பிரம்மாஸ்திரத்தை எய்தான் இந்திரசித்தன். இலக்குவன் மட்டுமன்றி, போர்க்களத்தில் இருந்த அனைவரும் அந்தக் கணையால் தாக்குண்டு வீழ்ந்தனர். அந்த நேரம் போர்க்களத்தில் இல்லாத இராமனும் வீடணனும் மட்டுமே அந்தத் தாக்குதலில் தப்பினர்.
Advertisement
பின்னர் போர்க்களத்துக்கு வந்த இராமன், இலக்குவன் உட்பட வீழ்ந்து கிடக்கும் அனைவரையும் கண்டு, கவலையில் சோர்ந்து வீழ்ந்தான். பின்னர் வந்த வீடணன், அதிர்ச்சி அடைந்தான். ஒரு வழியாக இருட்டில் தேடிப்போய், மயங்கிக்கிடந்த அனுமனைக் கண்டு, நீர் தெளித்து அவனை எழுப்பினான். பின் இருவரும் தேடிச்சென்று சாம்பனைக் கண்டனர். மூலிகை மருந்தின் மகத்துவத்தைச் சொல்லி, அது எந்த மலையில் கிடைக்கும் என்பதையும், அங்கு செல்ல வேண்டிய வழியையும் அனுமனுக்குச் சொல்லி அனுப்பினான் சாம்பன். விரைந்து சென்ற அனுமன், சாம்பன் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். மூலிகைச் செடிகளும் மரங்களும் நிறைந்திருந்த மலையை அடையாளம் கண்டான்.
எந்த மூலிகை என்று தேடிக் கொண்டிருந்தால், திரும்பிச் செல்ல மிக நேரமாகிவிடும் என்று எண்ணிய அனுமன், மலையையே தூக்கிக் கொண்டு பறந்து வந்தான். மூலிகைக் காற்றை சுவாசித்து, எல்லோரும் உயிர் பெற்று எழுந்தனர். பிறகு, 'உடனே மலையைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடு. இல்லாவிட்டால், மூலிகைக் காற்றை சுவாசித்து, இறந்துபோன அரக்கர்களும் உயிர் பெற்றுவிடுவார்கள்' என்று அனுமனிடம் சொன்னான் சாம்பன். அவ்வாறே மலையைக் கொண்டுபோய் வைத்துவிட்டுத் திரும்பினான் அனுமன்.
அதன் பின்னர் போர் தொடர்ந்து நடந்தது. இந்திரசித்தன் இலக்குவனால் கொல்லப்பட்டான். சொல்ல முடியாத துயரத்தில் இருந்த இராவணன், இறுதியாகப் போர்க்களத்துக்கு வந்தான். 'எல்லா தோல்விகளுக்கும் காரணம் வீடணனே. முதலில் இவனைக் கொல்கிறேன்' என்று கோபத்துடன், அனைத்தையும் அழிக்கவல்ல வேல் ஒன்றினை அவன் மீது எறிந்தான்.
'கண்டிப்பாக இந்த வேல் என்னை அழிக்கும்' என்றான் வீடணன். 'அச்சப்படாதே' என்று அவனுக்கு தைரியம் சொன்ன இலக்குவன், வீடணனுக்கு முன்னே சென்று, அந்த வேலினைத் தனது மார்பில் ஏற்று வீழ்ந்தான். இலக்குவனுக்கு முதல் உதவிகளைச் செய்து கொண்டே, 'அனுமனே ஏன் இங்கேயே நிற்கிறாய்? மருந்துமலையைக் கொண்டுவர இன்னும் போகவில்லையா?' என்றான் சாம்பன். கிளம்பிய அனுமன், 'போனேன்; வந்தேன்' என்று உடனே மலையுடன் வந்தான். இலக்குவனும் நலம் பெற்று எழுந்தான். முதல் முறை மருந்துமலையைக் கொண்டுவந்ததைவிட, மிக விரைவாக இரண்டாம் முறை மலையை அனுமன் கொண்டு வந்ததற்கான காரணம், எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த ஓரிடத்தில் இருந்து எடுத்த பின்னர், அதே இடத்தில் பொன்னைப் பாதுகாப்பாக வைப்பதுபோல வைத்துவிட்டால், மீண்டும் அதனை எடுக்கும்போது எந்த வருத்தமும் இருக்காது' என்கிறான் கம்பன்.
பாடலைப் பாருங்கள்:
உய்த்து ஒரு திசைமேல் ஓடி, உலகு எலாம்
கடக்கப் பாய்ந்து,
மெய்த் தகு மருந்துதன்னை,
வெற்பொடும் கொணர்ந்த வீரன்,
பொய்த்தல் இல் குறி கெடாமே பொது
அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில்,
வருத்தம் உண்டோ ?
'எடுத்து வந்த மலையை மீண்டும் வைக்கச் சென்ற அனுமன், எடுத்த இடத்தை அடையாளங்களுடன் பார்த்து, அதே இடத்தில் பொன்போல் அதனை வைத்துவிட்டு வந்ததால், மீண்டும் விரைவாக அதனை எடுத்து வருவதில் சிரமம் இல்லை அல்லவா?' என்று கேள்வி கேட்பதன் வாயிலாக, 'எந்தப் பொருளையும் எடுத்த இடத்தில் வைத்துப் பழகுங்கள்' என்று நமக்கு அறிவுறுத்துகிறான் கம்பன்.