FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

பகிர்:

முனைவர் சொ. ஏழுமலை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள். அதை புற இலக்கியங்களில் இடம்பெறும் 'செவியறிவுறூஉ' என்ற துறையால் அறிந்து கொள்ளலாம். அதே போல, அக இலக்கியங்கள் படைத்த புலவர்களும் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள். அக இலக்கியங்களில் 'செலவு அழுங்குவித்தல்' என்றொரு துறை உண்டு. தலைவன் தலைவியை நீங்கிப் பொருள் திரட்டவும், படை நடத்தவும், நாடு காக்கவும் பிரிதலுக்குத் தள்ளப்படுகிறான். இந்த நிலையில், தோழியானவள்

தலைவியின் பல்வேறு நிலைகளை எடுத்துரைத்துத் தலைவன் பிரிந்து செல்வதைத் தவிர்க்கச் செய்கிறாள். இதையே 'செலவு அழுங்குவித்தல்' என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மூன்று காரணங்களுக்காக நடைபெறும் பிரிவில் பொருள் வயின் பிரிவு தவிர மற்றவை மன்னனால் பிரியக் கூடிய பிரிவுகளாகும். பொருள் வயின் பிரிவைத் தோழி எளிதாகத் தடுத்து விடலாம். ஆனால், மன்னன் பொருட்டுப் பிரியும் பிரிவைத் தடுப்பது அரச குற்றம் அல்லவா?

பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோ, ஒரு தலைவன் செல்லுதலை அழுங்குவிக்க முடியாமல் நாடு காவல் பிரிவை மேற்கொண்ட இடத்து இரவு நேரத்தில் தலைவியை நினைத்துப் புலம்புவதையும் (கலி.26), இன்னொரு தலைவன் நாடு காவலையும் துறந்து தலைவிக்காக இல்லறத்திலே தங்கிவிடுவதையும் (கலி.17)' காட்டுகிறார்.

இவரே, ஒரு தலைவன் போருக்காகப் பிரிய இருந்தவிடத்துச் செலவு அழுங்குவித்த கூற்று நிகழ்ந்தவிடத்தும் அரசனுடன் புறப்பட்டுப் போருக்காகச் சென்றதையும் பின்னர் அவனை நினைத்துத் தலைவி புலம்புவதையும் காட்டுகிறார்(கலி.31, 32). இவ்வாறே அகநானூற்றில் 164, 174, 214, 304 ஆகிய பாடல்களில் போர்ப் பிரிவு மேற்கொண்ட தலைவன் பாசறைக்கண் தலைவியை நினைத்துப் புலம்புவதை புலவர்கள் காட்டுகின்றனர்.

அரசனை மையமிட்ட/அரசனே கடவுள் என்று போற்றப்பட்ட அன்றைய சமூகத்தில் அரச கட்டளையை மீறினால் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டிருக்காதா? இதை அறியாமல் தலைவியும் தோழியும் தலைவனைத் தடுத்து நிறுத்துவதாகப் புலவர்கள் ஏன் பாடல் புனைந்தார்கள்?, தலைவன் அரச கட்டளையை மீறித் தலைவியுடன் இருப்பதாக எப்படிப் பாடினர்? குறிப்பாக, பெருங்கடுங்கோவின் இருவயப்பட்ட நிலையின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளை எழுகின்றன.

தமிழருடைய போர்ப் பண்பாட்டு அறங்களில் பசு, பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையர், ஈமக்கடனுக்கான பொன் போன்ற பிள்ளைகளைப் பெறாதவர் ஆகியோரைக் கொல்வதில்லை(புறம்.9). தன்னுடைய மகனால் உயிர் துறக்க இருந்த கோப்பெருஞ்சோழன், நண்பன் பொத்தியார் உடன் வந்தபோது 'புகழ்மிக்க புதல்வனைப் பெற்ற பிறகு நீ உயிர்துறக்க வா. உனக்காக ஓர் இடத்தை வைத்திருக்கிறேன்' என்று பிள்ளைப் பேற்றினைக் காரணம் காட்டி திருப்பி அனுப்பினார் (புறம்.222). இவ்விரு புலவர்களும் பிள்ளைப் பேறு இல்லாதவர்க்கு அரசர் பொருட்டு உயிர் நீக்குவதில் இருந்து விதிவிலக்கு கொடுத்ததைக் காட்டுகின்றனர்.

குழந்தைப் பெற்றவர்களே போருக்குச் சென்றதை நற்றிணையில்,

இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய...

காதல் கெழுமிய நலத்தள் ஏதில்

புதல்வற் காட்டிப் பொய்க்கும்

திதலை அல்குல் தேமொழி யாட்கே (161)

பூங்கட் புதல்வன் தூங்குவயின் ஒல்கி

வந்தீக, எந்தை! என்னும்

அம்தீம் கிளவி கேட்க நாமே! (221:11}13)

வங்க வரிப்பறைச் சிறுபாடு முணையின்

செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்...

அலையா, உலவை ஓச்சி சிலகினையாக்

குன்றக் குறவனோடு குறுதொடி பயிற்றும்

துணைநன்கு உடையள்...

துணைஇலேம் தமியேம் பாசறை யேமே (341)

ஆகிய தலைவன் கூற்றாக அமைந்த பாடல்

களில் காணமுடிகிறது.

இந்தப் பாடல்களில் தலைவிக்குத் துணையாகத் தன்மகன் இருப்பதை நினைத்துத் தலைவன் ஒருவாற்றான் ஆறுதல் அடைவதையும் புலவர் பெருமக்கள் முன்வைக்கின்றனர். இவ்வாறே ஐங்குறுநூறு 442, அகநானூறு 44, 54, 64, 94, 104, 184 (பெரும்பாலான முல்லைப் பாடல்கள்), புறநானூறு 273 ஆகிய பாடல்களும் அமைவதைப் பார்க்க முடிகிறது.

முன்னோர்க் கடனுக்காகப் பிள்ளைப் பேறு அடைந்த அரசனை கபிலர் பதிற்றுப்பத்தில் (70(21), 74(21)) வாழ்த்தி மகிழ்கிறார்.

இதன் பின்னணியில் அரசனுக்கு எதிரான செலவு அழுங்குவித்தலை நோக்கினால் புதியதாகத் திருமணம் செய்து பிள்ளைப் பேற்றை நோக்கி இருப்பவர்களுக்கும் போர் தொடர்பான வேலையில் இருந்து விதிவிலக்குத் தரவேண்டும் என்ற முழக்கத்தை அரசனுக்குச் சுட்டிக்காட்ட முனைந்தனர் எனலாம்.

இதற்காகத் தலைவன் தலைவி புதிதானவர்கள் என்பதை புலவர் பெருமக்கள் 'புதிது உண்ணும் பருவத்து' கலி.26), 'வண்டொடு புலம்பு தீர்த்து எவ்வாயும் இருந்தும்பி' (கலி.30) என்பதாக பல இடங்களில் பதிவு செய்து காட்டுகின்றனர்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே...

நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம்.312)

என்றவிடத்துத் தலைவியின் கடமையையும் அரசனின் கடமையையும் நினைக்கச் செய்து செலவு அழுங்குவித்தல் மூலம் மகப்பேறு தேவை காட்டப்படுகிறது. இந்தப் பெண்குரலே மற்றோர் இடத்தில் போர்க்களத்தில் வீர மரணம் எய்திய மகனைக் கண்டு ஆனந்தப்படும் (புறம்.19) மூதின் மங்கைக் குரலாகவும் வெளிப்படுகிறது.

மேற்கண்ட சான்றுகள் வழி செலவு அழுங்குவித்தல் அரசனுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தாலும், அதனால் புலவர் அரசனுக்குச் சில செய்திகளைச் செவியறிவுறுத்த விரும்புகிறார் என்பதைக் கொண்டு வரலாம்.

அரசனிடத்து நேரிடையாக முன்வைக்க முடியாத செய்திகளைப் பாத்திரங்கள் வழி, 'செவியறிவுறுத்தி உணர்த்தி இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments