தமிழ்மணி

அஃகேனம்

சில நூல்களின் தலைப்பைப் பார்த்தவுடனேயே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றும்.

ச. சுப்புரெத்தினம்

சில நூல்களின் தலைப்பைப் பார்த்தவுடனேயே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றும். அதுபோன்றே, சில திரைப்படங்களின் பெயர்களும்.

அண்மையில் பேசப்படும் 'தக்லைஃப்' மற்றும் 'அஃகேனம்' என்பன அவற்றுள் சிலவாகும். 'தக்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் 'கொள்ளைக்காரன்' என்று பொருள். ஆதலால், 'தக்லைப்' என்றால் 'கொள்ளைக்காரனின் வாழ்க்கை' என்பதாகும். 'அஃகேனம்' என்ற பெயரோ பொதுமக்களால் அறியப்படாதது.

'அ' முதல் 'ஒள' வரையான பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையான பதினெட்டு மெய் எழுத்துகளும் முதலெழுத்துகளாகும் என்கிறது தொல்காப்பியம் (நூ.10).

அதே இலக்கண நூல், உரிய எழுத்துகளைச் சார்ந்து மட்டுமே வரும் இயல்புடைய 'ஆய்த எழுத்து' சார்பெழுத்து என்கிறது.

மூன்று இடங்களில் புள்ளிகளை உடையதால் (ஃ) ஆய்த எழுத்துக்கு 'முப்பாற்புள்ளி' என்ற பெயரும் உண்டு. ஆய்தம், தனக்கு முன்னும் பின்னும் உரிய எழுத்துகளைப் பக்க

பலமாகக் கொண்டு, தான் நடுவிடத்தில் நின்றிருந்து, 'அஃது' என்பதுபோலச் சுட்டுப் பெயராகவும், 'எஃகு' (வேல்) எனப் பொருட்

பெயராகவும், கஃசு (காற்பலம் என்ற முற்கால நிறைப்பெயர்) என நிறைப் பெயராகவும் வரும் (தொல்.நூ.38, இளம். உரை). திருக்குறளில் 51 இடங்களில் இந்த ஆய்த எழுத்து (ஃ) இடம் பெற்றுள்ளது.

உயிரெழுத்துக்களில் அ, ஆ என்பனவற்றை 'ஆனா', 'ஆவன்னா' என்றும் ஒலிப்பது பொதுவழக்கு. ஆனால், இவற்றையே 'அகரம்' 'ஆகாரம்' என்று ஒலிப்பது இலக்கண வழக்காகும். இப்படி எழுத்துகளைத் துல்லியமாக அடையாளப்படுத்தி ஒலிக்கப் பயன்படுபவை 'சாரியை'கள் என்றும், அவை கரம், காரம், கான் எனப் போல்வன என்றும் தொல்காப்பியம் (நூ.135) கூறுகிறது.

மகர மெய்யெழுத்தை (ம்), 'கான்' என்ற 'சாரியை'யைப் பின்னோட்டாகச் சேர்த்துக் கொண்டு 'மஃகான்' என உச்சரிக்க வேண்டுகிறது தொல்காப்பியம் (நூ.28). இதுபோன்றே ஆனம், ஏனம், ஓனம் என்னும் சாரியைகளும் முற்காலத்தில் வழக்கிலிருந்துள்ளன.

அகரம் முதலான உயிரெழுத்துகளின் வரிசையில் 'ஓ' என்பதை 'ஓவன்னா' என்றும், 'ஒள' என்பதை 'ஒளவன்னா' என்றும் ஒலிக்கும் நாம், இறுதியாகவுள்ளஆய்த எழுத்தை (ஃ) 'அக்கன்னா' என்கிறோம். இதுபொருத்தமற்றது. ஏனெனில், ஆய்த எழுத்தை உச்சரிக்கும் போது, 'ஏனம்' என்ற சாரியையைப் பின்னோட்டாகச் சேர்த்து, அஃகேனம் (அஃகு + ஏனம்) என்றே ஒலிக்க வேண்டும் என்பதே இலக்கண மரபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்

பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளத்தில் 10-15% பிடித்தம்: தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!

SCROLL FOR NEXT