கம்பனின் தமிழமுதம் - 34: தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!
தூங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று "நன்றாகத் தூங்குகிறீர்களா?' என்பது.
தூங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று "நன்றாகத் தூங்குகிறீர்களா?' என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.
அதற்கென்று, அளவில்லாமல் எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கலாமா என்ன! கும்பகர்ணன் என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல; செய்யவேண்டிய வேலைகளும் கெடும். ஆனால், நாட்டின் பெருமையைக் கூற வந்த கம்பன், தூங்குவதை வரிசைப்படுத்திச் சொல்லி, நாட்டின் பெருமைக்கு அதனையே காரணமாகக் காட்டுகிறான். முதலில் பாடலைப் பார்த்துவிடலாம்.
நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை
Advertisement
உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை
உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை
உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை
உறங்கும் தோகை
இந்தப் பாடலின் பொருள் எளிமையானது. நாட்டின் நீர்நிலைகளில் சங்குகளும், மரங்களின் நிழல்களில் எருமைகளும், மாலைகளில் கட்டப்பட்டிருக்கும் மலர்களில் வண்டுகளும் உறங்கிக்கொண்டிருக்கின்றன; தாமரை மலரில் திருமகள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்; குளங்களின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேற்றினில் ஆமைகளும், நீர்த்துறைகளில் சிப்பிகளும், நெற்போர்களில் அன்னப்பறவைகளும், சோலைகளில் மயில்களும் உறங்கிக்கொண்டிருக்கின்றன.
இவைதான் இந்தப் பாடலின் பொருள். "இவ்வளவுதானே' என்று பாடலைக் கடந்து போய்விட்டால், பாடலுக்குள்ளே கம்பன் வைத்துள்ள அழகையும், நயத்தையும் புரிந்துகொள்ளாமல் ஏமாந்துவிடுவோம்.
செல்வ வளம் நிறைந்திருப்பதால், "போதும், போதும்' என்று சொல்லும் அளவுக்கு, வீடுகளில்
மக்கள் சங்குகளை வைத்திருக்கிறார்கள். அவற்றைத் தேடி வருபவருமில்லை; விற்றால் அவற்றை வாங்குவாரும் இல்லை. எனவே எடுப்பவர் எவருமின்றி சங்குகள் நீரில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. எருமை மாடுகள், தங்களுக்கான உணவைத் தேடிச் சென்று அலைய வேண்டிய தேவையே இல்லை. ஏதாவது ஒரு மரத்தைச் சுற்றிப் புல்லையோ, செடி, கொடிகளையோ மேய்ந்தாலே, வயிறு நிரம்பிவிடுகிறது. வேறு இடத்துக்குத்
தீனி தேடிப்போகாமல், நிறைந்த வயிற்றுடன் மரங்களின் நிழல்களில் ஓய்வெடுக்கும் எருமைகள் அங்கேயே உறங்கிவிடுகின்றன. நாட்டின் செழுமையான மண்வளம் காரணமாக, மலர்கள், மாலைகளாகத் தொடுக்கப்பட்ட பின்னரும் மணமும் தேனும் குறையாமல் அப்போதுதான் பறிக்கப்பட்டவைபோல் இருக்கின்றன. தேனை நாடி வரும் வண்டுகள், மாலைகளில் கட்டப்பட்ட மலர்களில் அமர்ந்து தேன் குடிக்கின்றன.
ஒரு மலரில் இருந்து உறிஞ்சும் தேன், மலரில் அமர்ந்த அந்த வண்டுக்குப் போதுமானதாக இருக்கிறது. இன்னொரு மலரைத் தேடிச் சென்று தேனருந்த வேண்டிய அவசியமே இல்லை. நிறைய தேன் உண்ட மயக்கத்தில், வண்டுகள் அந்தந்த மலர்களிலேயே தூங்கிவிடுகின்றன. திருமகள் குடியிருக்கும் இடம் தாமரை. மக்களிடத்தில் செல்வம் நிறைவாக இருக்கிறது. "எனக்கு செல்வம் வேண்டும்' என்று கேட்பவர் எவருமில்லை. அழைப்பவர் யாரும் இல்லாததால், திருமகள் இருந்த இடத்திலேயே உறங்குகிறாள்.
இவைதான் பாட்டுக்கான உட்பொருள். ஒரு நாட்டில் எல்லாம் தூங்குகின்றன என்றால், நாட்டின் வளர்ச்சி மந்தமாகிவிட்டது என்பதே பொதுவான பொருள். ஆனால், எல்லாம் தூங்குகின்றன என்று சொல்லியே ஒரு நாட்டின் வளமையைக் காட்டியது, கம்பனின் கைவண்ணம்!