இந்த வாரம் கலாரசிகன் - 27-07-2025 
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 27-07-2025

ஈரோட்டில் இருந்து நண்பர் ஸ்டாலின் குணசேகரன் அழைத்திருந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரோட்டில் இருந்து நண்பர் ஸ்டாலின் குணசேகரன் அழைத்திருந்தார். 21-ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டு நான் கலந்து கொள்ள வேண்டும் என்று, ஒரு தேதியைக் குறிப்பிட்டார்.

அந்தத் தேதியில் வருவதற்கு சிரமம் இருக்கிறது என்று சொன்ன போது, அவர் உடனடியாக இன்னொரு தேதியைச் சொன்னார். அதற்குப் பிறகும், மறுத்துவிடவா முடியும்!

உலகின் பல நாடுகளில் உள்ள பல நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன. ஜெர்மனியில் நடக்கும் பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி, இங்கிலாந்தின் லண்டன் புத்தகக் காட்சி, நமது இந்தியாவின் தில்லி புத்தகக் காட்சி உள்ளிட்ட சர்வதேச புத்தகக் காட்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன.

இவற்றில் உலகெங்கிலும் உள்ள பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும், புத்தக வாசிப்பாளர்களும் அதற்காகவே காத்திருந்து ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சென்னையில் நடப்பது புத்தகக் காட்சி. நெய்வேலியில் நடப்பது புத்தகக் கண்காட்சி. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டு தனித்துவமாக நடத்தப்படுகிறது ஈரோடு 'புத்தகத் திருவிழா'. அந்த நகரமே திருவிழாக் கோலம் கொள்ளும் காட்சி நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

2005-ஆம் ஆண்டில் வெறும் 75 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட ஈரோடு புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டே 150 அரங்கங்களாக உயர்ந்தன என்றால், அதற்குப் பின்னால் இருந்த உழைப்பும், ஸ்டாலின் குணசேகரனின் வழிகாட்டுதலில் செயல்பட்ட இளைஞர்களின் அர்ப்பணிப்பும்தான் காரணமாக இருக்க முடியும்.

ஈரோடு மாவட்டத்தைச் சுற்றியுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக தானே சென்று நிர்வாகத்தினரையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து, வாசிப்பு இயக்கத்தை வார்த்தெடுத்த வரலாறு புத்தகமாக எழுதப்பட வேண்டும்.

முதலாவது ஆண்டு, திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளாத தமிழ் ஆளுமைகள் யாரும் இருக்க முடியாது.

தமிழக ஆளுமைகள் மட்டுமல்ல, வெளிநாடுவாழ் தமிழ் ஆளுமைகளும்கூட ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கப்பட்டு, தாய்த் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்று காலத்தில்கூட, விடுபட்டு விடாமல் காணொலி மூலம் நிகழ்ச்சிகளை நடத்திய சாதுர்யத்தை பாராட்ட வேண்டும்.

இந்த ஆண்டில் தமிழக பதிப்பாளர்கள் மட்டுமல்லாமல், பல முக்கியமான ஆங்கிலப் புத்தகப் பதிப்பாளர்களும், சர்வதேச புத்தகப் பதிப்பாளர்களும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தியை நண்பர் ஸ்டாலின் குணசேகரன் பகிர்ந்து கொண்டார்.

கலந்து கொள்ளும் பதிப்பாளர்களின் தரத்திலும் புத்தகத் திருவிழாவில் விற்பனையாகும் புத்தகங்களின் தரத்திலும் எந்தவித சமரசமும் செய்து கொள்வதில்லை என்கிற மக்கள் சிந்தனைப் பேரவையின் சிந்தனைக்காகவே அவர்களைப் பாராட்டலாம்.

சென்னையில் மார்கழி மாதம் நடக்கும் இசை விழாவில் கலந்து கொள்ள வேடந்தாங்கல் பறவைகளைப் போல உலகெங்கிலும் இருந்து சங்கீத ரசிகர்கள் தமிழகத்தின் தலைநகரத்தில் சங்கமிப்பது போல, ஈரோடு மாநகரத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்காக உலகெங்கிலும் வாழும் வாசிப்பை நேசிக்கும் தமிழர்கள் ஆகஸ்ட்மாதம் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது.

விமர்சனத்துக்கு வரும் சில புத்தகங்கள் பார்த்தவுடன் படிக்கத் தூண்டும். ரமணன் வி.எஸ்.வி. எழுதிய 'கடைசிக் கோடு' என்கிற புத்தகம் அந்தப் பட்டியலில் சேரும். இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை என்கிற முகப்பு அட்டை அந்த ஆர்வத்தை மேலும் தூண்டியது. எழுதியிருப்பவர் மூத்த பத்திரிகையாளர்;

1800-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்திய வரைபட உருவாக்கத்தின் பின்னால், பலரின் கடினமான உழைப்பு இருந்திருக்கிறது. இப்போதுபோல தொழில்நுட்பமோ, முறையான போக்குவரத்து வசதிகளோ இல்லாத நிலையில் பணி முழுமையடைய 40 ஆண்டுகள் ஆனதில் வியப்பில்லை.

சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மைல்கள் காடு, மலை, நதி என பயணம் செய்து பல்வேறு சோதனைகளைக் கடந்து உருவாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வரைபடம்.

'நாற்பது ஆண்டு பயணத்தை சுவைபட ஒரு நாவலைப் போல சொல்வது இது. பத்திக்கு பத்தி தகவல்கள் புதைந்து கிடக்கும் பொக்கிஷம் இந்த நூல். இந்த தகவல்களைத் திரட்ட செலவிட்ட உழைப்பில் ஒரு நாவலை எழுதி விடலாம்.

தமிழில் சொல்லப்படாத செய்திகளை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்; அவை வாசிப்பவர்களின் அறிவைப் பெருக்கும் என்பது ரமணனின் நோக்கம்' என்கிற எழுத்தாளர் மாலனின் அணிந்துரை வார்த்தைகள் புகழ்ச்சியல்ல நிஜம்.

அன்றைய மதராஸ் பட்டண கடற்கரையில் தொடங்கிய கேப்டன் வில்லியம் லாம்டன் போட்ட பிள்ளையார் சுழி 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வரைபடமாக ஆவணமானது என்பது வரலாறு. லாம்டன் என்கிற ஆங்கிலேயர் இந்தியப் பெண்ணை புதுச்சேரியில் மணந்து வாழ்ந்திருக்கிறார்.

தனது பணி தொடர்பான குறிப்புகளை கால அட்டவணை இட்டு தெளிவாக எழுதியிருக்கும் லாம்டன் தனது குடும்பம் குறித்தோ, தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியோ எதுவுமே எழுதவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் உச்சியிலிருந்து சர்வே பணியை திட்டமிட்டதும், அது தடைபட்டதும் சுவாரஸ்யமான தகவல். நடந்த தவறுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டு லாம்டன் எழுதிய குறிப்பு டேராடூன் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் கோயிலில் இவர் செய்த முயற்சிகள் பற்றிய குறிப்புகள் சரஸ்வதி மஹால்நூலகத்தில் இருக்கின்றன.

கற்பனைக்கெட்டாத இந்திய வரைபடம் உருவான வரலாற்றை புதினம் போன்ற சுவாரஸ்யத்துடன் பதிவு செய்திருக்கும் ஆவணம் இந்தப் புத்தகம். மாலன் குறிப்பிடுவது போல, 'ஆச்சர்யங்களின் பொக்கிஷம்'.

கவிஞர் இளையவன் சிவாவின் 'மீன் சுமக்கும் கடல்' கவிதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது இந்தக் கவிதை.

குவிந்து கிடக்கின்றன

பூச்சிக் கொல்லியும் உரமும்

வயலின் வயிற்றில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

பார்வை தாக்கும்... சாந்தினி!

நம்ம ஊரு சிங்காரி - சசிகலா

வெள்ளி சலங்கைகள் - வைஷ்ணவி ராவ்

இசைநிறை அளபெடை... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT