சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன. சிவனுக்குப் பார்வதியும் கங்கையும், திருமாலுக்குத் திருமடந்தையும் மண்மடந்தையும் மனைவியர் என்பர். இவர்களுக்குப் பிள்ளைகளும் உண்டு. கம்பர் திருமால்மீது திருமகள் கொண்ட கனிவினைக் காட்டும் வகையில் வாமனாவதாரத்தைப் பாடியுள்ளார்.
இராமகாதையில் இத்திருத்தோற்றம் வான்மீகத்தையொட்டியே அமைந்துள்ளது. விசுவாமித்திரன் சித்தாச்சிரமச் சிறப்பைக் கூறும்போது இராமனிடம் அதனைத் தெரிவிக்கிறான். திருமால், முனிவன் காசிபனுக்கும் அதிதிக்கும் குறளனாய்ப் பிறந்தான். மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று ஈரடியால் ஈருலகங்களையும் அளந்தான்.
மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்துக் கீழுலகில் இருத்தினான். விண்ணுலகை இந்திரனுக்கு ஈந்து திருபாற்கடலில் சென்று பள்ளிகொண்டான். இதற்குமேல் கம்பர் காடுமேடுகளை எல்லாம் அளந்த அப்பாதங்களின் வலிபோகத் திருமகள் தன் மென்மையான கைகளால் பிடித்துவிட்டாள்; அதனால் அவன் பாதங்கள் சிவந்துவிட்டன என்கிறார்..
'உரியது இந்திரற்கு இது' என்று உலகம் ஈந்து போய்
விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான்
கரியவன், உலகுஎலாம் கடந்த தாளிணை
திருமகள் கரம்தொடச் சிவந்து காட்டிற்றே!
திருமகள் பாதங்களை வருடிய செய்தி முதல்நூலில் இல்லை. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் திருவழுந்தூர் ஆமருவியப்பனைப் பாடும்போது, 'திருமகளும் மண்மகளும் திருவடிகளை வருடப் பாற்கடலில் பாம்புப்படுக்கையில் துயின்ற மாயோன்' என்கிறார் அவனுடைய அடிகள் சிவந்தன என்று கூறவில்லை.
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்
திருவடியின் இணைவருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம்கடலுள் அநந்தன் என்னும்
வரிஅரவின் அணைதுயின்ற மாயோன் காண்மின்
என்கிறார். கம்பர் திருமாலின் அடிகள் சிவந்தன என்று பாடுவதற்கு அடி எது?
திருநாவுக்கரசர் 'சிந்திப் பரியன' (ஐயாறு) 'மன்னு மலைமகள்' (இன்னம்பர்); 'அரவணையான்' (அதிகை வீரட்டானம்) 'மாணிக் குயிர்பெற' (மாற்பேறு) ஆகிய நான்கு பதிகங்களில் சிவபெருமானுடைய திருவடிகளின் சிறப்பை எல்லாப் பாடல்களிலும் பலபடியாகப் போற்றுகிறார். அவற்றுள் இன்னம்பர்த் திருவிருத்தத்தில்,
'மன்னு மலைமகள் கையால் வருடின...
இன்னம்பரான்தன் இணையடியே'
என்கிறார்.
ஐயாற்றுத் திருவிருத்தத்தில்,
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை
சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி அணியார் வளைக்கரம்
கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்
வண்காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன்
அடித்தலமே.
என்று உமாதேவி பாதங்களைத் தொட்டு வணங்கும் போதும், வருடும்போதும் காந்தள் மலரால் வருந்தும் தாமரை மலர் போன்று அத்திருவடிகள் இருக்கின்றன என்கிறார். இதில் உமாதேவி வருடுவதால் பெருமான் திருவடிகள் வருந்துவது கூறப்பட்டுள்ளது.
அடுத்துத் திருமாற்பேறு குறித்து,
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன;
காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன;
கோலம் மல்கு
செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்
கரத்தால்
வருடச் சிவந்தன மாற்பேறு உடையான் மலரடியே.
என்று பாடியுள்ளார். இதில் திருமாற்பேறு உடையான் மலரடிகள் கருட வாகனனாகிய திருமாலால் காண்பதற்கு அரியன என்றும், அன்போடு வணங்கினால் அறியாமை நிறைந்தவர்களுக்கும் முன்னே தோன்றிக் காட்சியளிப்பன என்றும், வாகைமலரைச் (சிரீஷ புஷ்பம்) சூடியுள்ள உமாதேவி தன் கமலம் போன்ற கைகளால் வருடுவதால் அவன் திருவடிகள் சிவந்து விட்டன என்றும் கூறுகிறார். இதனால், அப்பரடிகளே இறைவன் திருவடிகளை அவன் தேவி வருட அவை சிவந்தன என்று பாடியுள்ளார் என்பது தேற்றம்.
கம்பர் தேவாரப் பயிற்சியுடையவர். வான்மீகி ராமாயணத்தில் வாலியும் இராவணனும் சிவபக்தர்களாகக் காட்டப்படவில்லை. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குரங்காடுதுறைப் பதிகத்தில் 'வாலியார் வழிபட மன்னு கோயில்' என்று வருவது கொண்டும் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பதிகந்தோறும் இராவணன் கயிலை எடுக்க முயன்று கையை எடுக்க முடியாமல் சிவனை இசையால் மகிழ்வித்து நாளும் வாளும் பெற்றான் என்று பாடுவது கொண்டும் அவ்விருவரையும் சிவனை வழிபட்டவர்களாகக் காட்டியுள்ளார். மேலும்,
தலைசுமந்து இருகை நாற்றித்
தரணிக்கே பொறைய தாகி (திருக்கோவலூர் வீரட்டம்) என்னும் அப்பர் தேவாரத் தொடர்
தூது சென்ற அங்கதனிடம் இராவணன்,
தாதையைக் கொன்றான் பின்னே
தலைசுமந்து இருகை நாற்றி
பேதையன் என்ன வாழ்ந்தாய்
என்பதோர் பிழையும் தீர்ந்தாய்
என்று பேசும் பேச்சில் இடம்பெற்றுள்ளது.
'பஞ்சின் மெல்லடிப் பாவை' (திருமறைக்காடு) 'பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கன்' (திருவாவடுதுறை) என்று வருவனவற்றை யொட்டியதாய்,
பஞ்சின்மெல் லடியாள் பங்கன்
பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியாச் செங்கை
ஆணையாய்!
என்னும் அங்கதன் வாலியைக் குறித்துப் புலம்பும் புலம்பல் அமைந்துள்ளது. இதனால் கம்பர், 'திருமகள் தீண்டப் பாற்கடலில் உறை பரமன் திருவடிகள் சிவந்தன 'என்று பாடுவதற்கு அவரது தேவாரப் பயிற்சியே அடியாய் அமைந்தது எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.