தமிழ்மணி

போரை நிறுத்திய புலவர்கள்!

போர்க்குணம் என்பது தமிழர்தம் பண்பாட்டில் ஒரு பெரும் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது என்பதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

புலவர் ஜோ.தெய்வநீதி

போர்க்குணம் என்பது தமிழர்தம் பண்பாட்டில் ஒரு பெரும் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது என்பதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று; இவ்வுலகத்து இயற்கை'

என்னும் இடைக்குன்றூர்கிழாரின் புறப்பாடல் தமிழர் வாழ்வில் போர் இயல்பானது, இயற்கையானது என்பதை உணர்த்துகிறது. முதல் நாள் போரில் தன் தந்தையை இழந்த பெண் ஒருத்தி அடுத்த நாள் போரில் தன் கணவனை இழக்கிறாள்.

இன்றும் போர்ப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி ஒரு மகன் அன்றி வேறு உறவு இல்லை என்ற நிலையிலும், தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பும் வீரத்தாயின் 'செயலும் சிந்தையும் கெடுவதாக' ஒக்கூர் மாசாத்தியார் பாடலும், உன் மகன் எங்கே என்று கேட்ட தோழிக்கு

'புலிசேர்ந்து போகிய

கல்அளை போல

ஈன்ற வயிறு இதுவே

தோன்றுவன் மாதோ

போர்க் களத்தானே'

என்ற காவற் பெண்டு எனும் புலவரின் பாடலும் அக்காலப் பெண்டீரின் மனமும் குணமும் போர்த் தொழிலை சிறப்பாகக் கருதியுள்ளமையைக் காட்டுகிறது. மகளிரின் தியாகமும், தனிமனித வீரமும் போற்றப்படும் இதுபோன்ற பாடல்கள் புறநானூற்றில் பல உள்ளன.

புறநானூற்றில் அமைந்துள்ள பாடாண் திணைப்பாடல்கள் பல மன்னர்களின் வீரத்தைப் பெரிதும் போற்றுகின்றன. 'துஞ்சுபுலி இடறிய சிதடன்போல' பகைவர் அழிவர் எனும் நலங்கிள்ளியின் சூளுரை.

'காலனும் காலம் பார்க்கும்; பாராது

வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய

வேண்டித்து அடூஉம் வெல்போர் வேந்தே'

எனும் கோவூர் கிழாரின் புகழுரை, உடல் எல்லாம் விழுப்புண்பட்டு பார்ப்பதற்கு அழகு இன்றி இருக்கும் ஏனாதி திருக்கிள்ளி என்ற அரசனை,

'வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே'

என்று மாடலன் மதுரைக் குமரனாரின் பாடல் வரிகள் மன்னர்களின் வீரமும், வெற்றியும் போர்த்திறனும் போற்றப்பட்டமையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இப்படிப் போரையும் வீரத்தையும் புகழ்ந்து பாடிய நம் பழந்தமிழ்ப் புலவர் பெருமக்கள் போருக்கு எதிரான நிலைப்பாட்டை தம் ஆழ்ந்த புலமையால், பதிவு செய்து இருப்பதையும் நாம் பல இடங்களில் காண முடிகிறது.

ஒரு மன்னரின் சிறப்பு என்பது பல நாடுகளை வென்று அழித்து வீரம் மிக்கவனாகத் திகழ்வது அல்ல; தன் நாட்டு மக்களைக் காத்து பசி, பிணி, பகையற்ற தன்மையை உறுதி செய்து தன் நாட்டை வளப்படுத்துவது ஆகும். உலக மக்களுக்கு அடிப்படைத் தேவை உணவு; அந்த உணவை உற்பத்தி செய்வதும், உணவுக்கு ஆதாரமான நீர்வளத்தைப் பெருக்குவதுமே ஒரு வேந்தனின் கடமை என்பதை குடபுலவியனார் என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழும் பாடலில் அழகாக விளக்குகிறார்.

'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்தினோரே

நிலன் நெளி மருங்கின் நீர் நிலைப்பெருகு'

என்று நிலவளமும் நீர் வளமும் காக்க என்று அறிவுறுத்துகிறார்.

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோரியூர் கிழார் எனும் புலவர் பாடும் போது, உன் நாட்டில் வாழும் மக்கள் சோறு சமைக்கும் தீயும், சூரியனின் வெப்பமும் தவிர பகைத் தீயை அறியமாட்டீர்கள். கருவுற்ற பெண்கள் உன் நாட்டு மண்ணை விரும்புவார்களேயின் பகைவர் உன் மண்மை உண்ணார் என்று கூறுகிறார்.

'சோறு படுக்கும் தீயொடு

செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது

பிற தெறல் அறியார்

நின் நிழல் வாழ்வாரே'

என்று பகைத் தீ இல்லாத நாடே நன்நாடு என்பதை அக்கால சான்றோர் பெருமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நம் தமிழ்ச் சான்றோர்கள் பல போர்களைத் தடுத்து நிறுத்தி இருப்பதையும் நம் சங்க நூல்களில் காணலாம்.

சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர். இதனை நிறுத்துவதற்கு, புலவர் கோவூர்கிழார் இருவரிடமும் தனித்தனியே சென்று சமாதான முயற்சியை மேற்கொள்கிறார்.

'சோழ மன்னனே, உன்னை எதிர்த்து போர் செய்பவன் பனம்பூமாலை சூடிய சேரன் அல்லன்; வேப்பம்பூமாலை சூடிய பாண்டியனும் அல்லன்; இருவரும் ஆத்திப்பூ சூடிய சோழ குல இளவல்கள். உங்களில் யார் தோற்றாலும் அழியப்போவது உங்கள் சோழர் குலமே. இது உம்பிற இன பகைவர்க்கு பெரிதும் மகிழ்வும்,

உங்குல மக்களுக்கு துன்பமும் தரும் செயல்.

'ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே

இருவீர் வேறல் இயற்கையும் அன்ற அதனால்

குடிப்பொருள் அன்று நும் செய்தி'

என எடுத்துரைத்துப் போரை நிறுத்துகிறார்.

அதியமான், தொண்டைமான் இருவரிடையே பகைமை ஏற்பட்டது. இரு நாட்டுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்தது. ஒரே இனத்தைச் சேர்ந்த இருவரும் போர் புரிவதை மக்கள் விரும்பவில்லை.

தொண்டைமான் படைபலம் மிக்கவன். போர் பயிற்சி இல்லாதவன். அதியமான் மாவீரன். களம்பல கண்டவன். தொண்டைமான் தோற்பது உறுதி. இருமன்னர்களும் போற்றத்தக்க புலவர் ஒளவையார் தொண்டைமான் அரண்மனைக்குச் செல்கிறார்.

தொண்டைமான் ஒளவையை தன் படைப்பெருக்கையெல்லாம் காட்டிப் பெருமிதம் கொள்கிறான்.

அப்போது, 'அரசே நீ படை வலிமை மிக்கவன். உன் நாட்டில் வாள், வில், வேல் போன்ற படைக்கலங்கள் எல்லாம் இங்கே மாலை சூடி, நெய் தடவி பளபளத்துக் கொண்டிருக்கின்றன.

அங்கே அதியமான் படைக்கலங்கள் எல்லாம் பகைவரைக் குத்திக் கொன்றதனால் அதன் கூர்மை சிதைந்து செப்பனிட கொல்லன் உலைக்களத்தில் உள்ளன' என்ற அதியமானின் வெற்றி சிறப்பையும் கொடைத் திறத்தையும் எடுத்துக்கூறி போரை நிறுத்துகிறார்.

இதுபோன்று போரை நிறுத்தி அரசர்களை அறவழி செலுத்திய அறிவுசால் சான்றோர் பலரை தமிழ்நாடு உலகுக்கு ஈந்து வான்புகழ் கொண்டு விளங்குகிறது. இன்று இத்தகு பெருமக்களை உலக நாடுகள் அவாவி நிற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிதடி தகராறில் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு பிரசாரம்: 9 நாள்களில் 2,500 வழக்கு; 3,900 போ் கைது!

மாா்த்தாண்டம் கல்லூரி முன்னாள் மாணவா்களின் குடும்பக் கூடுகை

விஷம் குடித்து பெண் தற்கொலை

பஹல்காம் பயங்கரவாதிகளுடன் 4 முறை சந்திப்பு: கைது செய்யப்பட்டவா் குறித்து போலீஸாா் தகவல்!

SCROLL FOR NEXT