கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகளாகிய மாந்தர் படைத்துக்கொண்ட மொழி தமிழ். உலகத்து மாந்தர் எல்லாம் தாம் எண்ணியதைக் கையினால் உரை செய்த காலத்தே நாவை அசைத்துப் பேச்சை அமைத்துக்கொண்டனர் தமிழர். தமிழர்தம் வாழ்வியல் இலக்கணத்தைத் தொல்காப்பியர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிந்து வைத்துள்ளார். ஒழுக்க நெறிப்பட்ட வாழ்வைத் திணை என்றும், அத்திணை அகம், புறம் என்றும் வகுத்தார் தொல்காப்பியர். மாந்தர் வாழும் நெறிகளுக்கெல்லாம் முதன்மையானவை நிலமும் பொழுதுமே. இதனை,
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
எனும் தொல்காப்பியத்தின் நான்காம் நூற்பாவால் அறியலாம்.
நிலத்தைக் 'காடுறை உலகம்', 'மைவரை உலகம்', 'தீம்புனல் உலகம்', 'பெருமணல் உலகம்' என முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லியது தொல்காப்பியம். நிலம், பொழுது இவற்றின் சுழற்சியால் கருவான தெய்வம், உணவு, பறவை, பூ, விலங்கு, தொழில் முதலானவற்றைக் கருப்பொருள் என்றும், நிலத்துக்குரிய ஒழுக்க உணர்வை உரிப்பொருள் என்றும் குறித்தனர் நம் முன்னோர். இத்தகைய வாழ்விலக்கணம் உலகில் உள்ள எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும் இல்லை.
உலகத்து உயிர்த்திரள் எல்லாம் உய்தி பெற வேண்டுமானால் விசும்பினின்று வீழும் நீர் வேண்டும். அது அருவி நீரானாலும், ஆற்று நீரானாலும், ஊற்று நீரானாலும், ஏன் உப்புக் கரிக்கும் கடல்நீரே ஆனாலும் உலகத்து உயிர்களுக்கு இன்றியமையாதனவே ஆகும்.
ஈரடிக் குறளால் உலகளந்த திருவள்ளுவர்,
நீரின்றி அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (திருக்குறள் 20) எனவும்,
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது. (திருக்குறள் 16)
எனவும் இயற்கை வழிப்பட்ட வாழ்வையே வான்சிறப்பு
அதிகாரத்தில் அடையாளப்படுத்தியுள்ளார்.
ஒழுக்க நெறிப்பட்ட வாழ்வைத் திணை என்றும், அஃது அல்லாத வாழ்வை அஃறிணை என்றும் வகைப்படுத்திய தொல்காப்பியர், இயற்கையில் பூத்த பூக்களையே திணைகளின் பெயராக்கிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று குறித்தார்.
தமிழக மன்னர்கள் சேரர்-பனம்பூ, சோழர்-ஆத்திப்பூ, பாண்டியர்-
வேப்பம்பூ அணிந்து போருக்குச் சென்றனர்.
ஒரு நாட்டுக்குக் காவலாக அரணாகத் தமிழர் இயற்கையையே ஆக்கிப் போற்றினர்.
மணீநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரசு. (திருக்குறள் 742)
எனப் பட்டியலிடுவார் திருவள்ளுவர். தெளிவான வற்றாத நீர், பரந்து விரிந்து கிடக்கும் மண், உயரிய மலை, நிழல்தரும் அழகிய மரங்கள் அடர்ந்திருக்கும் காடு, இவை எல்லாம் நாட்டுக்குக் காவலாய் அமைந்த உயிர் அரண் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.
இளங்கோ அடிகளும் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தைத்
''திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும்'' என இயற்கையைப் போற்றியே தொடங்குகிறார்.
தமிழர்தம் இலக்கியங்களின் பெயர்கள் - குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, நெடுநல்வாடை என்னும் நூல் பெயர்களின் தலைப்புகளே தலைப் புகழாய் அமைவதை எண்ணி வியக்கிறோம்.
பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னன் பாரியை முடியுடை மன்னர் மூவரும் முற்றுகை இட்டனர். முற்றுகை நீண்டதேயன்றிப் பாரியின் பறம்பு மலையை வெல்ல முடியவில்லை. ஏன்? பாரியின் பறம்பு மலை இயற்கையால் வளம் சுரக்கும் மலையே ஆகும் எனப் பதிகின்றார் புலவர் கபிலர்.
உழவர் உழாமலேயே பறம்பு நாட்டில் நால்வகை இயற்கைப் பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஓங்கி வளர்ந்து முற்றிய மூங்கில்கள் தரும் மூங்கில் அரிசி; இரண்டாவது - இனிய சுளைகள் உள்ள பலாப்பழங்கள் தரும் மரங்கள்; மூன்றாவதாக வள்ளிக் கொடிகளில் முற்றித் தொங்கும் வள்ளிக் கிழங்குகள்; நான்காவதாக குரங்குக் கூட்டங்கள் பாறைக்குப் பாறை தாவுதலால் தேன் கூடுகள் சிதைந்து மலைத் தேன் ஒழுகும்; அவன் மலை வானாளவியது; வானத்து விண்மீன்களைப் போன்றது அந்த மலையின் சுனைகள் என்கிறார் குறிஞ்சி பாடும் புலவர் கபிலர்.
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே;
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,
மீன் கண் அற்று, அதன் சுனையே;
(கபிலர் பாடல் - புறம்-109)
உலக்கைப் பாட்டு என்னும் வள்ளைப்பாட்டிலும் இயற்கை உவமைகள் தோழி தலைவி உரையாடலால் வெளிப்படுகின்றன. விரைந்து மணம் முடிப்பேன் என்று சென்ற தலைவன் வரவில்லை அவன் பொய்யன். ஆனாலும், அவன் மலையில் அருவி கொட்டுகிறதே; அவன் மலையில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளனவே என்று தலைவி தலைவனைப் பழித்து வேதனைப்படுகிறாள். குன்ற
நாடன் அவன் அவனிடம் பொய் தோன்றாது; அவ்வாறு பொய் தோன்றினால் குளிர் வெண்ணிலவில் தீத்தோன்றியது போலாகும்; குளிர்ப் பொய்கையில் பூத்த குவளை மலர்கள், வெந்து வீழ்வது போலாகும், சூரியச் சுடரில் இருள் தோன்றுவது போலாகும் என்று இயற்கை உவமைகளை அடுக்கித் தேற்றுகிறாள் தோழி.
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று... மலைநாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல்கயத்து
நீருள் குவளைவெந் தற்று...வெற்பன்
துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று.
(குறிஞ்சி - கலித்தொகை 41)
கார்காலம் வந்ததும் என் தேர் ஏறி வருவேன் என்ற தலைவன் குதிரை பூட்டிய தன்தேரை வேகமாக ஓட்டிக்கொண்டு தன் தலைவியைக் காண வேகவேகமாய் வருகிறான். தலைவியை அடைய இன்னும் சிலமணித்துளிகளே உள்ளன. தலைவியின் தோழியும் அதைப் பார்த்துவிட்டாள். ஆனால், தலைவன் தன் தேரை நிறுத்தி
விட்டு இறங்கினான். வழியில் ஆங்காங்கே தேன் உண்ணும் வண்டுகள் இணை இணையாகப் பூக்களில் அமர்ந்து தேனை உண்கின்றன. தன் தேர்மணிகளின் ஒலியால் அவை பிரியலாகுமே என்று எண்ணிய தலைவன், மணியுள் ஒலிஎழுப்பும் நாக்குகளைச் சேர்த்துக் கட்டிவிட்டு வருகிறான். பிரிந்த தலைவியைக் காணவந்த தலைவன் இணையோடு தேன்உண்ணும் வண்டுகள் பிரியலாகாது என்ற அருள் உள்ளம் இயற்கையோடு வாழ்ந்த எம்சங்க மூத்தோர்க்கு இருந்ததை எண்ணி எண்ணி வியக்கின்றோம்.
வள்ளல் பெருமான் இறைவனைக் கருவில் கலந்த துணை, கனிவில் கலந்த அமுது, கருத்தில் கலந்த களிப்பு, உருவில் கலந்த அழகு, உயிரில் கலந்த உறவு என அழைத்து, உலக உயிர்த்திரள் எல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கே வாய்த்த தருணம் இதுவென்றே வாயே பறையாய் அறைகின்றேன் என்கின்றார். இந்த விழைவின் அடிப்படை இயற்கை நலம் கொழிக்கும் வாழ்வு. அந்த வாழ்வை நோக்கி இவ்வுலகை நடத்திய நம்சங்க மூத்தோர் நெறிநோக்கி இவ்வுலகம் நடக்கட்டும்! சூழலியல் சிறக்கட்டும்!.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.