ரா. பரத்குமார்
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய பூச்சியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமே கொசுவாகும். இந்தக் கொசுக்களின் ஆண் இனம் தாவரங்களின் சாற்றைக் குடிக்கும்; பெண் இனம் உயிரினங்களின் குருதியைக் குடிக்கும்.
இந்தப் பூச்சியினம் தோன்றிய காலத்தில் பறக்கின்ற, ரத்தம் குடிக்கிற திறனுடன் இருந்திருக்காது என்றும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தாவிச்செல்லும் ஒட்டுண்ணிவகைப் பூச்சியாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகில் தற்போது 3,500 வகையான கொசுக்கள் இருப்பதாகவும் ஆண்டுக்கு சுமார் 7,00,000 பேர் கொசுக்கடியால் உயிரிழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கொசுக்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுவரை தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் உடற்சூடு, வியர்வை, அவை சுவாசிப்பின்போது வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றை மோப்பம்பிடித்துத் தேடிச்சென்று கடிக்குமாம்.
கொசு என்னும் சொல் தமிழ் இலக்கணப்படி முற்றியலுகரச் சொல்லாகும். அதாவது தனிக்குறிலைத் தொடர்ந்து சகர உகரம் ('சு' என்னும் எழுத்து) இடம்பெற்றுச் சொல்லாவது முற்றியலுகரம் (கொ+சு).
இவ்வாறு தனிக்குறிலைத் தொடர்ந்து சகர உகரம் (சு) பழந்தமிழில் இருசொற்களில் மட்டுமே பயின்றுவந்துள்ளது. இதை தொல்காப்பியர்,
'உச்ச காரம் இருமொழிக் குரித்தே' (எழுத்து 75)
என்ற நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உரையாசிரியர்கள் உசு (புழு வகை), முசு (குரங்கு வகை) என்ற இருசொற்களை எடுத்துக்காட்டுக்களாகத் தருவர். தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலில் உரையெழுதிய இளம்பூரணர் இந்நூற்பாவுக்கு உரையெழுதுகையில் 'பசு' என்னும் சொல் ஆரியம் கலந்த சொல் என்று எடுத்துரைத்துள்ளார்.
திசு என்னும் சொல் தற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியின் விளைவால் உருவான கலைச்சொல். இவற்றைப்போல் கொசு என்பதும் முற்றியலுகரச் சொல்தானே எனில், தொல்காப்பியர் காலத்தில் கொசு என்னும் உயிரினமே இல்லையா?
கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கொசுவைக் குறிக்க முறையே சொள்ளை, தோமா, கொதுகு ஆகிய சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.
இச்சொற்களைத் தொல்காப்பியர் குறிப்பிட்ட இலக்கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கொசு என்னும் உயிரினம் பரிணாம வளர்ச்சியடையாத பூச்சியினமாக இருந்திருக்க வேண்டும்.
பழந்தமிழ் இலக்கியத்தில் பயின்றுவந்துள்ள 'நுளம்பு' (குறுந்.86:5) என்னும் சொல் பழங்காலத்தில் பரிணாம வளர்ச்சியடையாத கொசுவாகிய பூச்சியினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
வெண்கொற்றனார் பாடிய குறிஞ்சித் திணைப் பாடலில் தலைவி தனது தனிமைத் துயரைத் தன் தோழியிடம் கூறும்போது நுளம்பு என்னும் உயிரினத்தின் செயல்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிந்துசென்றுள்ளான் தலைவன். அதைத் தலைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவளுக்குத் தூக்கமும் வரவில்லை. தன்னுடன் இருக்கும் தோழியிடம் தலைவனது பிரிவு குறித்து கூறி புலம்புகிறாள். தலைவியின் வீட்டுக்கு அருகில் எருது கட்டப்பட்டிருக்கிறது. அதன் முகத்தில் நுளம்பு ஒன்று வந்து அமர்கிறது. அதன் தொந்தரவு தாங்காத எருது தலையை ஆட்டுகிறது.
'சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறரும் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆனுளம்பு புலம்பு தொறுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே' (குறுந்.86)
இப்பாடலில் தலைவியின் தனிமைத்துயரின் மிகுதியைக் குறிப்பிடவந்த புலவர் அம்மிகுதிக்குக் காரணமான மணியோசையை மட்டும் குறிப்பிடாமல் மணியோசைக்குக் காரணமான நுளம்பையும் குறிப்பிட்டுள்ளார்.
பழந்தமிழ் இலக்கியங்களுள் வெண்கொற்றனார் பாடிய பாடலாக இந்த ஒரு பாடல் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்த ஒரு பாடலில் மட்டுமே 'நுளம்பு' என்னும் சொல் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.
தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்கள் கொசுவைச் 'சுள்ளான்' என்றும் 'சூளான்' (கன்னடத்தையொட்டி) என்றும் குறிப்பிடுகின்றனர். இன்றும் இலங்கைத் தமிழர்கள் கொசுவைக் குறிக்கப் பழந்தமிழ்ச் சொல்லாகிய 'நுளம்பு' என்பதையே பயன்படுத்தி வருகின்றனர். இத்தோடு அறிவியல் ஆய்வுகள் கூறும் கருத்துகளை ஒப்புநோக்கினால், பழங்காலத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த கொசு (இன்றைக்கு இருக்கும் கொசு) இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.