முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 23-03-2025

பேராசிரியர் க.பழனித்துரைக்கு அறிமுகம் தேவையில்லை. தினமணியில் வெளிவரும் அவரது நடுப்பக்கக் கட்டுரைகளுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது.

Updated On : 23 மார்ச், 2025 at 5:00 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2025 at 4:58 PM

பேராசிரியர் க.பழனித்துரைக்கு அறிமுகம் தேவையில்லை. தினமணியில் வெளிவரும் அவரது நடுப்பக்கக் கட்டுரைகளுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது. பேராசிரியர் இரண்டு நாள்கள் முன்பு சென்னை வந்திருந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர் பேராசிரியர். அங்கேயும், அதற்குப் பிறகு காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

சமூகக் கண்ணோட்டத்துடன் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருப்பவர் என்பது மட்டுமல்லாமல், ஏறத்தாழ எண்பதுக்கும் அதிகமான புத்தகங்களையும் எழுதியிருப்பவர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மதிக்கப்படும் காந்தியச் சிந்தனையாளர். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு குறித்த வழிகாட்டி என்றே கூட அவரைக் கூறலாம்.

Advertisement

பஞ்சாயத்து ஆட்சிமுறை குறித்த பல பயிற்சிக் கையேடுகளைத் தயாரித்து வழங்கி இருக்கும் முனைவர் க. பழனித்துரை பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அவர்களது அதிகாரம் என்ன, அவர்கள் நினைத்தால் என்னவெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் உணர்த்துவதன் மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் செயல்படும் முனைவர் க.பழனித்துரையின் ஆக்கபூர்வக் கண்ணோட்டம், நம்பிக்கை இழந்துவிட்ட என் போன்றோருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைகிறது.

கட்சி அரசியலில் இருந்து மக்கள் அரசியலுக்கு நகர்வதன் மூலம்தான் மாற்று அரசியல் ஏற்படும் என்பது அவரது கருத்து. அரசியல் சாசனத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு, அரசியல் கட்சிகள் குறித்துப் பேசுவதில்லை. மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் கூறுகிறது. ஆனால், அரசியலையும், ஆட்சி முறையையும், நிர்வாகத்தின் போக்கையும் மக்கள் வழிநடத்தாமல் அரசியல் கட்சிகள்தான் நிர்ணயிக்கின்றன.

'நமது ஊர் நமது பொறுப்பு', 'எங்கள் நகரம் எங்கள் ஆட்சி' என்பது அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள். அவை உள்ளாட்சி அமைப்புகளும், நகராட்சி அமைப்புகளும் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி எத்தகைய சமுதாய மாற்றத்தையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஏற்படுத்த

முடியும் என்பதை விளக்குகின்றன. மக்களைப் பொறுப்பேற்க வைத்தால் மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் சமூகத்தில் கொண்டுவர முடியும் என்கிறது அவரது பங்கேற்புக் கோட்பாடு.

மக்கள் வெறுமனே ஒரு வாக்காளராக, பயனாளராக, மனுதாரராக அல்லாமல், தாங்களே பொறுப்புள்ள குடிமக்களாக மாறி சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பது முனைவர் பழனித்துரையின் கருத்து. உள்ளாட்சி அமைப்பில் உறுப்பினர்களை மட்டுமல்ல, மக்களையும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

Updated On : 23 மார்ச், 2025 at 4:58 PM

'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது. 74-ஆவது அரசமைப்புச் சீர்திருத்த சட்டம் நகரங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் முன்னெடுப்பு. இருந்தும் அவற்றின் ஆற்றலும் வீச்சும் என்ன என்பது பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை புரியவில்லை'' என்பது முனைவர் பழனித்துரையின் வருத்தம்.

'மக்களாட்சி செயலிழந்து விட்டது' என்று அங்கலாய்ப்பவர்களும், அதைச் செப்பனிட்டு உண்மையான மக்களாட்சியை நிறுவ வேண்டும் என்று விழைவோரும் முனைவர் க.பழனித்துரையின் புத்தகங்களைப் படித்தால் புதிய வெளிச்சம் பெறலாம். தெளிவும் கிடைக்கும்.

அவருடன் அதிக நேரம் பேசமுடியாமல் போனது எனது துரதிருஷ்டம். இரண்டு மூன்று நாள்கள் காந்தி கிராமத்தில் அவருடன் தங்கியிருந்து அளவளாவ வேண்டும் என்று விழைகிறேன். அதற்கான சந்தர்ப்பம் அமைய வேண்டும்.

Updated On : 23 மார்ச், 2025 at 4:59 PM

சிறு வயது முதலே நான் அஜ்மீர் குறித்துக் கேள்விப்பட்டுள்ளேன். எனது 45-ஆவது வயதில்தான் முதல்முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்குப் போனேன்.

காந்தி, நேரு, ராஜாஜி உள்ளிட்டவர்கள் அஜ்மீர் தர்காவுக்கு விஜயம் செய்து பிரார்த்தித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னிடம் அஜ்மீர் சென்று வாருங்கள் என்று வலியுறுத்தி அனுப்பி வைத்தவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட். திருப்பதிக்குச் சென்று வந்தால் திருப்பம் வரும் என்று நாம் சொல்வதுபோல, அஜ்மீர் தர்காவுக்கு விஜயம் செய்தால் மாற்றம் ஏற்படும் என்பது ஹிந்து-முஸ்லிம் வேறுபாடில்லாமல் வடநாட்டில் ஒரு நம்பிக்கை.

நாகூர் ரூமி எழுதிய 'அஜ்மீர் க்வாஜா நாயகம்' என்கிற புத்தகத்தைப் படித்தபோது, பழைய நினைவுகள் வந்தன. அஜ்மீருக்கும், நாகூருக்கும் மிக அதிகமாகப் போகும் பக்தர்கள் ஹிந்துக்கள்தான் என்று சிலர் கூறுகிறார்கள்; தெரியவில்லை. இன்றைய இஸ்லாமியர்களில் பலர் தர்காவுக்கு விஜயம் செல்வதை எதிர்ப்பவர்கள். அதில் அவர்களுக்கு உடன்பாடு கிடையாது.

ஆனால், நாகூர் ரூமி கூறியிருப்பதுபோல, அவர்களுக்குத் தெரியாத ஓர் உண்மை இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாம் இந்த அளவுக்குப் பரவியதற்கும் வளர்ந்ததற்கும் காரணமே 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானியான க்வாஜா மொய்னுதீன் சிஷ்டிதான் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் நிகழ்த்திய அற்புதங்களால் கும்பல் கும்பலாக அவரது பக்தர்களாக மாறி, பிறகு இஸ்லாமைத் தங்களது மார்க்கமாக ஏற்றுக்கொண்டவர்கள் கோடிக்கணக்கானோர்.

அஜ்மீர் தர்கா குறித்தும், 'க்வாஜா நாயகம்' என்று அழைக்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி என்கிற சூஃபி ஞானி குறித்தும் தெரிந்துகொள்ள விரும்புவோரின் தேடலுக்கு விடை பகர்கிறது நாகூர் ரூமியின் 'அஜ்மீர் க்வாஜா நாயகம்' என்கிற புத்தகம்.

Updated On : 23 மார்ச், 2025 at 4:59 PM

குவிகம் இணைய இதழில் யசோதா சுப்பிரமணியன் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகளை அனுப்பித் தந்திருந்தார், தினமணியின் முன்னாள் செய்தி ஆசிரியர் முத்துக்குமரன். யாம் பெற்ற இன்பம் பெறுக

இவ்வையகம்...

விரிந்த மணலில்

விரையும் யந்திரம்

சுரண்டும் ஓசையில்

சுத்தமாய்ப் புதைந்து போனது

ஆற்றின் மரண ஓலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.