FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

கங்கை கொண்ட சோழீசுவரம்!

அரியலூர் மாவட்டத்தின் மறைந்த பொக்கிஷம்..

Updated On : 6 பிப்ரவரி 2026, 5:05 pm IST
சோழீசுவரம்
பகிர்:

"கங்கை கொண்ட சோழபுரம்' என்றதும் அரியலூரில் ராஜேந்திரசோழன் எழுப்பிய கோயில்தான் நினைவுக்கும் வரும். அதன் பழமைத் தன்மைக்கு இணையான மற்றொரு கோயில் கூழம்பந்தல் என்ற கிராமத்தில் உள்ளது, "கூழம்' என்பதற்கு "எள்', "திலம்', "கூழகம்' என்றும் "பந்தல்' என்பதற்கு "ஓடும் சாலை' என்றும் பொருளாகும்.

பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து, பிற்காலச் சோழர்களின் தலைநகரங்களாக விளங்கிய பழையாறு, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களுக்கு இவ்வூர் வழியே நெடுஞ்சாலை இருந்துள்ளது. இதன் இருமருங்கிலும் எள் பயிர் நிறைந்திருந்ததால், "கூழம்பந்தல்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

"கூழன்' என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிக்கிறது. பலா மரங்கள் நிறைந்த சாலைப்பகுதி இது என்பதால், "கூழன் பந்தல்' என்றும் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

"கங்கை கொண்ட சோழீசுவரம்', "விக்கிரம சோழபுரம்' என்பன இந்த ஊரின் பழமையான பெயர்களாகும். "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து காழியூர் கோட்டத்து பாகூர் நாட்டு கங்கை கொண்ட சோழபுரம்" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், கிருஷ்ண தேவராயர் ஆகிய மூவரின் கல்வெட்டுகள் இங்குள்ளன.

ஊரின் ஈசான்ய மூலையில் கோயில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, முழுவதும் கருங்கற்களால் அமைந்துள்ளது. தெற்கு, கிழக்கு திசைகளில் இரு வாயில்கள் அமைந்துள்ளன. கோயில் திரிதள விமானத்தைக் கொண்டு விளங்குகிறது. அக்காலத்தில் திருச்சுற்று இருந்துள்ளன. அர்த்த மண்டபம், முக மண்டபம் எழிலுடன் அமைந்துள்ளன. விமானத்தின் இரண்டாம் தளத்தில் கர்ணகூடு, சாலை அமைப்புகள் உள்ளன. மகாமண்டபத்துக்கு கூரையில்லாமல், வெறும் தூண்களுடன் மட்டுமே காணப்படுகின்றன.

கிழக்கு, தெற்கு வாயில்களில்துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். கருவறை, உபபீடம், அதிஷ்டானத்துடன் விளங்குகிறது.

சுவரின் மூன்று திசைகளிலும் மும்மூன்று கோஷ்டங்களில் தெற்கே பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, ஹரிஹரன் ஆகியோரும், மேற்கே விஷ்ணு, லிங்கோத்பவர், வடக்கே சுப்பிரமணியர், பிரம்மா ஆகியோரும், அர்த்தமண்டபத்தின் தெற்கே கணபதியும், வடக்கில் துர்க்கையும் காட்சி தருகின்றனர்.

கருவறையையில் பிரம்மாண்ட கோலத்தில் எழிலான உருவத்தில் கம்பீரமாக, மிடுக்கோடு சோழீசுவரர் அருள்காட்சி வழங்குகிறார். கருவறை விமானத்தில் அஷ்டதிக்கு, பாலகர்கள், அர்த்தநாரீஸ்வரக் கோலம் உள்ளிட்ட எண்ணற்ற சிற்பங்கள் சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்குகின்றன.

1012 முதல் 1044 வரை இந்தப் பகுதியை ஆட்சி செய்த முதலாம் ராஜேந்திர சோழன் பிரம்மதேசத்தில் மறைவுற்றார். இவருக்கு விக்கிரம சோழன் என்ற பெயரும் உண்டு. அதே பெயரில் "விக்கிரமசோழபுரம்' என்றும் "கூழம்பந்தல்' என்றும் அழைக்கப்பட்டது.

ராஜேந்திரசோழன் கங்கை வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவுடன் தென்னாடு திரும்பி அரியலூர் மாவட்டத்தில் "கங்கைகொண்ட சோழபுரம்' என்ற ஊரை உருவாக்கி அதையே தன் நாட்டின் தலைநகரமாகவும் அறிவித்தார். இதேபோல, ஆச்சார்யர் சர்வசிவ பண்டிதர் ஆணைப்படி, கற்றளியாக கூழம்பந்தலில் உருவாக்கப்பட்டதுதான் கங்கை கொண்ட சோழீசுவரம் என்ற இந்தக் கோயில். இங்கு பழம்பெரும் பேசும்பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயில் காஞ்சிபுரத்தில் இருந்து தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், செய்யாறில் இருந்து வடக்கே 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments