ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், பெருங்குளம் கிராமத்தில் 1872-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி அனந்தராமையர்-ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மாதவையா. தமது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையிலும், திருநெல்வேலி இந்து கலாசாலையிலும் முடித்தார்.
கல்லூரிப் படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தொடர்ந்த அவர், அங்கு கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் இதழில் ஆங்கிலத்தில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். பெருங்குளம் அப்பாவையர் மாதவையர், பி.ஏ. என்பதன் சுருக்கமாக 'பம்பா' என்கிற புனைபெயரை ஆங்கிலத்தில் பயன்படுத்தினார்.
தமது நண்பர் சி.வி.சுவாமிநாதையர் 1892-ஆம் ஆண்டு தொடங்கிய 'விவேக சிந்தாமணி' இதழில் 'சாவித்திரியின் கதை' என்ற தொடரை, 'சாவித்திரி' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். இருமாதங்களுக்கு ஒருமுறை என ஆறு அத்தியாயங்கள் மட்டுமே வெளிவந்த இத்தொடர் கடுமையான விமர்சனங்களால் அதன் ஆசிரியரால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பி.ஏ. பட்டம் பெற்றதும், தான் பயின்ற சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1893-இல் எம்.ஏ. பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த போது, உப்பு சுங்க இலாகா நடத்திய தேர்வில் முதலிடம் பெற்று உப்பு ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.
பின்னர், 1898-இல் 'பத்மாவதி சரித்திரம்' என்ற நாவலை எழுதினார். தமிழின் முதல் மூன்று நாவல்களுள் ஒன்றாக இந்நூல் போற்றப்படுகிறது.
தமிழில் எழுதியதைப் போன்று ஆங்கிலத்தில், 'தில்லைக் கோவிந்தன்', 'கிளாரிந்தா', 'சத்தியானந்தன்' போன்ற நாவல்களை அவர் எழுதினார். ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஓதெல்லோ'வைத் தழுவி எழுதிய 'உதயலன்' எனும் நாடகத்தையும், 'பாரிஸ்டர் பஞ்சநாதன்', 'திருமலை சேதுபதி' ஆகிய நாடகங்களையும் அவர் எழுதினார்.
'குறள் நானூறு', 'பாலராமாயணம்', 'புது மாதிரிக் கல்யாணப் பாடல்', 'தேசிய கீதங்கள்', 'பொது தர்ம சங்கீத மஞ்சரி' முதலிய நூல்கள் அவர் இயற்றிய பாடல்களின் தொகுப்புகளாகும். 'சித்தார்த்தன்', 'தக்ஷிண சரித்திர வீரன்', 'பால விநோதக் கதைகள்', 'குஷிகர் குட்டிக் கதைகள்' முதலியவை அவர் எழுதிய சிறந்த கதை நூல்களாகும்.
1917-ஆம் ஆண்டில் அவரும் பல நண்பர்களும் சேர்ந்து சென்னையில் 'தமிழர் கல்விச் சங்கம்' என்ற அமைப்பு ஒன்றை நிறுவ முடிவு செய்தார்கள். அந்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை உயர்நீதிமன்ற நீதிபதி டி.சதாசிவையர் ஏற்றுக் கொண்டார்.
இச்சங்கத்தின் சார்பாக, 1917-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 'தமிழர் நேசன்' எனும் பத்திரிகை வெளிக்கொண்டு வரப்பட்டது.
அ.மாதவையா, ச.பவாநந்தம் பிள்ளை, எ.அரங்கசாமி ஐயங்கார் ஆகிய மூவரும் பத்திரிகை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பத்திரிகை தொடங்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு ஆறுமுறை வெளிவரும் இருமாதப் பத்திரிகையாக திகழ்ந்த இவ்விதழ், பிறகு மாதப் பத்திரிகையாக மாற்றப்பட்டது.
இதற்கிடையில், 1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழை தொடங்கினார். மாதவையா நினைத்த அளவுக்கு அந்தப் பத்திரிகைக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
1925-ஆம் ஆண்டு, அந்தப் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டின் இடையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக அக்டோபர் 22, 1925 அன்று மாதவையா தேர்வு செய்யப்பட்டார். அன்று அங்கு நடந்த கூட்டத்தில்,
தமிழைக் கட்டாயப் பாடமாகபி.ஏ. பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
நான் ஒரு மானுடன்; நான் மதியாதன மானுட வாழ்வில் இல்லை என்பதை மணிவாக்காகக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் ஒரு மானுடனாகவே வாழ்ந்து தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றி சென்றுள்ள அ.மாதவையா மறைந்து, வரும் அக்டோபர் 22-ஆம் தேதியுடன் நூறாண்டுகள் நிறைவடைகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.