'செடி கொடிகள்' என்னும் சொல் வழக்கு எல்லோரும் அறிந்தது. செடிக்கு வேறு இயல்பு. கொடிக்கு வேறு இயல்பு. செடி நிமிர்ந்து நின்று வளரும். அப்படி நிமிர்ந்து வளரும் செடிகள் சில, மரங்களாகவும் வளர்ந்து நிற்கும். ஆனால், கொடி ஒரு கொழுகொம்பைச் சுற்றிச் சுற்றியே வளரும். தான் தழுவியுள்ள கொம்பு அல்லது மரத்தில் இருந்து ஒரு கொடி எந்தச் சூழலிலும் பிரியாது. சிரமப்பட்டு பிரித்தெடுக்க முயன்றாலும், தனித்து நிற்காது. இது இயற்கையின் படைப்பு. இப்படி ஓர் இயற்கைக் காட்சியை, கதைப்போக்கின் ஓர் இடத்தில் சுட்டிக்காட்டி, இரண்டு உயர்ந்த கருத்துகளைச் சொல்கிறான் கம்பன்.
ஒரு குடும்பம் தழைத்தோங்க, கணவன், மனைவி இருவரின் பங்களிப்பும் தேவை. ஒரு வண்டியின் இரு சக்கரங்கள்போல இருவரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று நமது பெரியோர் குறிப்பிட்டது இதைத்தான். அறிவு நிலையிலும் பொருளாதார நிலையிலும் குடும்பத்தை உயர்த்தும் பணியைப் பெரும்பாலும் ஆண் எடுத்துக்கொள்கிறான். வறுமையில் வாடினாலும், குடும்பம் தள்ளாடாமல், கட்டுக்கோப்புடன் இருப்பதைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பினை, பெரும்பாலும் பெண்ணே எடுத்துக்கொள்கிறாள். வரவையும் செலவையும் திட்டமிட்டு செயல்படும் பெண்களால்தான் குடும்பங்களில் அமைதி இருக்கிறது. ஆணோ அல்லது பெண்ணோ, வருமானத்தைவிட அதிகமாக யார் செலவு செய்தாலும், அந்தக் குடும்பத்தில் அமைதி நிலைப்பதில்லை. குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களை, சமமாகத் தாங்கி நிற்கும் கணவன், மனைவி இருவரால்தான் குடும்பங்கள் தழைக்கின்றன. இந்தக் கருத்தினை, கம்பன் அழகாக இரு காட்சிகளில் இணைத்துக் காட்டுகிறான்.
இலங்கைக்குள் நுழைய கடலில் அணை கட்ட வேண்டியிருந்தது. வானரங்கள் அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டன. அந்தப் பகுதியில் கிடைத்த பெரும் கற்கள், குன்றுகள், மலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அணை கட்டும் பணிகள் தொடங்கின. அப்போது, ஓங்கி வளர்ந்திருந்த மரங்களையும் வானரங்கள் தூக்கி வந்து கடலில் எறிந்தன. அந்த மரங்கள் நீருக்குள் மூழ்கின. மூழ்கிய மரங்களுடன், அவற்றில் பின்னிப் பிணைந்திருந்த கொடிகளும் நீரில் அமிழ்ந்தன. 'அந்தக் காட்சியைப் பார்' என்று நமக்குக் காட்டும் கம்பன், மற்றொரு காட்சியைக் காட்டி, 'அதனையும் பார்' என்கிறான். அங்கும் வானரங்கள் தொடர்ந்து மலைகளைக் கொண்டுவந்து கடலில் எறிந்துகொண்டே இருந்தன.
மலைகள் தொடர்ந்து தன்னுள் வீழ்ந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தையும் வாங்கி தனக்குள்ளே அடக்கிக்கொண்டு, கடல் அமைதியாக இருந்தது. இந்த இரண்டு காட்சிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டிய கம்பன், அந்தக் காட்சிகளில் நமது குடும்பச் செய்திகள் இருப்பதாகக் கூறுகிறான். முதல் காட்சிக்கான பாடலைப் பார்த்துவிடலாம்:
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து,
அலமரும் துயர் எய்திய ஆயினும்,
வல மரங்களை விட்டில, மாசு இலாக்
குல மடந்தையர் என்ன, கொடிகளே.
மரங்களை வேருடன் பறித்துக் கடலில் எறிந்தன வானரங்கள். அந்த. மரங்களில் கொடிகள் சுற்றி வளர்ந்திருந்தன. மரங்கள் வேருடன் பறிக்கப்பட்டபோது, அவற்றைச் சுற்றியிருந்த கொடிகளும் வேருடன் மண்ணில் இருந்து பறிக்கப்பட்டன. மரங்கள் கடலில் வீழ்ந்தபோது, வேருடன் பறிக்கப்பட்ட கொடிகளும் சேர்ந்து கடலில் வீழ்ந்தன. இவ்வளவு துயர் அடைந்தபோதும், கொடிகள், தாங்கள் அணைத்திருந்த மரங்களை விட்டுவிலகவே இல்லை; எவ்வளவு துன்பம் தாக்கினாலும், குடும்பத்தின் மீது வைத்த பாசத்தை குறைத்துக்கொள்ளாமல் உறவுகளை அணைத்துச் செல்லும் குலமகளிரின் செயலை அது ஒத்திருக்கிறது என்றான் கம்பன். அடுத்த காட்சிக்கான பாடலையும் பார்த்துவிடலாம்.
நெடும் பல் மால் வரை தூர்த்து
நெருக்கவும்,
துடும்பல் வேலை துளங்கியது
இல்லையால் -
இடும்பை எத்தனையும்
மடுத்து எய்தினும்,
குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே.
எத்தனை மலைகள் வந்து விழுந்தாலும் அவை அனைத்தையும் தனக்குள்ளே வாங்கிக்கொண்டு, சலனமில்லாமல் அமைதியாக இருக்கும் கடல், ஒன்று மாற்றி ஒன்றாக சிக்கல்கள், துன்பங்கள் என்று வாழ்க்கையில் வந்துகொண்டே இருந்தாலும் அவை அனைத்தையும் வாங்கி அப்படியே தனது மனதுக்குள் அவற்றை வைத்துக்கொண்டு, சலனமில்லாமல் குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் உயர்குடியில் பிறந்தவர்களை ஒத்திருந்தது என்றான்.
இயற்கையாக நிகழ்பனவற்றை, குடும்ப நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு, நம் நாட்டின் குடும்பப் பெருமைகளை இப்படி உரக்கச் சொல்கிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.