முகப்பு
வெள்ளிமணி

திருமணத் தடை அகல...

அருந்தவ நாச்சியார் உடனுறை குறள் மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

Updated On : 19 ஜூன் 2026, 1:24 pm IST
பகிர்:

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள் மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

12-ஆம் நூற்றாண்டில் மூலவர் பெயர் குறள்மணீஸ்வரர் என்றும், 1914-இல் சுந்தரேஸ்வரர் என்றும், இடைக்காலத்தில் சுந்தரேஸ்வர சுவாமி என்றும், 1941}க்குப் பிறகு சுவாமி சொக்கநாதர் என்றும், அம்பாள் மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டனர்.

ஒரு சமயம் மதுரைக்கு அருகே உள்ள மணலூரில் பாண்டிய மன்னனின் ராஜகுருவான பரஞ்சோதி தேசிகர் வாழ்ந்திருந்தார். அவர் மன்னனைச் சந்திக்க எண்ணி ஒரு மாலைப் பொழுதில் அரண்மனை பக்கம் வந்தார். அந்தச் சமயம் பார்த்து அரண்மனை உப்பரிகையில் மகா ராணியிடம் மன்னன் மகிழ்ச்சியோடு பேசி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

சற்று நேரம் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்த ராஜகுரு கோபத்துடன் தன் ஆசிரமம் திரும்பினார். இந்த நிகழ்வை தாமதமாக அறிந்து கொண்டான் மன்னன். அசுர வேகத்தில் மணலூர் விரைந்தான். மகரிஷியைக் கண்டு மன்னித்தருள வேண்டி நின்றான். ஆசாரியரின் தண்டனை பரிகாரமாக மாறியது.

அதன்படி, ஞானிகள் தங்கியிருக்கும் வில்வ வனத்தில் அரனுக்குக் கோயில் கட்டிடுமாறு அரசனைப் பணித்தார் குரு. அவ்வண்ணமே, மதுரைக்கு தெற்கே பசுஞ்சோலையாய் வில்வமரங்கள் செழித்திருந்த குளிர்ச்சியான இடத்தைக் கண்டறிந்தான். விரைவில் ஈசனுக்கு பாண்டியர் கலைப் பாணியில் கற்றளியாக அங்கே கோயில் உருவானது.

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனை தொடர்ந்து முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியன், அருளாள அழகப் பெருமாள், ராமநாதபுர சமஸ்தான சேதுபதிகள், இலுப்பையூர் கிழவன் சேகல்சேவகத் தேவன் ஆகியோர் உள்பட பலரும் இக்கோயில் வளர்ச்சியில் பெரிதும் பங்கேற்று ஏராளமான தானங்களை தந்துள்ளனர்.

நாலாபுறமும் உயர்ந்த திருமதிலும், பிரதான வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளன. கருவறையில் சொக்கநாதர் லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். சுவாமிக்கு வலப்புறத்தில் தனி சந்நிதியில் அம்பாள் மீனாட்சி அருள்பாலிக்கிறார்.

திருமணத் தடை அகல, குழந்தை பாக்யம் கிட்ட, தொழில் அபிவிருத்தியடைய உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சுவாமி சந்நிதியில் யாகம் வளர்த்து பரிகார பூஜை நடத்தப்படுகிறது. அதனால் நல்ல பலன் கிடைக்கிறதாம்.

துர்கை சந்நிதியில் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால வேளையில் பக்திப் பாடல்கள் பாராயணம், சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. மாதம்தோறும் பன்னிரு திருமுறை மன்றத்தாரால் திருவாசக முற்றோதல், உழவாரப் பணி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நாயன்மார் குருபூஜை விமர்சையாக நடைபெறுகிறது.

கார்த்திகை நட்சத்திரம் தோறும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் அருள்மிகு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் உள்சுற்றில் வலம் வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது. உபயதாரர்கள் வெள்ளித்தேர் இழுக்கும் நிகழ்வு மற்றும் துலாபார காணிக்கையும் நடைபெறுகிறது.

தலவிருட்சம் வில்வம். ஆண்டு முழுவதும் அநேக விழாக்கள் இங்கு நடைபெற்றாலும், ஆனி பிரம்மோற்சவமே உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் குடும்பத்தோடு கலந்து மகிழும் பெரு விழாவாகும். அதுசமயம் மாம்பழக் கடைகள் ஏராளமாக இங்கு அமைக்கப்படுவதால் சுற்றுவட்டாரக் கிராமத்தினர் இதை "மாம்பழத் திருவிழா' என்றே சொல்வது வழக்கம். தெப்பக்

குளம் சூர்ய புஷ்கரணி என அழைக்கப்படுகிறது.

ஆனி பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு மண்டகப்படிக்கு சுவாமி மாலையில் கிளம்பிச் சென்று, அதிகாலை கோயிலுக்குத் திரும்புவது வழக்கம். பத்தாம் திருநாளான ஜூன் 27 (சனிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம், திருக்கல்யாண நிகழ்ச்சி மாலையில் நடைபெறும். இரவு அம்பாள் பூப்பல்லக்கில் திருவீதி எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

விழாவின் முக்கிய வைபவங்களுள் ஒன்றான திருத்தேரோட்டம் பதினொன்றாம் திருநாளான ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் நடைபெறும்.

தேரோட்டத்தை முன்னிட்டு பொருள்காட்சி கண்கவர் வண்ணம் கோயில் வளாகத்தில் நடைபெறும். ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து இனிப்பு பதார்த்தங்களை எடுத்து வந்து சுற்றத்தாரோடு கோயில் வளாகத்தில் அமர்ந்து உண்டு செல்வது வழக்கம்.

தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்}சாயல்குடி நெடுஞ்சாலையில் 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

- வெ. கணேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments