முகப்பு
வெள்ளிமணி

தென் திருக்காளத்தி பஞ்சனேஸ்வரர்

   விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோழங்குணம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பஞ்சனேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், கிராமத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது. போர்க

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:43 PM
பகிர்:

   விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோழங்குணம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பஞ்சனேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், கிராமத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது. போர்க் காலத்தில் இங்குள்ள குன்றுகளில் சோழர்கள் தங்கி இருந்ததாகவும், அதனால் இப்பகுதிக்கு "சோழர் குன்று' எனப் பெயர் வந்து, பின்னர் "சோழங்குணம்' என அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

  இந்தக் கோயில், செஞ்சியில் இருந்து பென்னகர் செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் அழகிய சிவலிங்க வடிவில் அற்புதக் காட்சி தருகிறார் பரமேஸ்வரன். இக்கோயிலை "தென் திருக்காளத்தீஸ்வரர் கோயில்' எனவும் அழைக்கின்றனர்.

  ஒரு காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கிராமமே அழியும் நிலையிலிருந்ததாம். அப்போது வெள்ளத்திலிருந்து மக்களைத் தப்ப வைத்து, அவர்களைப் பஞ்சம், பசி, பட்டினியிலிருந்தும் பஞ்சனேஸ்வரர் காப்பாற்றியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

  இக்கோயிலில் உள்ள பஞ்சனேஸ்வரருக்கு இடப்பக்கத்தில் ஞானபிரகாசாம்பாள் (என்ற) ஞானாம்பிகையும், வெளிப்புறத்தில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகின்றனர். அழகிய உருவில் நந்திகேஸ்வரர், சிவனைப் பார்த்தவாறு காட்சி தருகிறார்.

  இக்கோயில் தற்போது நிதி வசதியின்றி உள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், இக்கோயிலுக்கு அறங்காவலராக இருந்து பூஜைகள் செய்து வருகிறார்.

  இக்கோயிலை வலம் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவோருக்கு அரன்-அம்பிகையின் அருளால் சகல கஷ்டங்களும், பூர்வ பாவங்களும் நீங்குவதாகக் கூறுகின்றனர்.

  இக்கோயிலுக்கு சுற்றுச் சுவர் இல்லாமல் உள்ளது. மேலும் இங்குள்ள அம்மனுக்கு, முன் காலத்தில் தனியே சந்நிதி இருந்ததாம். அது இடிந்துவிட்டதால் தற்போது சிவனுக்கு இடப்புறத்தில் வைத்து அம்மனுக்குப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

  அம்மனுக்கு தனி சந்நிதி ஏற்படுத்தவும், இருக்கும் கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்திடவும் நிதி தேவைப்படுகிறது. இக்கோயிலுக்குச் சொத்துக்கள் இல்லை. தற்போது விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையினர், கிராமக்கோயில் திருப்பணிக்கான பொருளுதவி செய்து மேற்பார்வை செய்து வருகிறார்கள்.

  இடிபாடுகளாய் இருந்த இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை அளித்த ரூ.19 ஆயிரம் நிதியில் தற்போது ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. விவரங்களுக்கு "என். ராமநாதன், 9965431535' என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →